Sunday 23 April 2017

2.37 நற்றுணை விளக்கம்


எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்
இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ
அஞ்ச வேண்டிய தென்னை என் நெஞ்சே
அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்
விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
விளங்க வேண்டியும் மிடற்றின் கண் அமுதா
நஞ்சை வேண்டிய நாதன் தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம் பெறும் துணையே

ஐம்புலன்கள் வழி மனம் செல்லும் - வினைவழி மனம் செல்லும்.
இப்படி வாழ்ந்து துன்பமடைவது தான் மிச்சம். நமக்கு அஞ்சேல்
அஞ்சேல் என அபயம் தருவது நான்கு வேதங்களும் சொல்வதும்
எல்லா தேவர்களும் போற்றும், எல்லாம் வல்ல இறைவனின்
திருவடியேயாகும்.  நமசிவய  என்பது பஞ்சபூதங்களை
குறிப்பதாகும். பஞ்ச பூதங்களும் சேர்ந்த இடமே நம் கண்மணி!
நமச்சிவாயம் காண் என்கிறார் வள்ளலார்.

கண்ணை காண வேண்டும். அது தானே தவம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Wednesday 19 April 2017

2.36 அருள் திறத்து அலைச்சல்


நறுமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
உறை மணக்கும் பூம்பொழில் சூழ் ஒற்றியப்பா உன்னுடைய
மறை மணக்கும் திருவடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ

பூவில் மனம் உள்ளது போல் கண் மலரும் மணக்கும்! பூவில்
தேன் உள்ளது போல் கண் மலரினுள் ஒளி பெருகி தேன் சுரக்கும்!
அதை நாம் அருந்தலாம்! சடை போல் ஒளிக்கற்றை உடையது.
கண்மணி ஒளி! வற்றாத நதி போல ஒளி ஆறு ஓடி வரும்!

கண்மணிமுன் விஷமாக மும்மலம் உள்ளது. அதனால் தான் கண்மணி
நிறம் கருநீலம்! "கறை கண்டன்"என்றனர் சித்தர்கள். "கண்டதுண்டமாக"
உள்ளது. கண்டமானது கறைபடிந்தது. இரு கூறாக உள்ளது என பொருள் .
இரு கண் எனப்படும்! வேதங்கள் போற்றும் உன் பொன்னார் திருவடியை
பாடிப்பாடி என் வாயும் மணக்குமே! ஒற்றியூரானே, கண்மணியே உன்
பெருமையை கூற இயலாது.

நீறடுத்த எண்தோள் - பாடல் 3நீர்  சொரியும் எட்டான - கண்கள்

கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள் கரும்பே
ஒண்மணியே தேனே என் ரொற்றியப்பா - பாடல் 13

இறைவன் இருப்பிடம் - கண்மணியில் உள்ளில் ஒளி! அது
கற்ப விருட்சம் போன்று நமக்கு எல்லாம் தரவல்லது! கரும்பை
விட தேனை விட இனிமையான அமுதம் தரக்கூடியது!
கண்மணியில் உள்ளே ஒற்றியிருக்கும் அப்பன் தான் அவன்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்



Monday 17 April 2017

2.35 ஆனா வாழ்வின் அலைசல்



துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத்
துடுக்கினை ஒடுக்குறும் காமக்
கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம்
கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த
உததிபோல் கண்கள் நீர் உகுப்பார்
அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள்
அண்ணலே ஒற்றியூர் அரசே

நாம் எப்படி தவம் இயற்ற வேண்டும் என்கிறார் வள்ளலார்! உள்ளிவாய் மடுத்து உள் உருகி ஆனந்த கடல் போல் கண்ணீர் உகுப்பார்!
கண்மணி உள்ளே உணர்வு பெற்று தவம் செய்கையில் உளம் உருகும் ஊன் உருகும் கண்ணீர் கடல் போல், வற்றாத கங்கையென ஊற்றெடுத்து பாயும்! அங்ஙனம் தவம் செய்து வரும் போது உள்ளே அமுதம் சொட்டும்! அதை அருந்தி அண்ணல் மலரடியை சேரலாம்! இதை
விடுத்து பெண் மாயையில் மனம் இழந்தால் மதிகெடும்! உடல் கெடும்!
உயிர் போய்விடும்!

அரியது நினது திருஅருள் ஒன்றே அவ்வருள்
அடைதலே எவைக்கும் பெரியதோர் பேறு - பாடல் 3

நாம் மனிதனாக பிறந்து - நல்ல படியாக பிறந்தது அரிது!
புண்ணியம். அரிதாக கிடைத்த இம்மானுட பிறவியில்
கிடைத்தற்கு அரியது இறைவனின் திரு அருள் ஒன்றே!
எப்பாடு பட்டாயினும் இறையருளை பெறவேண்டும்!
இதைவிட பெரும் பேறு இவ்வுலகில் வேறில்லை!

அருள்வதுன் இயற்கை உலகெலாம் அறியும்
மருள்வதென் இயற்க்கை - பாடல் 5

அருள்வடிவானவன் இறைவனவன்! கருணையே உருவானவன்தான் இறைவன். இதை உலகம் அறியும்! அது போல மருளே மயக்கமே - மாயையால் தடுமாறுதலே மனித இயல்பு! வினைகளால் பிறந்த
- மும்மலத்தால் சூழப்பட்ட மனிதன் அதிலிருந்து விடுபட ஒளியை நாட வேண்டும்! அந்த ஒளி - கருணையே வடிவான இறைவன் நம் கண்மணி உள்ளிலேயே ஒளியாக துலங்குகிறான்! அறிக! உணர்க!
நிலைக்க!
-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Sunday 16 April 2017

34. அவல மதிக்கு அலைசல்


மண்ணை மனத்துப்  பாவியன் யான்
மடவார் உள்ளே வதிந்தளித்த
புண்ணை மதித்துப் புகுகின்றேன்
போதம் இழந்தேன் புண்ணியனே

எண்ண இனிய நின் புகழை
ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்
தண்நல் அமுதே நீஎன்னைத்
தடுத்திங் காளத் தக்கதுவே


மண்போன்று உணர்ச்சியற்ற பாவி - கருணை அன்பு இல்லாத
மனிதன்! பெண் மயக்கத்தில் திரியும் மனிதன்! போதமில்லாதவனாகும்!
போதம் உள்ளவன் - உணர்வு உள்ளவன் உலகில் நல்லது கெட்டது
தெரிந்து இறைவனை உணர்ந்து வாழ்வான்!  போதங் கெட்டான்! முடிவில்
போதமற்றுப் போவான்!! போதம் உள்ளவன் மேலும் மேலும் போதம் பெற்று
- உணர்வு பெற்று  என்றும் வாழ்வான்! போதமற்றால் - மரணம்!

நம் போதத்தை இல்லாதாக்கும் மண்  பெண்  பொன் போன்றவற்றில் மதி
மயங்காதே! மரம் போல் உணர்வற்று போகாதே! பரம்பொருளின் பெரும்
புகழைப் பாடி பணிந்தால் குளிர்ந்த தெள்ளிய அமுதம் தந்து, நம்மை
தடுத்தாட் கொள்வான்!  குளிர்ந்த தாமரை திரு வடிவாகிய நம் கண்மலரில்
உணர்வு பெற்று - குருமூலமாக உபதேசம் பெற்று உணர்வு பெற்று தவம்
செய்து உணர்வை பெருக்கினால்! உணர்வு பெருக பெருக என்றும் போதம்
நிலைத்திருக்கும்! போதம் இருந்தால் மரணமில்லை!

வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே - பாடல் 6
காமத்தை - மாயையை எரிப்பது மெய்ஞ்ஞான விளக்கான நம்
கண்மணி ஒளியே! நம் கண்மணி ஒளியை உணர்வால் பெருகச் செய்தால்
அதை மறைத்து கொண்டிருக்கும் மும்மலங்களுள் ஒன்றான மாயை - காமம்
- உணர்வால் பெருகும் ஒளியால் எரிந்து போகும்! இது அனுபவம்!
காமம் அழிந்தால் தான் மெய்ஞ்ஞானம்!

Thursday 13 April 2017

2.33. ஆனந்த பதிகம்


குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற்
கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
படிகொள் நடையில் பரதவிக்கும்
பாவியேனைப் பரிந்தருளிப்
பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த
பொன்னே உன்னை போற்றி ஒற்றிக்
கடிகொள் நகருக்கு வரச் செய்தாய்
கைம்மா றறியேன் கடையேனே

நமது உடம்பில் நவ துவாரங்களில் வெளிப்படுவது அழுக்கே!
-மலமே! நமது உடலில் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை
உள்ள அசுத்தங்கள், எல்லாவற்றிற்கு மேலான பெரிய மலம் -
மும்மலம் சூழ்ந்த நாம் உலகில் வாழ்ந்து தொலைக்கிறோம்!?
இப்படிப்பட்ட மலம் நிரம்பிய உடலை பெற்ற நமக்கு, நிமலன் -
மலம் அற்றவனாகிய இறைவன் வெள்ளை விழிக்கு மத்தியிலே
கருவிழியின் மத்தியிலே மணியாய் அதனுள் ஒளியாய் துலங்கி
அருள்கிறான்!  யாவர்க்கும் அருளும் அருள்மயமான,
கருணைமயமான  கண் - கண்ட - கொண்ட - தெய்வம்! 
அருட்பெருஞ்சோதி!

ஓதல் அறிவித்து உணர்வு அறிவித்து
ஒற்றியூர் சென்று உனை பாட காதல்
அறிவித்து ஆண்டாய் - பாடல் 2

இறைவா உன் புகழை ஓதிட அருள் தந்தாய்! உன்னை என்னை உணர செய்தாய்!என் ஒற்றியூரான கண்மணி உள் சென்று தவம் செய்ய வைத்தாய்! உன்மீது  தீர காதல் கொள்ள வைத்தாய்!

Tuesday 11 April 2017

2.32 அடிமைத்திறத்து அலைசல்


தேவர் அறியார் மால் அறியான்
திசைமா முகத்தோன் தான் அறியான்
யாவர் அறிவார் திருஒற்றி
அப்பா அடியேன் யாதறிவேன்
மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே
முதிர்தீம்பாலும் முக்கனியும்
காவல் அமுதும் நருந்தேனும்
கைப்ப இனிக்கும் நின்புகழே

நன்கு சுண்டைக்காய்ச்சிய பாலும், முக்கனியும் நல்ல அமுதமும் தேனும் கூட கசக்கும்! ஆனால் இறைவா உன் புகழ் பாடும் தேவாரங்கள் பாடப் பாட வாய் இனிக்கும்! மனம் இனிக்கும்! தேவரும் மூவரும் அறிய தெய்வத்திருவடியை நம் கண்மணியில்
கலந்து நிற்பவனை அறிபவனே பாக்கியவான்!

உன் தன் அருட்புகழைக் கோடிஅளவில்
ஒரு கூறும் குணித்தார் இன்றி - பாடல் 11

இறைவா உன் அருளை - கருணையை கோடியில் ஒரு பங்கு கூட சரிவர உணர்ந்தவர் அறிந்தவர் இல்லையோ!



2. 31 . பற்றின் திறம் பகர்தல்



வாணரை விடையூர் வரதனை ஒற்றி
    வாணனை மலிகடல் விடமாம்
ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம்
    உடையனை உள்கிநின் றேத்தா
வீணரை மடமை விழலரை மரட்ட
    வேடரை மூடரை நெஞ்சக்
கோணரை முருட்டுக் குறும்பரைக் கண்டால்
    கூசுவ கூசுவ விழியே


வெள்ளை விழியாகிய நந்தியின் மேல் அமர்ந்தவன்! ஒற்றிவாணன் -
கண்மணியில் ஒற்றி உள் இருக்கும் ஒளி! பாற்கடலாகிய வெள்ளை
விழி தவத்தால் கருவிழி விஷமாகிய மும்மலத்தை உண்பவன் சிவம்.
உள் ஒளி! எல்லாம் உடையவன் எங்கும் நிறைந்தவன் அவனை உள்ளே
நிலை நிறுத்தி தவம் செய்தாலே நாம் உய்யும் வழியாகும்! பரம் பொருளை
காணவே நம் கண்கள்! அதெல்லாமல் உலகில் உள்ள வஞ்சகர்களை காண
நம் கண் கூசவேண்டாமா? தீயதை பார்க்காதே! தீயதை கேட்காதே! தீயதை
பேசாதே!

Monday 3 April 2017

2.30. நெஞ்சறை கூவல்

கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார்
    கங்கை நாயகர் மங்கைபங் குடையார்
பண்கள் நீடிய பாடலார் மன்றில்
    பாத நீடிய பங்கயப் பதத்தார்
ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி
    யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம்
மண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ
    மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே 


       மூன்று கண்களை உடையவர் ! கண்மணியில் கரையாக - விஷமாக
மும்மலத்தால் மறைக்கப்பட்டவர் ! வற்றாத நீர் சுரக்கும் ! இடப்பக்கம்
பெண் அம்சம் ! சொல்லமுடியாத அளவு பாடல்களால் பாடப் பெற்றவர் !
தாமரை திருவடிகள் நீண்டு உயர்ந்தவர் ! மனிதர்களாகிய - ஆத்மாக்களாகிய
- பெண்களாகிய நாம் தில்லை அம்பலவனுடன் ஆட விரும்புவதால்
நமக்காக நம் கண்மணி உள் நின்று ஆடுபவர் !
     
        மண்ணிலே போகின்ற மாலையை போன்று நம் உடலும் போய்விடாது
இருக்க , பூமாலையால் அல்ல ! நல்ல தமிழ் பாமாலை சூட்டி மகிழ்வோம் !
வாருங்கள் என்னுடனே என வள்ளலார் - சற்குரு அழைக்கிறார் !

        திருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்
        கருவின் நின்றஎம் போல்வர்
        உருவின் நின்றவர்அருஎன நின்றோர் - பாடல் 3

    மகாவிஷ்ணு சக்கராயுதம் பெற வேண்டி இறைவனை நோக்கி தவம் செய்தார் ! 1000 மலர்களால் அர்ச்சனை செய்ய எண்ணினார் . 999 மலர்தான் இருந்தது . ஒருமலர்  குறையவே தன் கண்மலரையே எடுத்து எல்லாம் வல்ல அருட் பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு சார்த்தினார் . அர்ச்சித்தார் . இறைவனுக்கு திருமால் கண்ணை சார்த்தியதால் அதுமுதல் நாம் இறைவனுக்கு சார்த்தும் எல்லாம் திருக்கண் சார்த்துதல்
திருக்கம் சார்த்துதல் என்றாயிற்று !

    இறைவன் அருள் பெற வேண்டுமாயின் , கருவில் நின்று எம்போல்வர் - கருவில் நின்று வள்ளலார் போன்ற ஞானிகள் ஆசி - அருள் அவசியம் வேண்டும் ! குருவருள் வேண்டும்!

    நாம் தாயின் கர்ப்பத்தில் உருவாகும் போது முதன்முதலில் உருவாவது ! அதுவே கரு ! தாயும் தந்தையும் சேர்ந்து முதலில்உருவாவது , அதுவே கரு ! அது தான் கண் ! கர்ப்பத்தில் முதலில் உருவாவது கண்ணே ! அந்தக் கண்மணி ஒளியே கரு ! "அந்தக்கரு விந்து நாதம் அது அன்னை உதிரமோடு கூடிய சூதம் அந்த கரு ஐந்து பூதம்" என சித்தர் ஒருவர் பாடியுள்ளார் . அந்தக் கருவிலே நிலைத்து நின்றால் ஞானம் பெறலாம் ! அப்படி ஞானம் பெற்ற வள்ளலாரை நாம் குருவென கொண்டால் அவர் வழிகாட்டி நம் துயர் மாற்றி நம்மையும்ஞானம் பெறச் செய்து இறைவனிடம் சேர்ப்பிப்பார் !

    இறைவன் சோதியாக உருவாகி நம் உள் துலங்குகிறார் ! உருவமில்லா
வெளிச்சம் என திகழ்பருவம் அவரே ! எங்குமான ஒளியானவர் ! உருவமும்
அருவமும் ஆனவர் இறைவனே !

2.29. நெஞ்சைத் தேற்றல்


சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று
   திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சே
ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி
   ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்கு
மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து
   வாழ்கின் றார்அவர் மலரடி வணங்கி
நன்று வேண்டிய யாவையும் வாங்கி
   நல்கு வேன்எனை நம்புதி மிகவே

திருவருட் பிரகாச வள்ளல் பெருமான் நமக்கு கொடுக்கும் உறுதி மொழி இது !
மனோ வலிமை இல்லாதவர்களே , உலகிலுள்ள வஞ்சகரை அடுத்து ஒன்றும் பெறாமல்  திண்டாடாதீர்கள்! பயப்பட வேண்டாம் ! குருவாக என்னை கருதி என்னுடன் சேர்ந்து , திருவாகிய இறைவன் - சோதி ஒற்றியிருக்கும் கண்மணியில் உள் துலங்கும்  வள்ளலார் - இறைவன் திருவடியை வணங்கி சரணடைவோமாக !நான் உங்களுக்கு வேண்டிய யாவும் அந்த அருட்பெருஞ்ஜோதி இறைவனிடம் வாங்கி தருகிறேன் . என்னை நம்புங்கள் ! என உலக மக்களை அன்போடு அழைக்கிறார் .

Sunday 2 April 2017

2.28 நாள் அவத்து அலைசல்


இன்றிருந் தவரை நாளைஇவ் வுலகில்
இருந்திட கண்டிலேன் ஆஆ
என்றிருந்த தவத்தோர் அரற்றுகின் றனரால்
ஏழையேன் உண்டுடுத் தவமே
சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால்
செய்வன செய்கிலன் அந்தோ
மன்றிந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே
வள்ளலே ஒற்றியூர் வாழ்வே


இன்று இருக்கும் நாம், இப்போது இருக்கும் நாம்
அடுத்த ஒருமணி நேரத்திற்குள் என்ன ஆவோமோ?
இருப்போமா? யார் அறிவார்! இருக்கிற கொஞ்ச காலத்தில்
நல்லதை எண்ணி நல்லதை சொல்லி நல்லபடியாக வாழ்ந்தால்!
நிம்மதி கிட்டும் தம்மதி பெருகும். வாழ்வாங்கு வாழலாம்!
அதை விடுத்து கண்டதே காட்சி கொண்டதே கோலம்
என உண்பதும் உடுத்துவதும் உறங்குவதுமாக வீணில்
காலத்தை கழிப்பதால் ஒரு பயனுமில்லை! எல்லோருக்கும்
அம்பலமாக திருவாகிய இறைவன் அவரவர் கண்மணியில்
ஒற்றியிருப்பதை குருமூலம் உணர்ந்து உபதேசம் தீட்சை பெற்று
தவம் செய்தால் பெறலாம். முக்தி இன்பம்! மரணமிலா பெருவாழ்வு!

நீரின்மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து
நிலைப்படா உடம்பினை - பாடல் 3


தண்ணீரில் எழுதும் எழுத்து எவ்வளவு விரைவில் இல்லாது
போய்விடுமோ அதைவிட இந்த உடம்பு வேகமாக அழிந்து விடும்!
உயிர் பிரிந்து விடும்! உயிர் பிரியாது, உடல் அழியாது இருக்க
என்றும் நிலைக்க இறைவன் நம்முள் ஒளியாக துலங்குவதை
அறிந்து உணருங்கள்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்