Sunday 3 December 2017

6.3 ஆற்றாமை

ஆற்றாமை

ஏழுவினும் வலிய மனத்தினேன்
மலஞ்சார் ஈயினம் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன் பொய்விழைந் துழல்வேன்
புன்மையேன் புலைத்தொழில் கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன்
மாண்பிலா வஞ்சக நெஞ்சகக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே


அடியேன் தூணை விட கடினமான வன்மையுடைய
மனம் கொண்டவன்! கூட்டமாக கூடி மலம் உண்ணும் ஈயை
விடவும் தனித்திருந்து மலம் உண்ணும் நாயை விடவும்
கேவலமானவன்!  புழுவை விட சிறியவன் அற்பன்! பொய்
பேசி பொய் வாழ்க்கை வாழ்பவன்! புல்லறிவாலன்!கொலை புலை
இயற்றும் புலையனை விட தரம் தாழ்ந்தவன்! எல்லா குற்றமும்
பஞ்சமா பாதகமும் செய்வதில் நான் தான் பெரியவன் ! அறிவில்லாத
முட்டாளும் நானே! நல்ல பண்பு இல்லாத மரியாதை தெரியாத வஞ்ச நெஞ்சமுடையவன் !

இப்படி பட்ட மகா கேவலமான யான், அற்புத அம்பலத்தில் நடமாடும் சிவத்தை அடைய அவர் அருள்பெற என்ன செய்ய வேண்டுமோ!? ஒரே வழி!
நம்கண்மணியில் நடனமிடும் சிவத்தை உணர்ந்து "சும்மா இரு" ந்தாலே போதும்!


Friday 24 November 2017

6.2 திருச்சிற்றம்பலத் தெய்வமணி மாலை



அகர நிலை விளங்கும் சத்தர்கள் அனைவருக்கும் அவர்பால்
அமர்ந்தசக்தி மாரவார்கள் அனைவருக்கும் அவரால்
பகரவரும் அண்டவகை யனைத்தினுக்கும் பிண்டப்
பகுதிகளங் கனைத்தினுக்கும் பாதங்களைத் தினுக்கும்
இகரமுறு முயிர்எவைக்கும் கருவிகளங் கெலைக்கும்
எப்பொருட்க்கும் அனுபவங்கள் எவைக்கும்முக்தி யெவைக்கும்
சிகர முதற் சித்தி வகை யெவைக்கும் ஒளி வழங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்

அ வாகிய வலது கண் ஞான சக்தி விளங்கும் சத்தர்கள்
மும்மூர்த்திகள் பஞ்ச மூர்த்திகள் மற்றும் அவர்கள் தேவிமார்கள்
அனைவருக்கும் இவர்களால் தோற்றுவைக்கப்பட்ட அண்டங்கள்
அனைத்துக்கும் அவற்றுள் பொருந்தி விளங்கும் பிண்டப்பகுதி
அனைத்துக்கும் , இந்திரன் முதலான தேவர்கள் உறையும் பதங்கள்
யாவற்றுக்கும், இம்மண்ணுலக உயிர் அனைத்திற்கும், இவைகளுக்கமைந்த
உடற்கருவிகள் அனைத்திற்கும் பொருள்வகை யாவற்றுக்கும், அவற்றால்
அனுபவிக்க படும் அனுபவங்கள் எல்லாவற்றுக்கும் முடிவில்
பெறக்கூடிய முக்திவகை யாவற்றுக்கும் ஒளியையும் பயனையும்
நல்குவது தில்லை சிற்றம்பலத்திலே  - தில்லை வெளியை கொண்ட
சின்ன அம்பலமான கண்களிலே ஒளியாக காட்சி தரும் சிவம்
- தெய்வம் ஒன்றே என்ற உண்மையை காணப்பீராக! கண்ணால்!
உணர்வீராக! 

Gnana Sarguru Sivaselvaraj
www.vallalyaar.com

Sunday 22 October 2017

6.1 பரசிவ வணக்கம் - ஆறாம் திருமுறை



எல்லாம் செயல்கூடும் என்னாணை யம்பலத்தே
எல்லாம்வல் லான்றனையே ஏத்து

எல்லாம் வல்லவன்! எங்கும் நிறைந்தவன்! இறைவன் ஒருவரே!
அவர் அம்பலத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்! நம் கண்களில்
மணியில் ஒளியாக, எல்லோரும் அறிய
அம்பலமாக , அந்த அம்பலத்தில்
ஆடிக்கொண்டிருக்கிறார்! அவரை பணிந்து, நினைந்து உணர்ந்து தவம்
செய்தால் ஒளியை கண்ணிலிருந்து உள்வழி அக்னிகலையை கூடிபின்
மேலேற்றினால் நமக்கு எல்லாம் செயல்கூடும்! என்மீது ஆணை என்று
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளியிருக்கிறார்.






ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Thursday 31 August 2017

55. நாடக விண்ணப்பம்

மடுக்கும் நீர்உடைப் பாழ்ங்கிண றதனுள்
வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம்
எடுக்கின் றோர்என இடையிற்கை விடுதல்
இரக்கமுள்ளளவர்க் கியல்பன்று கண்டீர்
தடுக்கி - லாதெனைச் சஞ்சல வாழ்வில்
தாழ்த்து லார் தோழும் ஒற்றியூர் உடையீர்
ஞான நாடகம் நவிற்றுகின் றீரே

பாழுங்கிணற்றில் வீழ்ந்த ஒருவனை காப்பாற்ற தூக்கி
பாதியில் கைவிட்டால் அது இரக்கமுடையவர் செயலாகுமா?
அதுபோல துன்பத்தில் அழுந்தி பரிதவிக்கும் என்னை மீண்டும்
மீண்டும் துன்பத்தில் ஆழ்த்துவது அழகாகுமோ! இறைவா இது
உன் கருணைக்கு தகுமோ? என்துன்பமெலாம் நீக்கி வினைமாற்றி
உன்னடி சேர அருள்புரி நடுக்கிலார் தொழும் ஒற்றியூர் உடையீர்!
இறைவனை தன் கண்மணியில் ஒளியாக கண்டு தொழும் அடியார்கள்
எதைக்கண்டும் நடுங்க மாட்டார்கள். எதற்கும் பயப்படமாட்டார்கள்,
அவர்கள்தான்  மெய்யடியார்கள்! "நாமார்க்கும் குடியல்லோம் நமனை
அஞ்சோம்"என நாவுக்கரசர் நாம் யாருக்கும் அடிமையில்லை
எமனைக் கண்டு பயமில்லை என உறுதியுடன் கூறுகிறார்!
"பணியோம் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே" என
அபிராமி அன்னையை பணிந்த நான் உலகில் வேறு எவரையும்
பணியமாட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறுகிறார்! பயம் கடுகளவேனும்
இல்லாதவனே ஞானி! ஞானிகளின் இயல்பே இதுதான்! நாம் ஞானம் பெற
நம்முள் இறைவன் ஆடும் நாடகம் வினைகள் தந்து நம்மை செம்மைப்படுத்துவதுதான்!
நம்மை செம்மைப்படுத்துவது தான்! நம்மை காத்தருள்வதுதான்! ஞான நாடகம் இது!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

56 கொடி விண்ணப்பம்


56 கொடி விண்ணப்பம்
மாலை ஒன்றுதோள் சுந்தர பெருமான்
மணத்தில் சென்றவன் வழக்கிட்ட தெனவே
ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம்
உவந்து தொண்டன்என் றுரைப்பிரேல் என்னை
வேலை ஒன்றல மிகப்பல எனினும்
வெறுப்பி லாதுளம் வியந்துசெய் குவன்காண்
சோலை ஒன்றுசீர் ஒற்றியூர் உடையீர்
தூய மால்விடைத் துவ சக்தி னீரே

இறைவா உன் வன் தொண்டனுக்காய் ஓலைகாட்டி வழக்கிட்டு
ஆட்க்கொண்டாயே அடியேனை உன் தொண்டனாக்கி பணியிட்டால்
எவ்வேலையும் உன் அருள் வலத்தால் உவப்புடன் பணிசெய்வேன்!
நந்தி கொடியுடைய சிவமே அருள்புரிக! ஒற்றியூர் உறையும் சிவம்
சிவந்தமேனியான்! பொன்னர் மேனியன்! அவன்தான் வாகனம் நந்தி
வெள்ளை நிறம்! அவன் இடப்பாக அம்மை சக்தி பச்சைநிறம்! நம்
தியானத்தில் இவ்வண்ண ஒளிக்காட்சிகளை காணலாம்!

இரண்டாம் திருமுறை 56 பதிகங்கள் பூரணம்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

54 திருவண்ண விண்ணப்பம்


கண்ணப்பா என்றருளும் காளத்தி அப்பாமுன்
வண்ணப்பால் வேண்டும் மதலையைப்பால் வாரிதியை
உண்ணப்பா என்றுரைத்த ஒற்றிஅப்பா வந்தருள
எண்ணப்பா என்றழும்இல் ஏழைமுகம் பாரோமோ

திண்ணப்பர்  கண்ணை அப்பியதால் சிவனால் கண்ணப்பா
என்றழைக்கபட்டார். "காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான்
காண்"என்று திருநாவுக்கரசர் கூறுகிறார். கண்ணப்பருக்கு அவர்
கண் ஒளி-சிவமே அருள்பாலித்து! இதுபோலவே மகாவிஷ்னு
சிவனை அர்ச்சிக்க மலர் இல்லாமல் 1000-வது மலராக தன் கண் மலரை
எடுத்து அர்ச்சித்தார் அல்லவா!? சிந்தியுங்கள்! புராணம் கூறுவது கதை மட்டுமல்ல!

பக்தி மட்டுமல்ல! ஞானமும் கூடத்தான்! நமக்கு நல்ல பாடந்தான்! பால்
வேண்டி அழுத உபமன்யு என்ற பாலனுக்கு திருப்பாற்கடலை கொடுத்து
அருந்தச்சொன்னாராம் சிவன்! சீர்காழியிலே அழுத பிள்ளை சம்பந்தனுக்கு
பால் கொடுத்து ஞான சம்பந்தர் ஆக்கியருளினார் சிவசக்தி, அருளியது யார்
ஒற்றியப்பர் - கண்மணியிலே ஒற்றியிருக்கும் ஜோதி! சீர்காழியிலே தோணியப்பர்  தோணிபோல உள்ள கண்ணில் உள்ள ஜோதி! கண்ணில் குடியிருக்கும் கடவுள் கருணையால் அழுதவர்க்கெல்லம் அழுது படைப்பான்! நாம் அழுதால் நமக்கு கிட்டும் அமுதம்! எனக்கும் அருள வேண்டும் இறைவா!

நச்சை மிடற்றணிந்த நாயகனே ஓர்பாகம்
பச்சை நிறம் கொண்ட பவளத்தனிமலையே - பாடல் 8

நச்சு ஆகிய மும்மலத்தை கண்டத்தில் கொண்ட கண்மணியே! மணியை
எண்ணி தவம் செய்தால் பச்சை நிற ஒளியும் பின் சிவப்பு நிற ஒளியும்
காணலாம். இது அனுபவ உண்மை! மலையே என்றது கண்மணியையே! 

ஞானசற்குரு சிவசெல்வராஜ்

Wednesday 30 August 2017

53 பொருள் விண்ணப்பம்

இரண்டாம் திருமுறை

உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம்
ஒன்று கோடியாய் சென்று சென்று உலைந்தே
கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன்
கலுழ் கின்றேன் செயக்கடவதொன் றறியேன்
இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே
இன்ப வெள்ளமே என்னுடை உயிரே
திலகமே திரு ஒற்றி எம் உறவே
செல்வமே பர சிவ பரம்பொருளே 

உலக வாழ்க்கையில் உழலும் என் மனமானது ஒரு கோடியாய்
மேலும் மேலும் குற்றங்களை செய்து வினைகளை சேர்த்துக்
கொள்கிறது! கடவுளே நான் என்ன செய்வேன். உன்னை நாடிடும்
அன்பர் உள்ளத்தில் ஒளிர்பவனே இன்ப வெள்ளமே! என் உயிரே
திலகம் போல் உள்ளே புள்ளி வடிவில் விளங்கும் ஜோதியே!
என்கண்மணியே எனக்கு உறவே என் செல்வமே பரசிவமான
பரம்பொருளே.

ஓது மாமறை உபநிடதத்தின் உச்சி மேவிய வச்சிரமணியே - பாடல் \

நான்கு வேதங்களிலும் அதன் விளக்கமாம் உபநிடதங்களிலும்
எல்லாவற்றிக்கும் மேலாக சொல்லபடுகின்ற வைரமணி போல்
ஒளி வீசி கொண்டிருப்பது நமது கண்மணி ஒளி ஒன்றைப்பற்றியே!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Tuesday 29 August 2017

52. காதல் விண்ணப்பம்



வஞ்சக வினைக்கோர் கொள்கலம் அணைய
மனத்தினேன் அனைத்தினும் கொடியேன்
தஞ்சம் என்றடைந்தே நின்திருக் கோயில்
சந்நிதி முன்னர் நிற்கின்றேன்
எஞ்சலில் அடங்காப் பாவி என் றெனைநீ
இகழ்ந்திடில் என்செய்வேன் சிவனே
கஞ்சன் மால் புகழும் ஒற்றியங்கரும்பே
கதிதரும் கருணையங் கடலே

வஞ்சவினையின் மொத்த உருவம். கொடிய மனம் படைத்தவன்
ஆயினும் இறைவா உன் அருள்வேண்டி உன் சந்நிதிக்கு வந்து
இறைஞ்சுகிறேன். பாவி என ஒதுக்கிடாதே! தேவர்கள் புகழும்
கண்மணி ஒளியானவனே கரும்-பு கண்மணியானவனே கருணைக்
கடலே அருள்புரிக!

கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே  கடவுளே
கருணையங் கடலே - பாடல் 4

கண்ணினுள் மணியே - ஒற்றியங்கனி. அதுவே ஒளி! அது
கருணைக்கடலாகும்! அதுவே கடவுள்! நமகண்மணி உள் கடந்து
நிற்கும் ஒளியே!

ஞால வாழ்வனைத்தும் கானல் நீர் - பாடல் 7

இந்த உலக வாழ்வு கானல் நீர் போன்றது! கானல் நீரை கண்டு ஏமாறும்
மான் போல் மனிதர்கள் மாயையால் உந்தப்பட்டு வினைவழி உலக வாழ்வே
இன்பமெனக் கருதி அலைந்து அலைந்து துன்புறுகின்றனர். திருவடியை உணர்வீர்! தப்பித்துக்கொள்க!

காலோடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக்கடவுளே கருணைஎங்கடவுளே
கால் - திருவடி! பூதம் ஐந்தும் சேர்ந்த திருவடி! ஒற்றிக்கடவுள் கண்மணி
ஒளியே அது! கருணை கடல் தான் இறைவன் நம் கண்மணி ஒளி!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

2.51. சிவானந்த பத்து


இச்சை உன்டெனக் குன்திரு மலர்த்தாள்
எய்தும் வண்ணம் இங்கென செயவல்லேன்
கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது
குதிப்பில் நின்றது மதிப்பின் இவ்வுலகில்
பிச்சை  உண்டெனிற் பிச்சரிற் சீறும்
பேயருண்மனை நாயென உழைத்தேன்
கெச்சை மேனி எம் திருவொற்றி அரசே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே

இறைவா உன்மலரடி - மெய்ப்பொருள் - கண்மணி ஒளியை
அடையவேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு! ஆனால் என் மனமோ
என்குறிப்பில் நிற்காது. அலைபாய்கிறதே! உலக இச்சையில் உழல்கிறதே!
பேயனே அலைந்தேன் நாயென திரிந்தேன். இப்படி இருந்தால் உன்மலரடி
எப்படி அடைவேன். தவத்தால் சிவந்த கண்களில் மணியில் ஒளிரும் 
ஒளியான இறைவா அமுதம் நல்கும் சிவமே ஒளியே அருள்க!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Monday 28 August 2017

2. 50. நெஞ்சோடு நேர்தல்

திருமுறை  2
50. நெஞ்சோடு நேர்தல்

அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
கடுத்த ஆடை என்றறிமட நெஞ்சே
கணிகொள் மாமணிக் கலன்கள் நம் கடவுள்
கண்ணுள் மாமணிக் கண்டிகை கண்டாய்
பிணி கொள் வன்பவம் நீக்கும்வெண் ணீறே
பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
திணி கொள் சங்கர சிவசிவ என்று
சென்று வாழ்த்தலே செய்தொழிலாமே

நாம் உடுக்க கோவணம் தந்தார் இறைவன்! அதுவே நமக்கு
உகந்த ஆடையாகும்! கோவணம் - கோ மணம் - கோ மனம்
நம்மில் கண்மணியில் கோவாகிய இறைவன் தலைவன்
இருக்கிறான் ஒளியாக! அவனிடம் மனதை வை என்பது தான்
பரிபாஷை. கண்மணியிலுள்ள இறைவன் கோவணம் போல
நம் மும்மலத்திரையை ஆடையாக உடையவன்! நம் கண்மணியிலுள்ள
அணிகலம் தான் இறைவனின் அணிகலன் தான் - பூண் போல
இருக்கும் நம் வினையாகிய விஷம்! அந்த பாவ வினைகளை நீக்க
நாம் தவம் செய்யும் போது ஊற்றெடுக்கும் வெண்மையான கண்ணீரே.
பூசும் வெண்ணீறாகும்! நமக்கு தொழில் இறைவன் புகழ் பாடுதலே
சதா காலமும் இறைவனை எண்ணி எண்ணி மனதை தூய்மை யாக
வைத்திருப்பதேயாகும்! நம் தொழில் சீவனை சிவமாக்குவது தான்!
அந்த சிவனே உடனிருந்து அருள்வான்!

சுகர் முதல் முனிவோர்உக்க அக்கணம் சிக்கெனதுறந்தார்!  - பாடல் 8
சுகப்பிரம்மம் என்னும் ஞானி பிறந்த உடனே ததுறவு பூண்டார். பிறவி
ஞானி! இன்னும் முனிவர் பலர் நினைத்த மாத்திரமே இறைவனை அடைய
தடையான உலகை துறந்தனர் . இன்றே இப்பொழுதே நாம் செய்ய வேண்டியதை
செய்ய வேண்டும்  நாளை நாளை என தள்ளிப் போடக்கூடாது? நாளை நமனின் நாள்!?
யாரிவார்! ஒன்றே செய்! நன்றே செய்! இன்றே செய்! இக்கணமே செய்!

தூயநெஞ்சமே சுகம் பெற வேண்டில்
சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
காய மாயமாம் கான்செறிந் துலவும்
கள்வர் ஐவரைக் கைவிடுத்தன் மேல்
பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
காய சோதிக்கண் டமருதல் அணியே!  பாடல் 10

நெஞ்சம் தூய்மையானால் சுகம் பெறலாம்! அதற்கு வழி
சொல்கிறோம்! நமது உடம்பில் ஐம்புலன்ளும் நம்மை மனம்
போனபடி வினைக்குதக்கபடி ஆட்டிவைக்கின்றனர்! அவர்களை
விட்டு அதற்க்கு மேலாக ஆணவம் கன்மம் மாயை என்னும்
மும்மலங்களாகிய திரையும் உள்ளது! இதுவே நமக்கு எதிரி! இவர்களை
வெல்ல இரவு பகல் அற்ற இடமான பரவெளியில் ஆகாயத்தில் - கண்மணி
நிற்கும் தலம் ஆகாயம்! அதில் கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவனை கண்டு உணர்ந்து நிலை நிற்றலே, ஒப்பற்ற தவமும் ஆகும்! இதுவே நாம் உய்யும் வழி! பேரின்பம் பெறும் வழி!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
WWW.VALLALYAAR.COM

Sunday 20 August 2017

49 இரங்கல் விண்ணப்பம்

திருஅருட்பா
இரண்டாம் திருமுறை


பற்றி நோக்கிய பாவியேன் தனக்குப்
பரிந்து நீஅருட் பதம்  அளித்திலையே
மற்று நோக்கிய வல்வினை அதனால்
வஞ்ச மாயையின் வாழக்கையின் மனத்தின்
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின்
அலைதந் திவ்வுலகம் படுபாட்டை
உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம்
ஒற்றி மேவிய உலகுடையோனே

நாம் திருவடியை பற்றி தவம் செய்வோமானால் இறைவன்
அருள்புரணமாக கிட்டும்! துன்பமின்றி வாழ்வாங்கு வாழலாம்!
அதெல்லாமல்,தவம் செய்யாமல், உலகியலின்பத்தில் மூழ்கி
திளைப்பவர் தத்தமது வினைப்பயனால் மனம் கேட்டு நோய்கள்
வந்து உடல் கெட்டு முதுமை வந்து சோர்ந்து சம்சாரசாகரத்தில்
உழன்று துன்புறுவர்! பிறர்படும் துயரங்களை அறிந்து வேதனைப்
பட்டார் வள்ளல்பெருமான்! ஐயோ இறைவனை அறியாது துன்புறுகிறார்களே 
என வருந்தினார்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Thursday 17 August 2017

48 சந்நிதி முறையீடு

திருவருட்பா - இரண்டாம்  திருமுறை

ஒற்றி மேவிய உத்தமனே மணித்
தெற்றி மேவிய தில்லைஅப் பாவிழி
நெற்றி மேவிய நின்மலனே உன்னைப்
பற்றி  மேவிய நெஞ்சம்உன் பாலதே

ஒற்றி - கண்ணில் - துலங்கிய இறைவனே! மணித்தொற்றி -
கனமணியில் உள்ள ஒளியே! தில்லை அம்பலவாணரே என்
தந்தையே! விழிநெற்றி - மூன்றாவது கண்ணை உடையவனே!
நின்மலனே - மலமற்றவன் இறைவன்! உன்னைப்பற்றி உன்னுடன்
உணர்வால் ஒன்றி கலந்த என் நெஞ்சம் நீயிருக்கும் இடமே!
உன்னுடையதே!

கல்ஆலின் ஈற்றுப் பொருள் அருள் ஆதியே - பாடல் 2
கல் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு
அருளிய உபதேசம் எனக்கு தருக ஆதிமுதல்வனே! உலகின்
முதல் குரு - தட்சிணாமூர்த்தி! கல் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து
சனகாதி முனிவர்க்கு ஞான உபதேசம் நல்கினார்! என்ன? எப்படி?
"இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டினார்" இதுவே ஞான உபதேசம்
வாய் பேசவில்லை! விழித்திருந்து,  மனமாகிய அசுரனை அந்த இறைவன்
இருக்கின்ற கண்மணியில் திருவடியில் ஒப்படைத்தால் - சரணடைந்தால்
மோட்சம் கிட்டும்! தவம் செய்வது இப்படித்தான்! கண்மணியில் உணர்வால்
நிற்பது - நிலைநின்றால் கண்மணியில் உணர்வை நிறுத்த உபதேசம் கொடுத்து தீட்சை கொடுப்பதே வள்ளலார், எமக்கிட்ட பணி! காலங்காலமாக எல்லா சித்தர்களும் ஞானிகளும் உபதேசித்த ஞானம் இது! " சும்மா இருக்கும்" தவம்!  அறியுங்கள்! உணருங்கள்!

சோதியே திருத்தோணி புரத்தானே - பாடல் 3
சோதியாகிக இறைவன் நம் கனமணியில் துலங்குகிறான்! திருத்தோணிபுரம் - என்பது திருவாகிய இறைவன், தோணி போல இருக்கும் கண்ணில் உள் புறம் இருப்பவன்! "தோணிபோல் காணுமடா காணுமடா அந்த வீடு என சித்தர் பாடல் கூறும் மெய்ப்பொருள்  இரகசியமும் இதுதான்! சீர்காழியிலே கோவில் கொண்டிருக்கும் இறைவனின் திருநாமம்
தோணியப்பர்! தோணிபோல் உள்ள கண்ணிலே அப்பியிருப்பவர் ஆதலால். கண்மணி ஒளி!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Wednesday 21 June 2017

47 ஆற்றா விண்ணப்பம்

அன்னையில் பெரிதும் இனிய என் அரசே
அம்பலத் தாடல் செய் அமுதே
பொன்னைஒத் தொளிரும் புரிசடை கனியே
போதமே ஒற்றிஎம் பொருளே
உன்னைவிட் டயலார் உறவு கொண் டடையேன்
உண்மைஎன் உள்ளம் நீ அறிவாய்
என்னைவிட் டிடல் நான் என் செய்வேன் ஓதிபோல்
இருக்கின்ற இவ்வெளி யேனே

பெற்ற தாயினும் பெரிய தயவுடைய தயாபரன் இறைவன்!
எவ்வுயிர்க்கும் தாயானவன் இறைவன்! நமக்கு உடல்
கொடுத்தவள் தாய்! அந்த உடலுக்கு உயிர் கொடுத்தவன்
எவ்வுயிர்க்கும் உயிரானவன் இறைவனே! அவர் எல்லோர் கண்ணிலும்
அம்பலமாக எல்லோரும் அறிய ஆடிக்கொண்டிருப்பவன் ஒளியாக! தவம்
செய்தால் அமுதம் தருபவன்! பொன் போன்று தக தகக்கும் மஞ்சளும்
சிவப்பும் கலந்த ஒளிப் பிழம்பு! சடை போன்று நீண்டு நம் உள்
ஓங்கி ஒளிர்பவன்! நம்மை கனிய வைக்கும் பக்குவமாக்கும் ஒளி!
போதம் எப்போதும் இருக்கச் செய்பவன்! உணர்வின் மூர்த்தி!
நம் கண்மணியில் ஒளியாக துளங்குபவன்! உன்னை விட்டு வேறு
எங்கும் போகேன்! என் உள்ளம் நீ அறிவாய்! காரணம், என் உள்ளத்தில்
ஒளியாக இருப்பவன் நீயன்றோ! உனக்கு தெரியாமல் எதுவும்
நடப்பதில்லையே! எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருப்பவன் நீயல்லவா!

என்னை விட்டிடில் நான் பிணமாவேனே! மரம்போல் உணர்வற்றிருக்கம் எனக்கு என்றும் உணர்வோடு இருக்க ! நீ என்னுடன் இருக்க அருள்வாயே!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Tuesday 20 June 2017

2.46 சிறுமை விண்ணப்பம்


இன்று நின்றவர் நாளைநின் றிலரே
என்செய் வோம்இதற் றுளம் பதைத்துச்
சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
நன்று நின்துணை நாடக மலர்த்தாள்
நண்ண என்று நீ நயந்தருள் வாயோ
பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே
போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே

அழிவே இல்லாத அருட்பெருஞ்ஜோதியான இறைவன்
கண்மணியில் துலங்குகிறான். உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவானவன். எவ்வுயிர்க்கும் தாய் அவன்! அவள் இருக்கிறவரை
- அவன் நம் உடலில் இருக்கும் வரை உடல் அழியாது. இறைவனாகிய ஒளி-உயிர் நம்மை விட்டு பிரிந்தால் இந்த உடல் அழிந்து விடும். உயிர்
அழிவதேயில்லை! இன்று இருப்பவர் நாளை இல்லையே! நேற்று இருந்தவர்
இன்று இல்லையே! நேற்று இருந்தவர் இன்று இல்லையே என்செய்வோம்
என ஏதுமறியாது உளம் கலங்கி வாடுகின்ற நாம் என்றும் நமக்கு துணை இறைவனின் மலரடி - கண்ணொளி என்பதை உணர்வோமாக! உணர்ந்து
தவம் செய்து இறையருளை பெறுவோமாக.

கந்தமும் மலரும் என நின்றாய் - பாடல் 6

மலரும் மணமும் போல இறைவன் சிவமும் சக்தியுமாக இருக்கிறான். விந்துவும் நாதமும் ஆக இருப்பவனே ஒலியும் ஒளியுமானவன்!

"நாத விந்து கலாதி நமோநம வேதமந்த்ர சொரூபா"
என அருணகிரியார் பாடலும் உரைப்பது இதுவே! நாத விந்துவான இறைவனே வேத மந்திர சொரூபமாக உள்ளவன் - ஒளியானவன் - கண்மணி ஒளியானவன்!

தத்து மத்திடைத்தயிரென வினையால் தளர்ந்து முப்பிணியில் தண்டுகொண்டு ழன்றே செத்து மீளவும் பிறப்பு

புத்தை நீக்கிய ஒற்றியம் பரனே - பாடல் 9

தயிர் வேண்டுமாயின் பாலை காய்ச்சி உறை விட்டு மத்து கொண்டு கடைய வெண்ணெய் தனியே தயிர் தனியே வருவது போலவே நம் தவமும்! நம் கண்மணியில் - உணர்வாகிய மத்தை
நாட்டி கடைய, பாலிலிருந்து, வினை கண்மணியிலிருந்து சுழன்று
விடும். இங்ஙனம் தவம் மேலோங்கும் போது ஒளி பெருகி வினையற்றுப் போகும். வினை பிரிந்து இல்லாதாக்குதலே தவம்!
புத்தை நீக்கிய ஒற்றியம் பரனே - என்பது நம் கண்மணியில் புற்று போல
வளர்ந்திருப்பது மறைந்திருப்பது வினை உள்ளிட்டமும் மலம். அதை நீக்க கண்மணி ஒளி பெருக வேண்டும். இதுதான் தவம் கண்மணி ஒளியில்
உணர்வூட்டினால் புத்தாகிய மும்மலம் நீங்கி விடும்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Wednesday 7 June 2017

2.45 வழிமொழி விண்ணப்பம்


நீல னேன்கொடும் பொய்யல துரையா
நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண்
சால ஆயினும் நின்கழல் அடிக்கே
சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ
ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல்
அகில கோடியும் அழிந்திடும் அன்றே
சீல மேவிய ஒற்றியம் பரனே
தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே.


பொய்மையைத்தவிர வேறு எதுவும் பேசாத நீசன்! நான் என்பதை
என் நெஞ்சில் ஐந்தும் சேர்ந்த கண்மணியில் ஒளியாக துலங்கும்
நீ அறிவாயே! இறைவா நீயே கதி என உன் திருவடியை சரணடைந்த
என்னை கைவிட்டிடாதே! ஆலகால விஷத்தை உண்டு தேவர்கள்
காத்தது போல் என் விஷமாம் மும்மலத்தை உண்டு. என் உள்
ஒளியே சிவமே காப்பாற்று. இல்லையேல் நான் அழிந்து விடுவேன்.
நல்ல அருள் கொண்ட என் கண் அம்பலத்தில் நடமிடும் ஒளியாகிய
இறைவனே காப்பாற்று! அருள்புரி!

ஒற்றி அரசே திருச்சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே - பாடல் 7
கண்மணி ஒளியே - திருவாகிய இறைவன் - சின்ன அம்பலமாகிய
கண்ணில் மணியில் திகழ்கிறான் ஒளி விளக்காக! திரு - சின்ன - அம்பலம்
திருச்சிற்றம்பலம். சின்ன அம்பலம் கண்ணில் திரு - ஒளியாகிய இறைவன்
உள்ளான்.

ஞான சற் குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Saturday 3 June 2017

44 ஆடலமுதப்பத்து


சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
வந்து நின்னடி காட்செய என்றால்
வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
இல்லை என்னில்நான் இல்லைஉயிந் திடலே
அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே

இறைவா தீய குணங்கள் எல்லாம் கொண்டவன் ஆதலால்
மனம் நொந்து வேதனைப்பட்டு வாடுகிறேன்! தளர்வடைகின்றேன்!
என் செய்வேன் என்மனம் என்வசம் இல்லையே! வினைவழி
இழுத்துக் கொண்டல்லவா போகிறது! இறைவா உன் திருவடி
தொண்டுசெய்ய திருவடியை எண்ணி தவம் செய்ய முடியவில்லையே !
உன்னருள் தந்தால் தான் நான் உய்வேன் இல்லையெனில் என்
வாழ்வில் உயர்வில்லை இன்பமில்லை எந்நாளும் துன்பமே! "அவனருளால்
அவன் தாள் வணங்கி"என்ற திருவாசகவரிகள் உணர்த்துவதும் இதுவே!

ஒற்றியூர் ஆன கண்மணி ஒளி, அந்திமாலை சூரியன் போன்று தகதகக்கும்
தங்கஜோதியாகும்! எல்லோரும் அறிய எல்லோர் கண்ணிலும் அம்பலமாகவே
ஆடிக் கொண்டிருக்கும் ஜோதியே அது!

என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா தேகுகின்றது
இவ் ஏழையேன் மனந்தான் உன்ன தின்னருள் ஒரு
சிறிதுண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மை -பாடல் 4

நம் மனதை எவ்வித செயல்களாலும் நிறுத்தவே முடியாது!
ஏனெனில் சதா இயங்கிக் கொண்டிருப்பது தான் அதன் வேலை!
மனம் இயங்கும்வரை வினை நடந்துக் கொண்டேயிருக்கும்!
வினையிருக்கும் வரைக்கும் பிறப்பு இறப்பு உண்டு! இதற்கு
என்னதான் முடிவு? மனதை அதன்வழியில் போய் அடக்குவது
அழிப்பதுதான் புத்திசாலிதனம்! அதற்க்கு குருவருள் திருவருள்
அவசியம் வேண்டும்! குருமூலம் கண்மணியில் மனதை நிறுத்தி
தீட்சை பெற்று தவம் செய்துவந்தால் மனம் கண்மணியில்
தங்குவதின் மூலம் கண் ஒளி பெருகும்! ஒளியால் கண்ணை மறைத்த
மறைப்பு வினைத்திரை கிழியும்! வினை மறைப்பு அற்றால் மனம்
இல்லையே! வினையின் வேலைக்காரன் தான் மனம்!புலன் வழி
- வினைவழி போகும் மனதை, கண்மணியில் - விழியில் நிறுத்தினால்
கருவிழி போவதை தடுக்கலாம்! காலனும் இல்லையே!

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Wednesday 31 May 2017

2.43 பிரசாத விண்ணப்பம்


பசைஇலாக் கருங்கல் பாறைநேர் மனத்துப்
பாதகனேன் படிற்றுரு வகனேன்
வசை இலார்க் கருளும் மாணிக்க மணியே
வள்ளலே நினைத்தொழல் மறந்து
நசை இலா மலம்உண் டோடுறும் கொடிய
நாய் என உணவு கொண் டுற்றேன்
தசை எலாம் நடுங்க ஒற்றியில் உன்னால்
தண்டிக்கப்பட்டனன் அன்றே

நெஞ்சில் கொஞ்சங் கூட இரக்கம் இல்லாது,
கொடிய செயல் புரியும் உடல் படைத்த
மிருகமாக வாழ்கிறோம்! குற்றமற்ற நல்ல
பண்பாளார்க்கு அருள் புரிகின்ற மாணிக்கம்
போல் ஒளிரும் கண்மணியே அருள் வள்ளலே
இறைவா உன்னை தொழ மறந்து விட்டோம் !
விரும்பதகாத உணவாக நாய் வேறு வழியின்றி
மலத்தைகூட உண்ணும் அதுபோல மனிதர்களும்
கண்டதை சாப்பிடுகிறார்கள்! அதனால் நரம்பு
முறுக்கேறி தீச்செயல் புரிகின்றனர். திமிர் ஏறபெற்றவர்கள்
ஆகின்றனர்! முடிவு உச்சி முதல் உள்ளங்கால்
வரை உள்ள நாடி நரம்பு தசையெல்லாம் நடுங்க
நடுநடுங்க விந்து வெளியேறும் சக்தி வெளியேறும்.
இதுவே பெருந்தண்டனை.

காமத்தால் விந்து வெளியேறும். தவத்தால் விந்து
ஊர்த்துவரேதஸாக மேலேறும், ஞானம் கிட்டும்.
காமம் சிற்றின்பம் - துன்பம் வேதனை. ஞானம்
பேரின்பம் - பரவச நிலை கிட்டும். தெய்வத்தை
நினைந்து மனம் தூய்மையாகுமானால் இந்த
தண்டனை கிடையாது.

கண்ணினால் உனது கழற்பதம் காணும் கருத்து - பாடல் 3
வள்ளல் பெருமான் தெளிவாக கூறுகிறார். இறைவா
உன் கழல் அணிந்த திருவடியை கண்ணால் காணும் பாக்கியமே !
அதில் கருத்தை வைத்து தவமே செய்தாலே பெரும் பேறாகும் என்கிறார்.

வயிறு நிறைய சோறு உண்டால் ஏற்படும் அசதி அதனால் ஏற்படும் தூக்கம் -
சோம்பேறித்தனம் இவை ஞானத்துக்கு ஏற்புடையதல்ல! எக்காலமும்
எக்காரணத்தை கொண்டும் அரைவயிறு உணவே உட்கொள்ள வேண்டும்.

விழிக்குள் நின்றிலங்கும் விளங்கொளி மணியே - பாடல் 5
கண்விழியில் கண்மணியில் நின்றிலங்கும் ஒளிவிட்டு பிரகாசிக்கும் மணியே
இறைவா என்கிறார் வள்ளலார்!

முறைப்படி நினது முன்பு நின்றேத்தி முன்னிய பின்னர் உண்ணாமல் - பாடல் 10காலை எழுந்து இறைவனை வணங்கி ஜபதபங்கள் நித்யா அனுஸ்டானங்கள்செய்த
பின்னரே உணவு உட்கொள்ள வேண்டும். இதுதான் முறை.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

2.42 நெஞ்சறிவுறூஉ


என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்
மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்
உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே
இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே

ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களால் சூழப்பட்ட
மனமானது அவரவர் செய்து வைத்த வினைகளின் படி உடல்
எடுத்து இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கின்றது! நம்
வாழ்வே வினையால் ஏற்படுவதே! "வினைபோகமே ஒரு தேகம்
கண்டாய் தினைப் போதும் நில்லென்றால் நில்லாய்"என்ற பாடல்
உணர்த்துவதும் இதைத்தானே! நம் ஒற்றியூராகிய கண்மணியில்
வாழ்கின்ற சிவம் - ஒளியை நாம் உன்னி உன்னி தவம் செய்தால்!
அதனால் ஏற்படும் ஒளி பெருகி வினையாகிய மறைப்பு அற்றுவிடும்!
நான் போகிறேன் நீங்களும் வாருங்கள் என வள்ளலார் அழைக்கிறார்,


ஒன்பதாகிய உருவுடைப் பெருமான் ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர் - பாடல் 2
நமது வலது கண் இடது கண் உள்ளே உள்ள அக்னி ஆக முக்கண். ஒருகண்
வெள்ளை விழி கருவிழி கண்மணி என மூன்று உருகொண்டது. 3 கண்ணும்
சேர்ந்து 9 உரு கொண்டது. வலது கண்ணும் இடது கண்ணும் சேர்ந்தாலே
மூன்றாவது கண் தோன்றும்.
-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Sunday 21 May 2017

2.41 திருவிண்ணப்பம்

சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்
தந்தை ஆதலின் சார்ந்துநல் நெறியில்
பழக்கி வைப்பது தேவரீர்க் குறிய
பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால்
வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்
வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால்
புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர்
பொய்யென் என்னில்யான் போம்வழி எதுவோ



 புழைக்கை மாவுரியீர் ஒற்றிஉடையீர் - உள் பக்கம் துளையுள்ள கரியயானை தோலை போர்த்திய சிவன்! கண்மணி கருவிழி
யானை தோல் எனப்பட்டது. உள்துளை - கண்மணியிலுள்ள உள்துளை அதனுள் இருப்பது தான் சிவம்.ஒளி. என்னோடு வழக்கு என்பது
வினையால் செயல்படும் நாம் இறைவனோடு சேர முடியாமல் தவிக்கும் நிலை! ஆயினும் எவ்வுயிர்க்கும் தந்தை இறைவன்,அதனால் எனக்கும் தந்தை நீயல்லவா இறைவா என்னை கை விட்டிடாதே!

Monday 8 May 2017

2.40 அவலத் தழுங்கள்

ஊதி யம்பெறா ஓதியனேன் மதிபோய்
உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
ஆதி எம் பெருமான் உனை மறந்தேன்
அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே


மரமண்டை என்று திட்டுகிறோம்மல்லவா? மரம் போல் செயலற்று
அறிவில்லாமல் இருப்பவன்!  உண்மையறியாமல் எதற்க்கெடுத்தாலும் 
வாதம் செய்பவன்! முட்டாள் தான் வாதம் செய்வான்! அறிவுள்ளவன்
அமைதியாயிருப்பான்! நிறைகுடம் தழும்பாதல்லவா? அன்பே இல்லாதவன்
இவர்களை கண்டால் என் நெஞ்சம் நடுங்குமே என்கிறார் வள்ளலார்!
இறைவனை மறந்ததால் இறைவனிடம் பாராட்டாததினால் இறையுணர்வு
பெறாததினால் தான் துன்பமெலாம்! கண்மணி ஒளியே தியாக மணி.
ஒற்றியூர் அரசரே தியாகேசர் சிவம்.

அழுத பிள்ளைக்கே பால் உணவளிப்பவள் அன்னை
என்பார்கள் அலவலியில்லா கொழுது நேர் சிறுகுழவிக்கும்
கொடுப்பாள் - பாடல் 4


அழுத பிள்ளைக்கு பால் உணவு கொடுப்பாள் தாய்! அழமுடியா
சிறுபிள்ளைக்கும் பால் நினைந்து ஊட்டுவாள் தாய்! இது உலகில் உள்ள
தாய் இயல்பு! இந்த உலகத்தையே படைத்த தாய் அதைவிட பெரிய தயாபரன்
அல்லவா? பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நம் ஊனினை
உருக்கி உள்ளொளி பெருக்கி உள்ளூறும் அமுதம் தருபவன். அவனே எவ்வுயிர்க்கும் தாய்!


காயம் என்பது ஆகாயம் என்றறியேன் - பாடல் 8
காயமாகிய நமது உடம்பு ஆகாயம் என்பதை அறியேன்!
"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்" என்பதை பார்க்க! அண்டத்தில்
உள்ளது அனைத்தும் ஆகாயத்தில் பரவெளியில் உள்ளது! அதுபோலவே
பிண்டமாகிய உடலும் பரவெளியே பரமாகிய ஒளியின் ஒரு சிறு துளி
துலங்குவதால் இதுவும் ஆகாயமே! காயமும்-உடலும் ஆகாயமே .
இதிலும் சூரியன் சந்திரன் கடல் எல்லாம் உள்ளதல்லவா? ஞான விளக்கம்
என்பது இதுதான்.

கண்ணன் விசுவரூபம் எடுத்தார் பிரபஞ்சமே தெரிந்தது என
பாரதம் கூறுகிறது! கண்ணன் வாயை திறந்தான் உலகமே
தெரிந்தது என பாகவதம் கூறுகிறது. கண்ணன்  - கண் அவன்
- கண் ஒளியே கடவுள் நிலை! பிரபஞ்சமே அதனுள் தானே!
எல்லாமாயும் எல்லாவற்றினுள்ளும் இருப்பவன் தான் இறைவன்!

www.vallalyaar.com

Wednesday 3 May 2017

2.39, நெடுமொழி வஞ்சி


வார்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
பார்க்கி றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
ஊருக்குள் மேவிய சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே

காமம் எனும் புலையன் நம்மை பெண் மோகத்தில் அழுத்தி
கெடுத்து விடுவான்! ஆனானப்பட்ட விசுவாமித்திரரே மேனகையால்
வீழ்த்தப்பட்டாரே! நாம் எம்மாத்திரம்! மீண்டும் மீண்டும் திரும்பத்திரும்ப
காமம் எனும் புலையன் எப்படியாவது நம்மை வீழ்த்தப்பார்ப்பான்! நாம்
நம் கண்மணி ஒளி அழகில் தான் மயங்க வேண்டும்~! உலக பொருட்கள்
எதற்கும் மயங்க கூடாது. கண்மணியை சிக்கென பிடித்தால் ஒளிபெருகும்.
அந்த ஒளியாகிய வாளால் காமத்தை வெட்டி வீழ்த்தலாம்! பெண்ணால் தானே
காமம் வரும்! பெண்ணை தாயாகப்பார்த்தால் காமம் வராதல்லவா? எல்லா
பெண்களையும் தாயாக பாருங்கள்! வாலை தாயை பணியுங்கள்!

காமத்தை வெல்ல காமத்தை - மாயையை ஆட்சி செய்பவளை  தாயாக
காண்பதே தப்பிக்கும் ஒரே வழி! காமத்தை ஆட்சி செய்பவளே காமாட்சி!
காமாட்சி தாயை வழிபடு! முதலில் காமனை வெல்லலாம்! காமனை
வென்றால் தான் காலனை வெல்ல முடியும்! அதற்க்கு ஒரே வழி தாயை
சரணடைதலே!

காமம் கோபம் லோபம் மோகம் மதம் ஆணவம் இன்னும் பல துர்க்குணங்களால் மனிதன் கெட்டுப்போகிறான். அனைத்திலிருந்தும் விடுபட ஒரேவழி இறை அருள் பெறுவதுதான்! இறை அருளால் தான் நாம் தப்ப முடியும்.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Tuesday 2 May 2017

2.38. சிவ புண்ணியத்தோற்றம்



கடவுள் நீறிடாக் கடையாரைக் கண்காள்
கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக
அடவுள் மாசுதீர் தருள்திரு நீற்றை
அணியும் தொண்டரை அன்புடன் காண்க
தடவும் இன்னிசை வீணேகேட் ட்ரக்கன்
தனக்கு வாளோடு நாள்கொடுத் தவனை
நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய
நாதன் தன்னை நாம் நண்ணுதற் பொருட்டே

"துஷ்டனை கண்டால் தூரவிலகு" என்பது பழமொழி.
வள்ளலார் கடவுளை கண்ணில் எண்ணி கண்ணீர்
விடாதாவரை கடையர் என்கிறார். நமக்கு உயிர் தந்த
பரமாத்மாவை எண்ணி எண்ணி தவம் செய்யாதவனே
மனிதர்களில் இழிந்தவன்! அவனை காண்பது தான்
பாவம்! தவம் செய்து கண்ணீர்மல்கி இறைவனை
நாடிடும் நல்லோரை மட்டுமே கண்கள் காண வேண்டும்!

வீணை மீட்டி நாதத்தால் வேத நாயகனை சேவித்த அசுரனுக்கு
வரம் கொடுத்த இறைவன், நமக்கு அருளால் போவாரா? அந்த
இறைவன் ஒற்றியூரில் -நம்கண்ணில் நாம் விரைவாக அடையும்
பொருட்டு ஒளியாக துலங்குகிறார்.

கண்களில் எப்போது நீர் வர சதா காலமும் உள் ஒளியை நினைந்து
நெகிழ்ப்பனோடு உறவாடுக! "நீரில்லா நெற்றி பாழ்' என்பது
நீர் வராத நெற்றி - கண் பாழ் என்பதே, நீர் உள்ள நல்ல தீ உடைய
நெற்றியே இறைவன் இருப்பிடம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Sunday 23 April 2017

2.37 நற்றுணை விளக்கம்


எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்
இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ
அஞ்ச வேண்டிய தென்னை என் நெஞ்சே
அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்
விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
விளங்க வேண்டியும் மிடற்றின் கண் அமுதா
நஞ்சை வேண்டிய நாதன் தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம் பெறும் துணையே

ஐம்புலன்கள் வழி மனம் செல்லும் - வினைவழி மனம் செல்லும்.
இப்படி வாழ்ந்து துன்பமடைவது தான் மிச்சம். நமக்கு அஞ்சேல்
அஞ்சேல் என அபயம் தருவது நான்கு வேதங்களும் சொல்வதும்
எல்லா தேவர்களும் போற்றும், எல்லாம் வல்ல இறைவனின்
திருவடியேயாகும்.  நமசிவய  என்பது பஞ்சபூதங்களை
குறிப்பதாகும். பஞ்ச பூதங்களும் சேர்ந்த இடமே நம் கண்மணி!
நமச்சிவாயம் காண் என்கிறார் வள்ளலார்.

கண்ணை காண வேண்டும். அது தானே தவம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Wednesday 19 April 2017

2.36 அருள் திறத்து அலைச்சல்


நறுமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
உறை மணக்கும் பூம்பொழில் சூழ் ஒற்றியப்பா உன்னுடைய
மறை மணக்கும் திருவடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ

பூவில் மனம் உள்ளது போல் கண் மலரும் மணக்கும்! பூவில்
தேன் உள்ளது போல் கண் மலரினுள் ஒளி பெருகி தேன் சுரக்கும்!
அதை நாம் அருந்தலாம்! சடை போல் ஒளிக்கற்றை உடையது.
கண்மணி ஒளி! வற்றாத நதி போல ஒளி ஆறு ஓடி வரும்!

கண்மணிமுன் விஷமாக மும்மலம் உள்ளது. அதனால் தான் கண்மணி
நிறம் கருநீலம்! "கறை கண்டன்"என்றனர் சித்தர்கள். "கண்டதுண்டமாக"
உள்ளது. கண்டமானது கறைபடிந்தது. இரு கூறாக உள்ளது என பொருள் .
இரு கண் எனப்படும்! வேதங்கள் போற்றும் உன் பொன்னார் திருவடியை
பாடிப்பாடி என் வாயும் மணக்குமே! ஒற்றியூரானே, கண்மணியே உன்
பெருமையை கூற இயலாது.

நீறடுத்த எண்தோள் - பாடல் 3நீர்  சொரியும் எட்டான - கண்கள்

கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள் கரும்பே
ஒண்மணியே தேனே என் ரொற்றியப்பா - பாடல் 13

இறைவன் இருப்பிடம் - கண்மணியில் உள்ளில் ஒளி! அது
கற்ப விருட்சம் போன்று நமக்கு எல்லாம் தரவல்லது! கரும்பை
விட தேனை விட இனிமையான அமுதம் தரக்கூடியது!
கண்மணியில் உள்ளே ஒற்றியிருக்கும் அப்பன் தான் அவன்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்



Monday 17 April 2017

2.35 ஆனா வாழ்வின் அலைசல்



துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத்
துடுக்கினை ஒடுக்குறும் காமக்
கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம்
கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த
உததிபோல் கண்கள் நீர் உகுப்பார்
அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள்
அண்ணலே ஒற்றியூர் அரசே

நாம் எப்படி தவம் இயற்ற வேண்டும் என்கிறார் வள்ளலார்! உள்ளிவாய் மடுத்து உள் உருகி ஆனந்த கடல் போல் கண்ணீர் உகுப்பார்!
கண்மணி உள்ளே உணர்வு பெற்று தவம் செய்கையில் உளம் உருகும் ஊன் உருகும் கண்ணீர் கடல் போல், வற்றாத கங்கையென ஊற்றெடுத்து பாயும்! அங்ஙனம் தவம் செய்து வரும் போது உள்ளே அமுதம் சொட்டும்! அதை அருந்தி அண்ணல் மலரடியை சேரலாம்! இதை
விடுத்து பெண் மாயையில் மனம் இழந்தால் மதிகெடும்! உடல் கெடும்!
உயிர் போய்விடும்!

அரியது நினது திருஅருள் ஒன்றே அவ்வருள்
அடைதலே எவைக்கும் பெரியதோர் பேறு - பாடல் 3

நாம் மனிதனாக பிறந்து - நல்ல படியாக பிறந்தது அரிது!
புண்ணியம். அரிதாக கிடைத்த இம்மானுட பிறவியில்
கிடைத்தற்கு அரியது இறைவனின் திரு அருள் ஒன்றே!
எப்பாடு பட்டாயினும் இறையருளை பெறவேண்டும்!
இதைவிட பெரும் பேறு இவ்வுலகில் வேறில்லை!

அருள்வதுன் இயற்கை உலகெலாம் அறியும்
மருள்வதென் இயற்க்கை - பாடல் 5

அருள்வடிவானவன் இறைவனவன்! கருணையே உருவானவன்தான் இறைவன். இதை உலகம் அறியும்! அது போல மருளே மயக்கமே - மாயையால் தடுமாறுதலே மனித இயல்பு! வினைகளால் பிறந்த
- மும்மலத்தால் சூழப்பட்ட மனிதன் அதிலிருந்து விடுபட ஒளியை நாட வேண்டும்! அந்த ஒளி - கருணையே வடிவான இறைவன் நம் கண்மணி உள்ளிலேயே ஒளியாக துலங்குகிறான்! அறிக! உணர்க!
நிலைக்க!
-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Sunday 16 April 2017

34. அவல மதிக்கு அலைசல்


மண்ணை மனத்துப்  பாவியன் யான்
மடவார் உள்ளே வதிந்தளித்த
புண்ணை மதித்துப் புகுகின்றேன்
போதம் இழந்தேன் புண்ணியனே

எண்ண இனிய நின் புகழை
ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்
தண்நல் அமுதே நீஎன்னைத்
தடுத்திங் காளத் தக்கதுவே


மண்போன்று உணர்ச்சியற்ற பாவி - கருணை அன்பு இல்லாத
மனிதன்! பெண் மயக்கத்தில் திரியும் மனிதன்! போதமில்லாதவனாகும்!
போதம் உள்ளவன் - உணர்வு உள்ளவன் உலகில் நல்லது கெட்டது
தெரிந்து இறைவனை உணர்ந்து வாழ்வான்!  போதங் கெட்டான்! முடிவில்
போதமற்றுப் போவான்!! போதம் உள்ளவன் மேலும் மேலும் போதம் பெற்று
- உணர்வு பெற்று  என்றும் வாழ்வான்! போதமற்றால் - மரணம்!

நம் போதத்தை இல்லாதாக்கும் மண்  பெண்  பொன் போன்றவற்றில் மதி
மயங்காதே! மரம் போல் உணர்வற்று போகாதே! பரம்பொருளின் பெரும்
புகழைப் பாடி பணிந்தால் குளிர்ந்த தெள்ளிய அமுதம் தந்து, நம்மை
தடுத்தாட் கொள்வான்!  குளிர்ந்த தாமரை திரு வடிவாகிய நம் கண்மலரில்
உணர்வு பெற்று - குருமூலமாக உபதேசம் பெற்று உணர்வு பெற்று தவம்
செய்து உணர்வை பெருக்கினால்! உணர்வு பெருக பெருக என்றும் போதம்
நிலைத்திருக்கும்! போதம் இருந்தால் மரணமில்லை!

வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே - பாடல் 6
காமத்தை - மாயையை எரிப்பது மெய்ஞ்ஞான விளக்கான நம்
கண்மணி ஒளியே! நம் கண்மணி ஒளியை உணர்வால் பெருகச் செய்தால்
அதை மறைத்து கொண்டிருக்கும் மும்மலங்களுள் ஒன்றான மாயை - காமம்
- உணர்வால் பெருகும் ஒளியால் எரிந்து போகும்! இது அனுபவம்!
காமம் அழிந்தால் தான் மெய்ஞ்ஞானம்!

Thursday 13 April 2017

2.33. ஆனந்த பதிகம்


குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற்
கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
படிகொள் நடையில் பரதவிக்கும்
பாவியேனைப் பரிந்தருளிப்
பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த
பொன்னே உன்னை போற்றி ஒற்றிக்
கடிகொள் நகருக்கு வரச் செய்தாய்
கைம்மா றறியேன் கடையேனே

நமது உடம்பில் நவ துவாரங்களில் வெளிப்படுவது அழுக்கே!
-மலமே! நமது உடலில் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை
உள்ள அசுத்தங்கள், எல்லாவற்றிற்கு மேலான பெரிய மலம் -
மும்மலம் சூழ்ந்த நாம் உலகில் வாழ்ந்து தொலைக்கிறோம்!?
இப்படிப்பட்ட மலம் நிரம்பிய உடலை பெற்ற நமக்கு, நிமலன் -
மலம் அற்றவனாகிய இறைவன் வெள்ளை விழிக்கு மத்தியிலே
கருவிழியின் மத்தியிலே மணியாய் அதனுள் ஒளியாய் துலங்கி
அருள்கிறான்!  யாவர்க்கும் அருளும் அருள்மயமான,
கருணைமயமான  கண் - கண்ட - கொண்ட - தெய்வம்! 
அருட்பெருஞ்சோதி!

ஓதல் அறிவித்து உணர்வு அறிவித்து
ஒற்றியூர் சென்று உனை பாட காதல்
அறிவித்து ஆண்டாய் - பாடல் 2

இறைவா உன் புகழை ஓதிட அருள் தந்தாய்! உன்னை என்னை உணர செய்தாய்!என் ஒற்றியூரான கண்மணி உள் சென்று தவம் செய்ய வைத்தாய்! உன்மீது  தீர காதல் கொள்ள வைத்தாய்!

Tuesday 11 April 2017

2.32 அடிமைத்திறத்து அலைசல்


தேவர் அறியார் மால் அறியான்
திசைமா முகத்தோன் தான் அறியான்
யாவர் அறிவார் திருஒற்றி
அப்பா அடியேன் யாதறிவேன்
மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே
முதிர்தீம்பாலும் முக்கனியும்
காவல் அமுதும் நருந்தேனும்
கைப்ப இனிக்கும் நின்புகழே

நன்கு சுண்டைக்காய்ச்சிய பாலும், முக்கனியும் நல்ல அமுதமும் தேனும் கூட கசக்கும்! ஆனால் இறைவா உன் புகழ் பாடும் தேவாரங்கள் பாடப் பாட வாய் இனிக்கும்! மனம் இனிக்கும்! தேவரும் மூவரும் அறிய தெய்வத்திருவடியை நம் கண்மணியில்
கலந்து நிற்பவனை அறிபவனே பாக்கியவான்!

உன் தன் அருட்புகழைக் கோடிஅளவில்
ஒரு கூறும் குணித்தார் இன்றி - பாடல் 11

இறைவா உன் அருளை - கருணையை கோடியில் ஒரு பங்கு கூட சரிவர உணர்ந்தவர் அறிந்தவர் இல்லையோ!



2. 31 . பற்றின் திறம் பகர்தல்



வாணரை விடையூர் வரதனை ஒற்றி
    வாணனை மலிகடல் விடமாம்
ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம்
    உடையனை உள்கிநின் றேத்தா
வீணரை மடமை விழலரை மரட்ட
    வேடரை மூடரை நெஞ்சக்
கோணரை முருட்டுக் குறும்பரைக் கண்டால்
    கூசுவ கூசுவ விழியே


வெள்ளை விழியாகிய நந்தியின் மேல் அமர்ந்தவன்! ஒற்றிவாணன் -
கண்மணியில் ஒற்றி உள் இருக்கும் ஒளி! பாற்கடலாகிய வெள்ளை
விழி தவத்தால் கருவிழி விஷமாகிய மும்மலத்தை உண்பவன் சிவம்.
உள் ஒளி! எல்லாம் உடையவன் எங்கும் நிறைந்தவன் அவனை உள்ளே
நிலை நிறுத்தி தவம் செய்தாலே நாம் உய்யும் வழியாகும்! பரம் பொருளை
காணவே நம் கண்கள்! அதெல்லாமல் உலகில் உள்ள வஞ்சகர்களை காண
நம் கண் கூசவேண்டாமா? தீயதை பார்க்காதே! தீயதை கேட்காதே! தீயதை
பேசாதே!

Monday 3 April 2017

2.30. நெஞ்சறை கூவல்

கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார்
    கங்கை நாயகர் மங்கைபங் குடையார்
பண்கள் நீடிய பாடலார் மன்றில்
    பாத நீடிய பங்கயப் பதத்தார்
ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி
    யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம்
மண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ
    மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே 


       மூன்று கண்களை உடையவர் ! கண்மணியில் கரையாக - விஷமாக
மும்மலத்தால் மறைக்கப்பட்டவர் ! வற்றாத நீர் சுரக்கும் ! இடப்பக்கம்
பெண் அம்சம் ! சொல்லமுடியாத அளவு பாடல்களால் பாடப் பெற்றவர் !
தாமரை திருவடிகள் நீண்டு உயர்ந்தவர் ! மனிதர்களாகிய - ஆத்மாக்களாகிய
- பெண்களாகிய நாம் தில்லை அம்பலவனுடன் ஆட விரும்புவதால்
நமக்காக நம் கண்மணி உள் நின்று ஆடுபவர் !
     
        மண்ணிலே போகின்ற மாலையை போன்று நம் உடலும் போய்விடாது
இருக்க , பூமாலையால் அல்ல ! நல்ல தமிழ் பாமாலை சூட்டி மகிழ்வோம் !
வாருங்கள் என்னுடனே என வள்ளலார் - சற்குரு அழைக்கிறார் !

        திருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்
        கருவின் நின்றஎம் போல்வர்
        உருவின் நின்றவர்அருஎன நின்றோர் - பாடல் 3

    மகாவிஷ்ணு சக்கராயுதம் பெற வேண்டி இறைவனை நோக்கி தவம் செய்தார் ! 1000 மலர்களால் அர்ச்சனை செய்ய எண்ணினார் . 999 மலர்தான் இருந்தது . ஒருமலர்  குறையவே தன் கண்மலரையே எடுத்து எல்லாம் வல்ல அருட் பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு சார்த்தினார் . அர்ச்சித்தார் . இறைவனுக்கு திருமால் கண்ணை சார்த்தியதால் அதுமுதல் நாம் இறைவனுக்கு சார்த்தும் எல்லாம் திருக்கண் சார்த்துதல்
திருக்கம் சார்த்துதல் என்றாயிற்று !

    இறைவன் அருள் பெற வேண்டுமாயின் , கருவில் நின்று எம்போல்வர் - கருவில் நின்று வள்ளலார் போன்ற ஞானிகள் ஆசி - அருள் அவசியம் வேண்டும் ! குருவருள் வேண்டும்!

    நாம் தாயின் கர்ப்பத்தில் உருவாகும் போது முதன்முதலில் உருவாவது ! அதுவே கரு ! தாயும் தந்தையும் சேர்ந்து முதலில்உருவாவது , அதுவே கரு ! அது தான் கண் ! கர்ப்பத்தில் முதலில் உருவாவது கண்ணே ! அந்தக் கண்மணி ஒளியே கரு ! "அந்தக்கரு விந்து நாதம் அது அன்னை உதிரமோடு கூடிய சூதம் அந்த கரு ஐந்து பூதம்" என சித்தர் ஒருவர் பாடியுள்ளார் . அந்தக் கருவிலே நிலைத்து நின்றால் ஞானம் பெறலாம் ! அப்படி ஞானம் பெற்ற வள்ளலாரை நாம் குருவென கொண்டால் அவர் வழிகாட்டி நம் துயர் மாற்றி நம்மையும்ஞானம் பெறச் செய்து இறைவனிடம் சேர்ப்பிப்பார் !

    இறைவன் சோதியாக உருவாகி நம் உள் துலங்குகிறார் ! உருவமில்லா
வெளிச்சம் என திகழ்பருவம் அவரே ! எங்குமான ஒளியானவர் ! உருவமும்
அருவமும் ஆனவர் இறைவனே !

2.29. நெஞ்சைத் தேற்றல்


சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று
   திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சே
ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி
   ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்கு
மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து
   வாழ்கின் றார்அவர் மலரடி வணங்கி
நன்று வேண்டிய யாவையும் வாங்கி
   நல்கு வேன்எனை நம்புதி மிகவே

திருவருட் பிரகாச வள்ளல் பெருமான் நமக்கு கொடுக்கும் உறுதி மொழி இது !
மனோ வலிமை இல்லாதவர்களே , உலகிலுள்ள வஞ்சகரை அடுத்து ஒன்றும் பெறாமல்  திண்டாடாதீர்கள்! பயப்பட வேண்டாம் ! குருவாக என்னை கருதி என்னுடன் சேர்ந்து , திருவாகிய இறைவன் - சோதி ஒற்றியிருக்கும் கண்மணியில் உள் துலங்கும்  வள்ளலார் - இறைவன் திருவடியை வணங்கி சரணடைவோமாக !நான் உங்களுக்கு வேண்டிய யாவும் அந்த அருட்பெருஞ்ஜோதி இறைவனிடம் வாங்கி தருகிறேன் . என்னை நம்புங்கள் ! என உலக மக்களை அன்போடு அழைக்கிறார் .

Sunday 2 April 2017

2.28 நாள் அவத்து அலைசல்


இன்றிருந் தவரை நாளைஇவ் வுலகில்
இருந்திட கண்டிலேன் ஆஆ
என்றிருந்த தவத்தோர் அரற்றுகின் றனரால்
ஏழையேன் உண்டுடுத் தவமே
சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால்
செய்வன செய்கிலன் அந்தோ
மன்றிந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே
வள்ளலே ஒற்றியூர் வாழ்வே


இன்று இருக்கும் நாம், இப்போது இருக்கும் நாம்
அடுத்த ஒருமணி நேரத்திற்குள் என்ன ஆவோமோ?
இருப்போமா? யார் அறிவார்! இருக்கிற கொஞ்ச காலத்தில்
நல்லதை எண்ணி நல்லதை சொல்லி நல்லபடியாக வாழ்ந்தால்!
நிம்மதி கிட்டும் தம்மதி பெருகும். வாழ்வாங்கு வாழலாம்!
அதை விடுத்து கண்டதே காட்சி கொண்டதே கோலம்
என உண்பதும் உடுத்துவதும் உறங்குவதுமாக வீணில்
காலத்தை கழிப்பதால் ஒரு பயனுமில்லை! எல்லோருக்கும்
அம்பலமாக திருவாகிய இறைவன் அவரவர் கண்மணியில்
ஒற்றியிருப்பதை குருமூலம் உணர்ந்து உபதேசம் தீட்சை பெற்று
தவம் செய்தால் பெறலாம். முக்தி இன்பம்! மரணமிலா பெருவாழ்வு!

நீரின்மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து
நிலைப்படா உடம்பினை - பாடல் 3


தண்ணீரில் எழுதும் எழுத்து எவ்வளவு விரைவில் இல்லாது
போய்விடுமோ அதைவிட இந்த உடம்பு வேகமாக அழிந்து விடும்!
உயிர் பிரிந்து விடும்! உயிர் பிரியாது, உடல் அழியாது இருக்க
என்றும் நிலைக்க இறைவன் நம்முள் ஒளியாக துலங்குவதை
அறிந்து உணருங்கள்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Friday 31 March 2017

2.26 நெஞ்சோடு நெகிழதல்


சீர்தரு வார்புகழ்ப் பேர்தரு
வார் அருள் தேன்தருவார்
ஊர்தரு வார்மதி யுந்தரு
வார்கதி யுந்தருவார்
ஏர்தரு வார்தரு வார்ஒற்றி
யூர்எம் இறைவாஅன்றி
யார்தரு வார்நெஞ்ச மேஇங்கும்
அங்கும் இயம்புகவே

ஒற்றியூர் ஆகிய நம் கண்மணியை எண்ணி தவம்
செய்தால் சீர்-கண்மணியை ஒளியை தருவார்! காணலாம்.
கண்ணிலே கண்ணாலே! பேர்புகழ் எல்லாம் கிட்டும்
இவ்வுலகம் போற்றும்! நமக்கு உள் அமுதம் கிட்டும்!
ஊரும் பேரும் பெறலாம். நல்வாழ்வு பெறலாம், நல்ல
அறிவு ஞானம் பெறலாம். நற்கதி - பரகதி மரணமிலா
பெருவாழ்வு தருவார்! இதையெல்லாம் தரக்கூடியது
நம்மில் இருக்கும் இறைவனே! அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவனே!

துரிய நிலை அனுபவத்தை - பாடல் 9

நம் கண்மணி ஒளியில் மனதை நிலை நிறுத்தி தவம் செய்யும்
போது ஏற்படும் அனுபவம் ஐந்து! சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி,
துரியம், துரியாதீதம் எனப்படும், நம் கண்மணி சுழற்சி வேகம் தான்
இந்த அனுபவம்! துரிய நிலையில் கிடைக்கும் ஒளிக்காட்சியை
எங்குமான சோதி நம்முள் திகழ்வதை காணலாம்!

மூவாத முதலாய் சுத்த நன்னிலைக்கு
நிலையாய் பசுபதி - பாடல் 10

நம் கண்மணியே நாம் தாயில் கருவில் இருக்கும்போது
உருவான முதல் உறுப்பு! பிறந்தது முதல் 100 வயது ஆனாலும்
முதிர்ச்சியடையாதது!வளராதது! என்றும் உள்ளது. உலகில் உள்ள
700 கோடி மக்களுக்கும் ஒருபோல இருப்பது கண்மணியே! நமக்கு
நல்ல நிலையை பரகதியை தருவது கண்மணி ஒளி! அதுவே
- பசுபதி - பசு என்றால் ஜீவன். ஜீவனின் பதி பரம்பொருள். பசுபதி
இருப்பது நம் ஜீவனான கண்மணியிலேயே!

சண்முகத் தெம்பெருமானை ஐங்கரனை
நடராஜத் தம்பிரானை உண்முகத்தில் கருதி
அனுபவமாய் இருக்கிலை - பாடல் 11

சண்முக மான ஆறுமுகத்தை இரு கண்களை, ஐந்து கரங்கொண்ட
விநாயகன் - கண்மணியை, அதில் நடமிடும் ஓளியான நடராஜனை
காண்பதே உண்மை அனுபவம்! புறத்தே தேடாதே! உண்முகமாய்
அகத்தே நாடுவாய்! காண்பாய்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்


Thursday 30 March 2017

2.25 புண்ணிய விளக்கம்

பாடற் கினிய வாக்களிக்கும்
பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம்
கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும்
சிவாய நமஎன் றிடுநீறே


இறைவன் நமக்கு வாழங்கிய சீர் - கண்மணி ஒளி! அதை
தேடி காண்பதே இனிமையான அனுபவம்! பஞ்சபூதமும் சேர்ந்த
கண்மணியில் பொங்கி வரும் நீரால் - நெகிழ்ந்து உருகுவார்க்கு
நல்ல வாக்கு! - பாடும் திறன்! பஞ்சமில்லாது எப்போதும் கிட்டும்
நல்ல உணவு! நல்ல தவம் செய்யும் அடியவர் கூட்டம் தரும்
சத்சங்கம் நடக்கும். நல்ல குணவானாக அவன் திகழ்வான்! பயப்படாதே
இதெல்லாம் நடக்கும் என்மேல் ஆணை என வள்ளல் பெருமான்
கூறுகிறார்!

அஞ்சில் புகுந்த நெஞ்சே - பாடல் 5
 
பஞ்ச பூதமும் ஒன்றான கண்மணியில் புகுந்த உள்ளே உள்ள
நெஞ்சமே - மனமே!

திண்ணமளிக்கும் திறம் அளிக்கும் - பாடல் 8

கண்மணி ஒளியை உணர்ந்து தவம் செய்ய செய்ய உடல் திடம்
கிட்டும்! உள்ளத்தில் உறுதி கிட்டும்! எதையும் ஆக்கும் திறன் கிடைக்கும்!
எல்லா திறமையும் பெருகும்!

Wednesday 29 March 2017

2.24 திருவருள் வழக்க விளக்கம்


தொடுடை யார்புலித் தோலுடை
யார்கடல் தூங்கும் ஒரு
மாடுடை யார்மழு மான்உடை
யார்பிர  மன்தலையாம்
ஓடுடை யார்ஒற்றி யூர்உடை
யார்புகழ் ஓங்கிய வெண்
காடுடை யார்நெற்றிக் கண்உடை
யார்எம் கடவுளரே


ஒற்றியூர் உடைய எம் கடவுளாகிய எம் கண்மணி ஒளியே
சிவம்! இரு கண்களிலும் உள்ள சிறிய துவாரத்தை மறைத்திருக்கும்
ஜவ்வே - தோடு எனப்படும். சிவம் ஆனந்த தாண்டவம் ஆடினால்
தோடு கழன்று விடும்! புராணம் கூறுவது இதைத்தானே! நாம் சிவத்தை
நம் உள் ஒளியை  நல்ல ஆட விட்டால், அதாவது நாம் விடாது
தவம் செய்தால் ஒளி பெருகி மறைப்பு விழுந்து விடும்! இது அனுபவ
ஞானம். வள்ளல் பெருமான் உரைத்த உபதேசம். தவம்  செய்யும் போது
தோன்றும் ஒளி புலித்தோல் போன்று காணும். கடல் என்றது வெள்ளை விழி
அதுவே மாடு. சிவனின் வாகனம். நந்தி - நம் தீ! ஒளி காட்சி அனுபவம்
கூறும் நிலையே எல்லாம்! சிவனை வர்ணிப்பது -நம் கண்மணி ஒளி
அனுபவமே!

பல்லாயிரம் கோடி அண்டங்கள் எல்லாம்
காற்பதம் ஒன்றில் ஒடுங்கி நிற்பார் - பாடல் 10

மால் அயன் உருத்திரர் மற்றைய பூதங்கள் மற்றும் பல்லாயிரம்
கோடி அண்டங்கள் இப்பிரபஞ்சம் எல்லாம் தன் இருகாலில்
- திருவடியில் ஒடுக்கி இருப்பவரே இறைவன்! சகலமும்
திருவடியில் அடக்கம்! அருபெரும்ஜோதி ஆண்டவரே நம்
திருவடி யாகிய கண்மணியில் உள்ளார்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Tuesday 28 March 2017

2.23 நமச்சிவாய சங்கீர்த்தன லகரி


சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
சுதந்த ரங்கோடு தோன்றிய துணையைக்
கல்அ  வாவிய ஏழையேன் நெஞ்சம்
கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைக்
செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
நல்ல வாழ்வினை நான்மறை பொருளை
நமச்சிவாயத்தை நான்மாற வேனே


திருவொற்றித்தேன் - கண்மணி ஒளி, தில்லை சிற்றம்பலத்தாடும்
நல்ல வாழ்வு - சிற்றம்பலம் - சின்ன அம்பலம் ஒளியாகிய சிவம்
ஆடும் சிறிய அம்பலம் நம் கண்மணி ஒளி. எங்குமான ஒளி
சிற்றம்பலத்திலும் நம் கண்மணியிலும் உள்ளது! நான்கு வேதங்களும்
சொல்வது உண்மைப்பொருள் கண்மணி ஒளி! நமச்சிவாயம் -
பஞ்சபூதத்தை குறிப்பதே நமச்சிவய என பஞ்சாட்சரம். பஞ்சபூதம்
ஒருசேர இருக்கும் இடம் கண்மணி அதை நாம் மறக்கவே கூடாது!
எப்போது மனதில் எண்ணி உணர்ந்து நெகிழவேண்டும். நெஞ்ச கனகல்லை
உருக்குவதும் நமச்சிவாயமே - கண்மணி ஒளியே! தொண்டர்களுக்கு
துணையாவது கண்மணி சிவமே!

அட்ட  மூர்த்தமாகிய பொருளே - பாடல் 2

நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் சூரியன் சந்திரன் அக்னி எனும்
எட்டு நிலையும் கூடிய பொருள்! இரு கண்களும் ஒளியால் ஒன்றினால்
தோன்றும் பொருள்! அட்டம் என்றால் எட்டு! தமிழில் 'அ' அவாகிய  கண்ணாகிய
பொருளே எனப்படும்.

Monday 27 March 2017

2.22 ஸ்ரீசிவ சண்முகநாம சங்கீர்த்தனலகிரி



பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
பொழுது போகின்ற தொழுதிஎன் நெஞ்சே
பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேதிக்
தொழுது சண்முக சிவ சிவ என நம்
தோன்ற லார்தமைக் துதித்தவர் திருமுன்
பழுது சொல்லுதல் ஐயுறல் என்மேல்
ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே!

குற்றமே புரியும் வஞ்சகரிடம் போய் உதவி கேட்பது பயனிலாது
போகும். நமக்கு வேண்டியதை நம் குறைகளை நம் ஒற்றியூரான
நம் கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து அழுது தொழுது
விண்ணப்பித்தால் நடக்கும்! நம்முள் இருப்பது சாட்சாத் அந்த
அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தானே! இறைவன் அருள் கண்டிப்பாக
கிட்டும் என வள்ளல் பெருமான் தன்மீது ஆணையிட்டு கூறுகிறார்.
சந்தேகமே வேண்டாம் இறையருள் கிட்டும்!

Sunday 26 March 2017

2.21 அருள் நாம விளக்கம்


வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்
மயங்கி வஞ்சார் பால் வருந்திநாள் தோறும்
ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்
எழில்கெள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த்
தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி
ஓங்கு ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே


ஏய் மனிதா, என்னுடன் வருக!! தேனை விட செங்கரும்பை விட
இனிதாகி தவம் செய்யும் அன்பர் சித்தத்துள் ஊறி ஓங்கும்
ஒளியை ஓம் நமசிவாய என்று மனதால் எண்ணி உருகுவாயாக!

அப்படி இறை நாமத்தை மனதில் எண்ணி அந்த அனுபவத்தை பெறுவாயாக!
துன்பங்கள் எண்ணி மனம் வருந்தி என்ன பயன்? அதை விடுத்து இறைவன்
திருவடியை சேர்வாயாக! என்னுடன் வருக என சற்குரு வள்ளல் பெருமான்
நம்மை அழைக்கிறார்! வாருங்கள்! அவ்வையார் விநாயகர் அகவலில்
"சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி" என்கிறார் வள்ளல் பெருமான்.
சித்தத்துள் ஊறி ஓங்கும்  என்கிறார்.

மனம் தாண்டி சித்தத்தில் சிவத்தை நிறுத்தினால் புத்தி தெளிவு பெற்று அறிவு
விருத்தியாகி ஞானம் பெறலாம்! என்னுடன் ஒற்றியூர் வருக என அழைக்கிறார் வள்ளல் பெருமான்! ஒற்றியூர் - கண்மணி!

என்மொழி குருமொழியாக எண்ணி - பாடல் 7
கருணையின் உருவமே, உரு கொண்டு வந்தது நம் வள்ளல் பெருமான்
உருவில்! இறைவனே கருணையே வடிவான  வள்ளல் பெருமான்,
"என் மொழி குருமொழி ஆக எண்ணி " கேட்பாயாக ஒற்றியூர் கண்மணிக்குள்
வருக என நம்மையெல்லாம் அழைக்கிறார்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Saturday 18 March 2017

2.20 திருவடிச் சரண் புகல்


ஓடல் எங்கணும் நமக்கென்ன குறைகாண்
உற்ற நற்றுணை ஒன்றும்இல் லார்போல்
வாடல் நெஞ்சமே வருதி என் னுடனே
மகிழ்ந்து நாம் இரு வரும் சென்று மகிழ்வாய்க்
கூடல் நேர்திரு ஒற்றியூர் அகத்துக்
கோயில் மேவி நம் குடிமுழு தாளச்
தாள்த லந்தரும் நம்தருள் செல்வத்
தந்தை யார்அடி சரண்புக லாமே


எங்கும் ஓடாதீர்! நமக்கு என்ன குறை! நமக்கு உறுதுணையாக
யாரும் இல்லையே என வருந்த வேண்டாம்! என்னுடன் வருக!
நாம் இருவரும் மகிழ்வுடன் ஒற்றியூர் உள்துலங்கும் நம் குடி
முழுவதும் ஆண்டு கொண்டிருக்கும் இறைவனை சரணடைவோம்!
அவன் திருவடியை சரணடைந்தால் இறைவனின் பாதமே கதி என
இருந்தால் எல்லா நலமும் பெறலாம்! அந்த ஒளியோடு இறைவனோடு
கூடி மகிழலாம்!

நாம் குருவோடு சேர்ந்து தான் இறைவனை அடையமுடியும் என்பதை
வள்ளல் பெருமான் அழகாக வலியுறுத்துகிறார்! தானே அழைத்து போகிறேன்
என்கிறார்! என்னோடு வருக நாம் இருவரும் சென்று இறைவனை அடையலாம்  என்பது, வள்ளல் பெருமான் குருவாக இருந்து நம்மை இறைவனிடம் சேர்ப்பிப்பர் என்பதே "குரு அருளின்றி திருவருள் கிட்டாது" நமக்கு சற்குரு வள்ளல் பெருமானே!

வேண்டியது யாவையும் உனக்கு வாங்கி
ஈகுவேன் ஒன்றுக்கும் அஞ்சேல் - பாடல் 2

நாம் வள்ளல் பெருமானை குருவென சரணடைந்தால் நமக்கு
வேண்டியதெல்லாம் தருவார்! எதற்கும் பயப்பட வேண்டியதில்லை!
திருவடியை சரணடைக!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

2.19. தியாக வண்ணப்பதிகம்



காரார் குழலாள் உமையோ லயில்வேல்
காளையொ டுந்தான் அமர்கின்ற
ஏரார் கோலம் கண்டு களிப்பான்
என்னும் எமக்கொன் றருளானேல்
நீரார் சடைமேல் பிறையொன் றுடையான்
நிதிக்கோன் தோழன் எனநின்றான்
பேரார் ஒற்றி யூரான் தியாகப்
பெருமான் பிச்சை பெருமானே


உமையம்மையும் முருகனும் சிவனும் சேர்ந்துதான் இருக்கும்
கோலம் காணக் கண் கோடிவேண்டும். "சோமாஸ்கந்தர்" என்ற மூர்த்தம்
கோவில்களில் பார்த்திருப்போம்! சிவனைப்பிடிக்க சக்தியோடு இருந்து
தவம் செய்தால் முதலில் வருவான் முருகன்! நம் கண்மணி உள் ஒளியான
சிவத்தை பிடிக்க, நாம் விடாது உறுதியுடன் வைராக்கியத்துடன்  தவம்
செய்யவேண்டும். அப்படி தவம் செய்தால் முதலில் நம் இருகண்களும்
காணும். ஆறுமுகம் காணும். அந்த தத்துவம் தான் சோமாஸ்கந்தர். அந்த
சோமாஸ்கந்தர் இருக்கும் இடம் கண் கண்ணீர் சொரியும்-அதுதான் கங்கை!
சந்திர கலை உடையது. அவன் - சிவன் நம் கண்களில் இருப்பவன்
பிச்சை பெருமான்! எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி இட்ட பிச்சை
தான் கண்மணி ஒளியான பிச்சை பெருமான்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Monday 13 March 2017

2.18 திருப்புகழ் விலாசம்


துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்தி
செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
இன்ப மேஇமை யான்மகட் கரசே 
திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
திகழும் ஒற்றியூர் சிவபெருமானே


எங்கள் உள்ளே உவந்து ஊறிய அமுதே, இன்பமே
சந்திரனை தலையில் தாங்கிய ஒளிக்கலைகளையுடைய
கண்மணியே! சிவமே! தவத்தால் ஒழுகும் நீரால், கண்கள்
சிவந்து ஒளி பெருகி நிற்பதால் நாம் நம் கண்மணி ஒளியை
பரஞ்சோதியை காணலாம். சதாகாலமும் இறைவனை
நினைந்து உணர்ந்து தொழுது வந்தால் திருவடியை - ஒளியை
தவம் செய்து வந்தால் உள் அமுதம் கிட்டும். பேரின்பம் பெறலாம்

காமன் வெந்திட கண் விழித்தவனே - பாடல் 4

நம் மனதிலுள்ள காமம் முதலான துர்க்குணங்கள் போக வேண்டுமானால்
கண் விழிக்கணும்! கண் விழித்திருந்து தவம் செய்வதால் நம் கண்மணி உள்
ஒளி சிவம் பெருகும். சிவமாகிய ஒளி பெருகினால் நம் காமம் எரிந்து போகும்.

தொழுது கொண்டோடினர் தோட்டக்குடிகள்

என்ற திருமந்திர வரிகள் நாம் அறிய வேண்டிய ஒன்றாகும். அதைத்தான் வள்ளல் பெருமானும் காமன் வெந்திட கண் விளியுங்கள் என்றார். விழித்திருந்து, விழியில்  உணர்வுடன் தவம் செய்து வந்தால் சுத்த உஷ்ணம் பெருகும் ! அசுத்த உஷ்ணமான காமாதி துர்குணகங்கள் வெந்துபோகும்!

எழுமின் விழுமின்
தூங்கும் மனிதா விழித்தெழு! விழிப்புணர்வுடன் இரு! விழியில் உணர்வுடன் இரு!

மாலின் கண்மலர் மலர்திருப்பதானே - பாடல் 8


திருமாலின் கண்மலர் பொருந்திய மலர் திருப்பாதனே. நம்
கண்மணி தான் கண்ணன் - திருமால். அதாவது மாயவன் - மாயை
-மும்,மலங்களால் மறைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே உள்ள
ஒளியே சிவமாகிய ஒளி, மலர்ப்பாதம் - திருவடி என்பது.    


ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Sunday 12 March 2017

2.17 நெஞ்சோடு நேர்தல்


ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனை பணிந்து வாழ்த்தினால்
மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
துக்க மியாவையும் தூர ஓடுமே

மனமே மனிதர்கள் காமத்தால் ஏற்படும் உடல் சூட்டையும்
அதன் பின்னால் வரும் துன்பங்கள் யாவையும் நீங்க தன்
உடலில் ஒற்றியிருக்கும் -கண்மணியின் உள் ஒற்றியிருக்கும்
அந்த ஒளியை பற்றி, மேலும் மேலும் பற்றி வளர்ச் செய்தால்
தவம் செய்தால் தப்பலாம்! இன்பமாக வாழலாம். மும்மலமாகிய
விஷத்தை கொண்டநாதன் கண்மணி ஒளி -படம் பக்கநாதன்!

கல்லை யொத்த என் கன்ம நெஞ்சமே - பாடல் 7
கல் போன்றது என் கன்ம நெஞ்சம் - கல்மனம். நம் மனம் - கன்ம நெஞ்சம்.
அதாவது நாம் இப்பிறவியில் கொண்டுவந்த பிராரத்துவ கர்ம வினை நம்
மனம் மூலமாக அரங்கேறுகிறது. பிறந்து நடத்தும் ஆகான்மிய கன்மமும்
நம் மனம் மூலமே நடக்கிறது.

'தவத்தால் இவ்விரண்டும் இல்லாது போகையில் வரும் சஞ்சித கர்மமும்
வரும் இடம் மனம் தான். வினையை தாங்குவதால் சராசரி மனிதனின் மனம்
கல்லாகி விடுகிறது. "நெஞ்சு கனகல்லும் நெகிழ்ந்துருக" என ஒரு ஞானி பாடுகிறார்.

மனம் கல்லான மனிதன் தான் யார் என உணரத்தான் நம் முன்னோர்கள் கோயிலில் கல்லால் இறை உருவத்தை பலவாராக வடித்தார்கள்! கல்லான மனம் படைத்த  மனிதன் மனம் உருக உருக கடவுள் காட்சி அனுபவம் பெறுவான்! கோவிலில்  கல்லாக வடிக்கப்பட்ட கடவுள் சிலை முன் இவன் போய் கல்லாக உட்கார்ந்து  இருப்பானேயானால் கர்ப்பகிரகத்தில் உள்ள கல் பேசும். கல் போல் அமர்ந்த மனிதன் காணுவான் கண்ணாலே!

உடல் கல்லாகிவிட்டால் கன்மட்டுமே உணர்வோடு இருப்பதை அனுபவத்தில்
உணரலாம்! கல்லான மனம் கரைய கண்குளிர தவம்  செய்ய வேண்டும்.
உடல் கல்லாக வேண்டும். மனம் இல்லாது போக வேண்டும்! மனம் இல்லாது
போனால் வினை இல்லாது போக வேண்டும்! மனம் இல்லாது போனால்
வினை இல்லாது போகும்! வினை இல்லாது போனால் பிறப்பு இறப்பு
இல்லாது போகுமே! அதுதானே வேண்டும்!


ஞான சற்குரு சிவசெல்வராஜ்

2.16 எழுத்தறியும் பெருமான் மாலை


சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
முந்தை வினைதொலைத்துள் மொய்கழற்காள் ஆக்காதே
நிந்தை உறும் நோயால் நிகழ வைத்தால் நீதியதோ
எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே


நம் முந்தைய வினைகளால் நாம் சிந்தை மயங்கி தடுமாறி
மேலும் தீவினைகள் பல புரிந்து பலவிதமான துன்பங்களுக்கு
ஆளாகிறோம்! எந்தந்தையாகிய நீ, கண்மணியில் ஒற்றியிருக்கும்
நீயே, உன் தூய திருவடிக்கு என்னை ஆளாக்குவாயாக என
வள்ளலார் வேண்டுகிறார், நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் ஒளியே
எழுத்தறியும் பெருமான் ஆகும்!

எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும் - என்ற அவ்வையார் அமுதவாக்கும்

எண்ணென்ப யேனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு 


என்ற திருவள்ளுவர் திருவாக்கும் உரைக்கும் உண்மையே வள்ளலாரும்
உரைத்தார்! எண்ணும் எழுத்தும் கண். எண்ணாக எட்டும் எழுத்துக்கு
முதலான ஆதியான எழுத்தும் ஒன்றே. தமிழில் எட்டாம் எண் 'அ' எழுத்தில்
முதல் 'அ' 'அ' வலது கண். இந்த எழுத்தை அறியும் பெருமான் - இந்த
'அ' எழுத்தை அறிந்தாலே உள்ளிருக்கும் - கண்மணி ஒளியை - பெருமானை
இறைவனை அறியலாம் உணரலாம் நம்முள் இருந்து நமக்கு நம்மை
அறிவிப்பவன் அறிபவனாக - நான் - பரஞ்சோதியே! இறைவன்!  









கண்ணாளா உன்றன் கருணை எண்களிக்க - பாடல் 8

கண்ணாளா கண் + ஆள்பவன் - கண்ணை ஆண்டுகொண்டு இருக்கும்
ஒளியே கண்ணாளன்! என் கண்ணாளனே உன்கருணையை எனக்கு தந்து
அருள்வாயாக என வள்ளலார் வேண்டுகிறார்!


காமாந்தகாரம் எனும் கள்ளுண்டு கண்மூடி ஏமாந்தேன்
- பாடல் 14

மனிதர்கள் காம வசத்தால் கண்ஒளி மங்கி இறப்பர்! கள்ளுண்டு
போதையால் அறிவு மயங்கி ஞானம் பெறாது போவர்! எல்லாவற்றுக்கும்
மேலாக கண்ணை அறியாத - கண்மணி ஒளியை - திருவடியை அறியாத
மூடர்கள்  உபதேசத்தால் கண்ணை மூடி தியானம் செய்து ஏமாந்து போவார்?
கண்ணை மூடி தியானம் செய்வபவர், முடிவில் கண்ணை மூடிவிடுவர்! அதாவது  இறந்து விடுவார்!

கண்ணை திறந்து தவம் செய்பவரே கண்மணி உள் ஒளியை காண்பர்! கண்ணை திறந்து தவம் செய்ய, கண்ணை திறக்க ஒரு குரு தேவை!
குரு உங்கள் கண்ணை திறந்தால் - நீங்கள் கண்ணை மூடாது திறந்த நிலையில் தவம் செய்தால் - கண் இமை மூடாத நிலையில் இருப்பதால்-
இமையாதவர்கள்-தேவர்கள்  ஆவீர்கள்! தேவர்கள் எந்நேரமும்
இறைவனை காணலாம்! முதலில் மனிதனான நாம் தேவராக வேண்டும்! அதாவது இமையாதவர்களாக - கண்ணை திறந்த நிலையில்
 உணர்வில் - உள் ஒளியில் நிலைப்பவராக இருக்க வேண்டும் - அவர்களுக்குத்தான் இறைவனை காண முடியும். எழுத்தை
''அ'' அறிந்தால் பெருமானை கண்ணை திறந்திருந்தால்
காணலாம்! அருள் பெறலாம்!

 பொன்னைமதித்தையா நின் பொன்னடியை போற்றாத
ஏழைகட்கும் ஏழை கண்டாய் - பாடல்19

பொன்னை பெரிதாக மதித்து அதனை பெற அல்லும் பகலும்
பாடுபடும் இவ்வுலகில் பொன் பொருள் இல்லாதவரை ஏழை என்பர்!

ஆனால் இறைவனின் பொன்னடியை - தங்க ஜோதியை உணராதவன்
தான் உண்மையிலே ஏழையிலும் ஏழை!! பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை! அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை!
பொருள் என்றால் பொன் பணம் அல்ல!? மெய்ப்பொருள்! மெய்ப்பொருள் உணராதவன் தவம் செய்யாதவன் இவ்வுலகில் வாழ முடியாது! வினைகளுக்குட்பட்டு ஜனன மரண பிணியில் மாட்டிகொள்வான்! இவ்வுலகம் சிறப்பாக வாழ வேண்டுமானால் தன்னிலே இருக்கும் பொருளை - மெய்ப்பொருளை அறிய வேண்டும். குரு மூலமாக உணர வேண்டும். இவ்வுலகமே இல்லையெனில் அவ்வுலகம் எங்ஙனம் கிட்டும்!
இவ்வுலகில் பொருள் அறிந்து குரு மூலமாக உணர்ந்து தவம் செய்பவர்க்கே அவ்வுலகம் கிட்டும். அ + உலகம் = அவ்வுலகம் கிட்டும் இறைவன் இருக்கும்

உலகம் கிட்டும்! அதைவிட பெரும்பேறு உண்டுமா?!

தூக்கமில்லா ஆனந்ததூக்கம் - பாடல் 22
தூக்கம் என்பது மனிதனின் உடல் உள் உறுப்புக்கள்
சோர்வடையும் போது தேவையான ஒன்று உள் உறுப்புகள்
அயர்ந்து ஓய்வு கொள்வது தூக்கம்! தூங்கும் போது உயிர் ஆதாரத்தில்
ஒடுங்கும்! சராசரி மனிதனுக்கு தூக்கம் இன்றிமையாதது! ஆனால்
தவம் செய்வோர்க்கு தூக்கம் ஒரு தடை! "தூங்காமல் தூங்கி " சுகம்
பெறுவது எக்காலம் என ஒரு சித்தர் பாடியுள்ளார்!

நாம் கண்மணி ஒளியில் உணர்வை வைத்து தவம் செய்ய செய்ய ஒளிபெறுகி உயிர் ஆற்றல் பெருகி உடல் உள் உறுப்புகள் அதிக சக்தி பெறும், சோர்வடையாது, உற்சாகம் கூடும் உணர்வு பெருக பெருக  ஆனந்தம் மேலிடும் அதுவே ஆனந்த தூக்கம் என வள்ளலார் கூறுகிறார்.

சும்மா சும்மா தூங்கி தூங்கி வழிபவன் முடிவில்
மீளாத தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவான்! இறந்து விடுவான்! தூக்கத்தை
ஒழித்தவனே! உடலை, உணர்வுடையவனாக உற்சாகமாக வைத்திருப்பவனே
நெடுநாள் வாழவான்! அதற்க்கு தவம் தேவை! "ஒருவன் ஒரு நாளைக்கு
ஒருமணி நேரம் தூங்க பழக்கம் செய்வானாகில் அவன் ஆயிரம் வருடம்
ஜீவித்திருப்பான்" என வள்ளலார் கூறுகிறார்!
 
வள்ளலார் சொன்ன தூக்கம்  ஆனந்த தூக்கம்! தூங்காமல் தூங்கி சுகம் பெரும் தவ நிலை! உடல் தூங்காமல் மனம் மயங்காமல் உணர்வுறு நிலையில் சும்மா இருப்பதே தூங்காமல் ஆனந்தமாக தூங்குவது ஆகும்! ஒருநாளைக்கு ஒரு மணிநேரம் தூக்கமில்லா ஆனந்த தூக்கம் கொள்வார் ஆயிரம் வருடம் ஜீவித்திருப்பார் இதுதான் வள்ளலார் வாக்கு!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Saturday 11 March 2017

2..15 அருள்விடை வேட்கை


போகம் கொண்ட புணர்முலை மாதொரு
பாகம் கொண்ட படம்பக்க நாதரே
மாகம் கொண்ட வளம் பொழில் ஒற்றியின்
மோகம் கொண்டஎம் முன் நின் றருளிரோ

நமக்கு போகம் - பேரின்பம் தரும் கண்மணியின் (இடது பக்கம் -
பெண் அம்சம் - சந்திர கலை) ஒளியான, விஷமுடைய
அரவணிந்த - மும்மலம் தான் விஷம் கண்மணி ஒளியான
சிவமே எனப்படும். உன்மீது தீராத காதல் - அன்பு கொண்டு தவம்
செயும் என் முன் வந்து அருள்வீரே என்கிறார் வள்ளலார்.
பெண் இன்பம் - சிற்றின்பம் இது உலகில் நமக்கு வினையைத்
தரவல்லது! பெண் அம்சமான நம் இடப்பக்க கண்மணி ஒளியை
சேர்வது பேரின்பம், வினையை தீர்க்கவல்லது!

சீலமேவித் திகழ் அனல்கண் ஒன்று பாலமேவும் - பாடல் 3

இப்பிரபஞ்சம் முழுவதுமாக திகழ்கின்ற அந்த பரஞ்சோதியை நம்
கண்மணி அனலாகும்! நம் கண்கள் ஒன்றினால்-இணைந்தால் மயிர்பாலம்
வழியே செல்லும்! என்னது செல்லும்? அனல் கண்ணிலிருந்து கிளம்பும்
ஆறுபோல மயிர்ப்பாலம் வழியே உள்ளே பாயும்! நெருப்பாறு
பாய்ந்தோடும் மயிர்பாலம் - நெருப்பாறு என்று சித்தர் பல கூறியது
இதைத்தான்!

அடியார் நெஞ்சத் தருட் பெருஞ்ஜோதி - பாடல் 9

தவம் செய்பவரே அடியார்கள்! தவம் செய்யும் மெய்யடியார் நெஞ்சமாகிய
கண்மணிஒளியே, எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி!

2.14 அறிவரும் பெருமை


நாயினும் கடையேன் என்செய்வேன் பிணியால்
நலிகின்ற நல்வினை அறிந்தும்
தாயினும் இனியாய் இன்னுநீ வரவு
தாழ்த்தனை என்கொலென் றறியேன்

மாயினும் அல்லால் வாழினும் நினது
மலரடி அன்றிஒன் றெத்தேன்
காயினும் என்னைக் கனியினும் நின்னைக்
கனவினும் விட்டிடேன் காணே

மனிதனாக பிறந்த நாம், நம்முள் இருக்கும் நம் கண்
மணிஒளியை - இறைவனின் திருமலரடியை - திருவடியை
பணிவது ஒன்றையே செயலாக - நம்  தவமாக கொண்டால்
இறைவன் நாம் எவ்வளவு கீழானவனாக இருந்தாலும் எவ்வளவு
துன்பத்தில் ஆழ்பவனாக இருந்தாலும், நம் மனம் கல்லாக இருந்தாலும்
இறைவன் நம்மை தடுத்து - காத்து அருள்வான்! கருணையே
வடிவாக கொண்டவனல்லவா ஜோதியான இறைவன்!


காண்பது கருதி மாலொடு மலர்வாழ்
கடவுளர் இருவரும் தங்கள்
மாண்பது மாறி வேறுரு எடுத்தும்
வள்ளல் நின் உரு அறிந்திலே  - பாடல் 2


இறைவனை காண வேண்டுமென, திருமால் பன்றி உருவெடுத்து
அதல பாதாளம் போனார் காண வில்லை! பிரம்மன் அன்னபட்சியாக
உருவெடுத்து ஆகாயத்தில் மேலே மேலே போனார் காணவில்லை!
இது கதை!?

நம் உடம்பில், யோகம் - தவம் செய்கிறேன் என்று பலர் மூலாதாரத்தை நாடி
குய்யத்திற்கு குதத்திற்கும் மத்திய பகுதியில் நினைவை நிறுத்தியோ,
பிராணாயாமம் செய்தோ இன்னும் பல வழிகளிலும் தவம் செய்வர்.
அங்கே காண முடியாது இறைவனை!

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் பன்றி உருவெடுத்தார் என்பதும்
யாதெனின்!, பன்றி தானே மலம் சாப்பிடும்? நம் கண் வெள்ளை விழியே
பாற்கடல்! அதில் பள்ளி கொண்டவன் கண்மணியான கருமை நிற கண்ணன்!

அவன் அங்குள்ள நம் மும்மலங்களை சாப்பிட்டு நம்மை மலமற்றவர்களாக நிமலனாக மாற்றுவார்! கண்ணனை பிடித்தால் காலனை வெல்லலாம்!

இன்னும் சிலர் நம் உடல் சிரசில் மேல் நினைவை நிறுத்தி தவம் செய்வர்! பிராணாயாமம் செய்து காற்றை நிறுத்துவர்! அபாயம்! மூடும் தலையும் இல்லாமல் செய்யும் தவம் இது ! பேராபத்துக்கள் இதனால் ஏற்படும்! பிரம்மன் சிரசுக்கு மேலே போன கதை இதுதான்! காண முடியாது கடவுளை இவ்விதம் போனால்! இந்த இருவழியிலும் செல்வோர்தான் அதிகம் கீழேபோனாலும் காண முடியாது!? மேலே போனாலும் காண முடியாது?!
நடுவிலே - கண்மணி நடுவிலே ஒளியான கடவுளை காண - உணர வேண்டும்.

வழி காட்ட குரு வேண்டும்! விழிகாட்டப் பெற்றால் விழியின் உள் சென்று
இறைவன் - திருவடியை உணர்ந்து தவம் செய்தல் திருமுடி அறியலாம்!
உணரலாம்! காணலாம்! காலை பிடித்தால் தலை தாழ்ந்து வந்து விடுமல்லவா?  திருவடியை பிடித்தால் திருமுடி நம் கைக்கு வந்து விடும்! இறைவன் கருணையே  வடிவானவனல்லவா? திருவடியை தொட்டால் திருமுடியை காட்டுவான்! காணலாம் கண்ணார கடவுளை கண்ணிலேயே!




ஒற்றியூர் அரசே நின்று சிற்சபைக்குள் நடம்
செயும் கருணாநிலயமே நின் மலைச்சுடரே - பாடல் 3

நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் ஒளியே! உள்ளே நின்று
கண்மணியாகிய சிற்சபையில் நடம்செயும் ஆடிக்கொண்டிருக்கும்
சோதியே! அந்த சோதி கருணையை கொண்டது! நிலையாக
கொண்டிருக்கும் கருணை நிலையம்! நின்மலர்ச்சுடர் - மலம்
இல்லாத நின் மலம் - நிமலம் - மும்மலம் இல்லாத சுடரே
நம் கண்மணியான இறைவன்!



ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை




Thursday 2 March 2017

2.12 திருவருள் வேட்கை - 1

தோன்றாத் துணையாகும் சோதியே  - பாடல் 2

நம் கண்மணிக்குள் ஒளியாக துலங்கும் சோதியால் பிரபஞ்சம்
முழுவதும் நாம் காணமுடிகிறது! உலகை பார்க்க உதவும் கண்மணி
சோதியை நாம் பார்க்க முடிவதில்லை! எல்லாவற்றையும் காட்டுவிக்கும்
கண்மணி ஒளி தன்னை காட்டமால் மறைந்து நிற்கிறது. அதனால் தான்
வள்ளல் பெருமான் தோன்றா துணையாகும் சோதியே என்றார்.

அறியாப் பருவத்தடியேனை ஆட்கொண்ட நெறியாம்
கருணை நினைந்துருகேன் - பாடல் 9

வள்ளலார் இராமலிங்க சுவாமிகளை இறைவன் அறியாப் பருவத்திலேயே
- குழந்தை பிராயத்திலேயே ஆட்கொண்டு அருளினார்! வள்ளலாரை
ஆட்கொண்ட நெறி - திருவடியில் - கண்மலரில் - கண்மணி ஒளியில்
தவம் செய்து உள் கடந்து - கடவுளை காண்பதாகும்! அந்நெறியே - செந்நெறி
அருள்நெறி - உலகமக்கள் அனைவருக்கும் வள்ளலார் போதிக்கும்
மரணமிலா பெருவாழ்வு காண வழிவகுக்கும் சன்மார்க்க நெறி
சாகாக் கலையாகும்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

 

2.13 அபராத விண்ணப்பம்


தேவியல் அறியாச் சிறியேனை பிழையைத்
திருவுளத் தெண்ணிநீ கோபம்
மேவிஇங் கையோ கைவிடில் சிவனே
வேறுநான் யாதுசெய் வேனே
மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த
முழுச்சுவை முதிர்ந்தசெங்க ரும்பே
சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே
திருவெற்றி யூர் மகிழ் தேவே
தே + இயல் = தெய்வத்தின் இயல்பு. நம் உடலில் கண்மணியில்
துலங்கும் தெய்வத்தின் இயல்பு நிலை அறியாமல் - ஒளியை
அறியாமல் இருந்தால் வாழ்க்கை வீணாகிவிடும்!

மூவிருமுகம்சேர் முத்தை நமக்கு அருளியது முழுச்சுவை முதிர்ந்த
செங்கரும்பு! முழுச்சுவையை தரும் அமுதத்தை தருவது-நமக்கு அமிர்தம்
கிட்ட வேண்டுமானால் நம் கரும்-பு செங்கரும்பு ஆகி முதிர்ச்சி பெறவேண்டும்.
நம் கண்கள் சிவந்து முற்றினால் - தவத்தால் ஒளி ஏறி ஏறி விளைய விளையத்தானே உள் அமுதம் கிடைக்கும்! அமுதம் கிட்டுமுன் மூவிருமுகம் சேர் முத்து காணலாம். கிட்டும்! மூவிருமுகம் - ஆறுமுகம் ஆறுமுகமான முத்து - காணலாம்! நம் ஒளி பொருந்திய இரு கண்களை நாமே  காணலாம்!

அதை நமக்கு அருளுவது தான் உள்ளிருக்கும் சிவமாகிய தங்க ஜோதி! அந்த ஜோதி, நந்தி - வெள்ளை காளை மீது அமர்ந்த சிவந்த மேனி சிவனை குறிக்கும். வெள்ளை ஒளி பின்னர் சிவப்பு ஒளி குன்றென விளங்கும்.,திரு - இறைவன் ஒற்றி இருக்கும் கண்மணியை
குறிப்பதாகும். எல்லா ஊர் பெயரும் இறைவன் இருக்கும் கண்மணியை குறிப்பதே! ஊரும்  பெரும் உரைப்பது கண்மணி ஒளியையே!


காண நின்றடியார்க் கருள் தரும்பொருளே - பாடல் 5
எல்லோரும் காண - அறிய கண்ணில் மணியில் உள் ஒளியாய்
இருப்பவனே! உன்னை நாடிடும் அடியவர்க்கு அருள் தருபவனே!
உன்னை நாடிடும் அடியவர்க்கு அருள் தருபவனே! பொருளே - மெய்ப்பொருள்
- கண்மணி

சஞ்சிதமறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றி
எம் தவமே - பாடல் 6

நம் பிராரத்துவம் ஆகாமியம் என்ற இருவினைகளைவிட கொடிய
முற்பிறவிகளில் செய்த சஞ்சித வினையைக் கூட இல்லாமலாக்குவது
சண்முகம்  உடையவன் தந்தை - ஆறுமுகம் காட்டும் உள் சிவஒளி.
அந்த சிவம் - ஒளி. நம் கனமணியின் உள்ளே ஒற்றியிருப்பது!
தவம் செய்வார் மட்டுமே உணர்ந்து அறிவதாகும்.

தும்பிமா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத்தூணே
அம்பிகாபதியே - பாடல் பாடல் 7

துதிக்கையுடைய விநாயகனையும் வேலை கையில் கொண்ட வேலவனையும்  பெற்றவன் உள் சிவமே! தோன்றலே - அது தோன்றக்கூடியது எனவே தான் வள்ளலார் தோன்றலே என்றார்! வச்சரத்தூண் - சூரிய சந்திர அக்னி கலைக்கு மேலாக ஏக பாதமாக - தூண் போன்று ஒளியாக ஒளிர்வதால் வைரத்தூணே என்றார் வள்ளலார்! அம்பிகையின் - நமக்கு அமுதம் தரும் தாயின் - சதியின் பதியே சிவம் -  அம்பிகையின் பதியே என் உள் விளங்கும் ஒளிரும் ஜோதியே எனப்படும். அதுவே அம்பிகாபதி என்பது!

சுட்டிலாப் பொருளே சுகப்பெருங்கடலே - பாடல் 10

இறைவன் நம் உடலில் கண்ணில் மணியில் ஒளியாக இருப்பதை சுட்டிகாட்ட
முடியுமா? உணர்த்தத்தான் முடியும்!  அதனால் தான் சுட்டிலாபொருளே
என்றார் வள்ளலார். நம் கண்மணி ஒளியை உணர்ந்து தவம் செய்தால் அதுதான் நமக்கு சுகப்பெருங்கடலாகும்! பேரின்பம் தரும்! அமுதம் தரும்!






Tuesday 28 February 2017

2.12 திருவருள் வேட்கை

மன் அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
இன் அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
முன் அமுதா உண்டகளாம் முன்னி முன்னி வாடுகின்றேன்
என் அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ 


மனிதர்களுக்கு அமுதம் கிடைக்க வழி செய்யும் உன் திருவடியை
எண்ணி தவம் செய்வோர்க்கு நல்ல உணவு கொடுப்பதே மிகவும் மேன்மை
தருவதாகும். எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்கலாம். புண்ணியச் செயல்
என்பது சதா காலமும் இறைவனை, திருவடியில் எண்ணி தவம் செய்வார்க்கு
கொடுக்கும் உணவே! இறைவா நீ அருளுகின்ற அமுதம் உள்ளிருந்து பெற
உன்னி உன்னி உள் புக தவம் செய்து தவம் செய்து வாடுகிறேன்.
என் அமுதமான என்னுள் இருக்கும் பரஞ்சோதியே அருள் புரிவாயாக!

பொறுக்காப் பத்து

பொறுக்காப் பத்து

மெய்ய ருள்ளகத்தில் விளங்குநின் பதமாம்
விரைமலத் துணைதமை விரும்பாப்
பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல்
பொறுக்கிலேன் பொறுக்கிலேன் கண்டாய்
ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
அளித்திடும் தெள்ளிய வமுதே
தையலர் மயக்கற் றவர்க்கருள் பொருளே
தணிகை வாழ் சரவண பவனே


சத்தியமாக, நெறியோடு வாழும் அன்பர் உள்ளத்தில், உள்-அகத்தில்
கண்மணி உள்ளே -நம் மெய் - உடல் உள்ளே விளங்கும் இறைவா
உன் திருவடியாகிய இரு கண்மணி ஒளியே! மலர் துணை - இருமலரடி.
ஐயரும் இடப்பால் அம்மையும். நம் வலது கண் சிவம் இடதுகண் சக்தி.

சிவமும் சக்தியும் சேர்ந்தால் பிறப்பான் ஆறுமுகன். வருத்தி அளித்திடும்
தெள்ளியயமுதே - நாம் தவம் செய்து நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து
என்ற நிலையே இங்கு வருந்தி என்கிறார் வள்ளலார். அப்படி தவம் செய்கையில்
அமுதமான ஆறுமுக ஒளி கிட்டும். அது பெண்மோகம் கொண்டவர்க்கு கிட்டாது.
அப்பொருளே தணிகை வாழ சரவணபவன் மெய்ப்பொருள்.

தன்மயக்கற்றோர்க் கருள் தரும் பொருளே - பாடல் 2

தன்மயக்கம் - நான் என்ற மயக்கம் மும்மலம் உடையவர்களுக்கு கிட்டாது
அது இல்லாதவர்க்கு அருள்தரும் மெய்ப்பொருள்.

சக்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே - பாடல் 7



Saturday 18 February 2017

2.11 கொடை மடப் புகழ்ச்சி


திரப்ப டும்திரு மால் அயன் வாழ்த்தத்
தியாகர் என்னும் ஓர் திருப்பெயர் அடைந்தீர்
வரப்ப டுந்திறத் தீர் உமை அடைந்தால்
 றந்தொரு வார்த்தையும் சொல்வீர்
இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
யாதுக் கையநீர்  இப்பெயர் எடுத்தீர்
உரப்ப டும்தவத் தோர் துதித்  தோங்க
ஓங்கு சீர்ஒற்றி யூர் உடையீரே


நம்கண் மணியினுள் விளங்கும் ஜோதியே சிவமே தியாகர்
என மாலும் பிரம்மனும் வாழ்த்தினர். திருவாகிய ஒளி ஒற்றியிருக்கும்
ஊர் கண்மணி! அதனால் இவ்வூர் திருவொற்றியூர் எனப்பட்டது, திருவொற்றியூரில்  குடிகொண்டிருக்கும் இறைவன் ஜோதியே தியாகராசர் என்றழைக்கப்பட்டார்.

தீவிர சாதனை செய்து உன்னையே நாடிடும் அன்பருக்கு அருள்செய்யே!
உன் வாய் திறவாயே! அருளை வேண்டி புலம்பும் உன் அடியவர்களுக்கு
அருள் தியாகராசா! என வள்ளலார் வேண்டுகிறார்.
 

வெள்ளிமாமலை வீடென உடையீர் விளங்கும்
பொன்மலை வில் எனக் கொண்டீர்
எள்ளில் எண்ணெய் போல்    - பாடல் 2


நமது கண்மணி வெள்ளைவிழிக்கு நடுவே உள்ளதல்லவா
அதைத்தான் வெள்ளிப் பனிமலை என்றார். பனிபோல் பளிங்குபோல்
கண் உள்ளது. நாம் தவம் செய்து வில் போன்று கண்ணிலிருந்து உள்ளே
பாயும் அம்புபோல் ஒளி ஊடுருவிச் சென்று முச்சுடரும் ஒன்றாகி காணும்
ஜோதி தங்கம் போல் தகதகக்கும்! பொன்போல் மின்னும் பேரொளியை
காணலாம்.  இறைவன் எள்ளில் எண்ணெய் போல் நம்முள் கலந்துள்ளான்.
பாலில் நெய் போல் இருக்கிறான். எள்ளை செக்கிலிட்டு ஆட்டவேண்டும்.
அப்போது தான் எண்ணெய் கிடைக்கும். பாலைகாய்ச்சி உறை விட்டு
தயிராக்கி கடைந்து வெண்ணை எடுத்து அதை உருக்கினால் தான் நெய்!

கோயிலாக என் நெஞ்சகத் தமர்ந்த குணத்தீர்  - பாடல் 10
என் நெஞ்சமே கோயிலாக கொண்ட இறைவா! ஐந்து பூதங்களும்
சேர்ந்த இடமே நெஞ்சம். மனம் இருக்கும் இடமே எண்ணம் உதயமாகும்
இடமே நெஞ்சம். அது நம்கண்கள்.

Wednesday 15 February 2017

2.10 திரு முல்லை வாயில்



10 திரு முல்லை வாயில்

தாயின் மேவிய தற்பர மேமுல்லை
வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
தேயின் மேவி இருந்தனன் என்னையே


தாயை விட பெருங்கருணைகொண்ட பரஞ்சோதியே! கண்மலர்
வாயில் உள் துலங்கும் மாமணி ஒளியே! நீ இருக்கின்ற என் கண்மலரில்
பொருந்திய உன் திருவடியை தொழாமல் - அறியாமல் இருந்தேனே !

கண்குரு மணியே நெஞ்சினன் கண்டதும் கண்டதே - பாடல் 3

கண்ணிலுள்ள மணியிலுள்ள ஒளியே நமகுரு! முதலில் நெஞ்சில் நம்
கண்மணியில் உணர்ந்ததும் நாம் காணலாம் ஒளியே!


2.9 அருளியல் வினாதல்



தேன்என இனிக்கும் திருவருட்கடலே
தெள்ளிய அமுதமே சிவமே
வான் என நிற்கும் தெய்வமே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
ஊன் என என்ற உணர்விலேன் எனினும்
உன் திருக் கோயில்வந் தடைந்தால்
ஏன் எனக் கேளா திருந்தனை ஐயா
ஈதுநின் திருவருட் கியல்போ


திரு-முல்லை -வாயில் - திருவாகிய ஒளி முல்லை - மலர் - வாயில்
ஒளியானது கண்மலர் வாயில் - கண்மணி மத்தியிலுள்ள துவாரத்தின்
உள் ஒளியே திருமுல்லை வாயில், திருவாகிய இறைவன் இருக்கும்
வாசல் மலர். கண்மலரின் வாசல் - மத்தியிலுள்ள ஓட்டை!

அந்த திருமுல்லை வாயிலில் வாழ்வது மாசிலா மணி - குற்றமில்லாத
மணி - ஒளி. அந்த மணி ஊன் - நம் உடலில் உணர்வாக ஒளியாக
இருப்பதை அறியவேண்டும். அறிந்தால் உணர்ந்தால் அந்த கடல்
தேன் என இனிக்கும் திருவருட்கடலாகும். தூய மத அமுதமாகும்.
சிவமாகும் வான் என நிற்கும் உயர்ந்து பரந்து நிற்கும் ஜோதியாகும்.

Saturday 4 February 2017

2.8 காட்சிப் பெருமிதம்


திரைப டாதசெ ழுங்கட லேசற்றும்
உரை படாமல் ஒளிசெய் பொன்னே புகழ்
வரைபடாது வளர் வல்லி கேசநீ
தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ

அலை இல்லாத கடல் - நம் கண்ணாகிய கடல். உரைக்காமலே
பார்த்த மாத்திரத்தேலே சொல்லி விடாமல் இது பத்திரை மாற்றுப்
பசும்பொன் என்று!? அந்த அளவு ஒளிர் விட்டு பிரகாசிக்கும் ஒளி
நம் கண்மணி ஒளியில் உள்ளது! இறைவா உன்புகழ் சொல்லி மாளுமா?
நீ தரைபடா கந்தை சாத்தியது - இறைவா நீ தரையில் படாமல் - கந்தை
- ஓட்டை - சாத்தியது போர்த்தியது மூடியது! அதாவது நம் கண்மணி
மத்தியிலுள்ள ஓட்டையே கந்தை என்பதாகும்! தரைபடாமல் என்றது
கண்மணி நம் உடலை பற்றியிராமல் இருக்கும் தன்மையே! அலையிலா
கடலில் நம் கண்மணியினுள் பிராணநீரில் மிதந்து கொண்டிருக்கிறது.
நம் கண்மணி! நீர்மேல் இருக்கிறது நம் கண்மணி!

தந்தையே திருவலி தாயத் தலைவா நீ - பாடல் 2

எவ்வுயிர்க்கும் தந்தையான பரமாத்மாவே நீயே தலைவன்! திருவாகிய
நீ கண்மணியிலே வலி உணர்வு 'தா'  அப்போது தான் திரு - வலி - தா -அம்
என்பது!

பாலை கொண்ட பராபரா நீ பழஞ் சேலை கொண்ட திறம் - பாடல் 3

பாலை கொண்ட பராபரா -வெள்ளை விழியே பாற்கடல் எனப்படும்
அதில் கருவிழியில் மணியில் உள் ஒளியானவனே பராபரம்! நீ
பழஞ்சோலை கொண்டது - கண்மணி மத்தியில் சார்த்தியிருப்பது
நம் பழைய வினைகள் - அதுவே பழஞ்சோலைஎன்றார் வள்ளல் பெருமான்.

நீ தொடுத்த கந்தையை நீக்கி துணிந்தொன்றை உடுத்தவர் இலையோ - பாடல் 5

கண்மணி மத்தியிலுள்ள ஓட்டையை மறைத்துள்ள வினையாகிய
பழைய சேலையை மாற்றி - அதாவது வினைகளை சுட்டெரித்து
உள் விளங்கும் ஒளியால் தங்கமென ஜொலிக்கும் ஒளியால்
ஆடை புனைய வேண்டும்!

பரதேசி போல் இருந்தீர் - பாடல் 8

பரமாகிய வெட்டவெளியில் பரவெளியில் தேசி - வசிப்பவர்
பரதேசியாகும். நமகண்மணி ஒளி பரதேசியாகிய இறைவனே
வெளியிலே விளங்கும் ஒளியே!


Thursday 26 January 2017

2.7 அபராத் தாற்றாமை

துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
துட்டனேன் தூய்மை ஒன் றில்லா
எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
என் செய்தால் தீருமோ அறியேன்
பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
பரமனே எம்பசு பதியே
அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
ஐயனே ஒற்றியூர் அரைசே

மனிதன் தீய குணங்களால் கெட்டு சீரழிந்து போகிறான்.
உடலும் மனமும் தூய்மையிலாது போகிறான். குப்பைத்
தொட்டியில் போடும் எச்சில் போல் ஆகிவிடுகிறான்.
பாவம் செய்து செய்து பாவியாகி விடுகிறான்.

யாவர்க்குமாம் இறைவர்க் கொரு பச்சிலை இறைவனுக்கு
பால்பழம் சித்திரான்னங்கள் ஆடம்பர பூசை ஒன்றும் வேண்டாம்
ஒரு பச்சிலையை எடுத்து உள்ளன்போடு அவனை நினைத்து
அவன் திருவடியில் சமர்பித்தாலும் போதுமே! பக்தி செய்தால்
கிட்டும் குருவடி! மேலும் போகலாம்அரனடி! திருவடி! எம்பசுபதியே
எம்பசு என்றால் சீவன்! பசுபதியே என்றால் என் சீவனுக்கு
சீவனானவனே! சீவனுக்குள் சிவனானவன்! ஜோதியுள் ஜோதி!
நமக்கு அச்சாணியாக விளங்குபவன். நம் உடலாகிய தேர்
ஓட அச்சாணியாக அச்சிலாக இருப்பவன் ஒளியாகிய இறைவன்.

கண்மணி சக்கரத்தின் அச்சாணியாக இருப்பவன் ஒளியாகிய
இறைவனல்லவா? கண்மணியில் ஒற்றியிருக்கும் ஒளி!
அச்சாணி இல்லாத தேரை பாடையில் ஏற்றவேண்டியது தான்!
உயிராகிய ஒளியாகிய அச்சாணி கழன்று விட்டால் இறந்தவனாகிறான்.
அவனை - சிவமற்ற சவத்தை தேர்ப்பாடை கட்டி எட்டுகாலில்
நாலுபேர் சுமந்து சுடுகாட்டிலே போடுவார்!?

சிவம்இருக்கும் போது எட்டுகாலில் - எட்டாகிய இறைவன் இருக்கும்
திருவடியில் போகத்தெரியாதவனை சிவம் போன பின்பு சுடு காட்டில்
எட்டுகாலில் - நாலுபேர் சுமந்து போவார்! உயிராகிய சிவம் இருக்கும்
போது அந்த ஒளியை அடையாத உன்னை சவமான பின்  பெருந்தீ
மூட்டி உடலை போட்டுவிடுவர். செத்த பிறகாவது உன் உடல் ஒளியாகட்டுமே
என்ற அற்ப சந்தோசம் உன் உறவினர்களுக்கு!! மனிதனாக பிறந்தால்

வினையற்று திருவடியை சரணாகி உடலை ஒளியாக்கி பேரின்பம்
பெறனும் ! இதுவே மிக மிக உயர்ந்தநிலை!! நாம் ஒளியாகனும்!
இல்லையேல் ஒளியிலே வைத்துவிடுவர்!

உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே - பாடல் 3 

தவம் செய்து செய்து உறுதிப்பட்ட உள்ளத்தில் கண்மணி உள்ளில்
விளங்கும் ஒளிவிளக்கு!

கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே - பாடல்5

நம் கண்ணிலே விளங்கக் கூடிய மணியே நாம் அருமையாக
செய்த தவத்தால் பெற்ற பயனாகும்.

ஐந்தாம் பூதமே ஒழியாப் புனிதமே புதுமணப்பூவே பாதமே
சரணம் சரணம் - பாடல் 10

பஞ்சபூதங்களும் ஒன்றான என்றும் புனிதமான ஒளியே! 
என்றும் மனமுள்ள கரும் - பூவே - கண்மணி பூவே. கருப்பு
பூ  கண்மலர் பூ ஒன்றே கருப்பு -பூ -  கரும்புஎன்றானது . 
ஒப்புயர்வுற்ற இந்த திருவடியே  சரணம் சரணம் என்றிருப்பவரே
உய்வர்! மரணமிலா பெருவாழ்வு பெறுவார்!