Thursday 31 August 2017

55. நாடக விண்ணப்பம்

மடுக்கும் நீர்உடைப் பாழ்ங்கிண றதனுள்
வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம்
எடுக்கின் றோர்என இடையிற்கை விடுதல்
இரக்கமுள்ளளவர்க் கியல்பன்று கண்டீர்
தடுக்கி - லாதெனைச் சஞ்சல வாழ்வில்
தாழ்த்து லார் தோழும் ஒற்றியூர் உடையீர்
ஞான நாடகம் நவிற்றுகின் றீரே

பாழுங்கிணற்றில் வீழ்ந்த ஒருவனை காப்பாற்ற தூக்கி
பாதியில் கைவிட்டால் அது இரக்கமுடையவர் செயலாகுமா?
அதுபோல துன்பத்தில் அழுந்தி பரிதவிக்கும் என்னை மீண்டும்
மீண்டும் துன்பத்தில் ஆழ்த்துவது அழகாகுமோ! இறைவா இது
உன் கருணைக்கு தகுமோ? என்துன்பமெலாம் நீக்கி வினைமாற்றி
உன்னடி சேர அருள்புரி நடுக்கிலார் தொழும் ஒற்றியூர் உடையீர்!
இறைவனை தன் கண்மணியில் ஒளியாக கண்டு தொழும் அடியார்கள்
எதைக்கண்டும் நடுங்க மாட்டார்கள். எதற்கும் பயப்படமாட்டார்கள்,
அவர்கள்தான்  மெய்யடியார்கள்! "நாமார்க்கும் குடியல்லோம் நமனை
அஞ்சோம்"என நாவுக்கரசர் நாம் யாருக்கும் அடிமையில்லை
எமனைக் கண்டு பயமில்லை என உறுதியுடன் கூறுகிறார்!
"பணியோம் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே" என
அபிராமி அன்னையை பணிந்த நான் உலகில் வேறு எவரையும்
பணியமாட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறுகிறார்! பயம் கடுகளவேனும்
இல்லாதவனே ஞானி! ஞானிகளின் இயல்பே இதுதான்! நாம் ஞானம் பெற
நம்முள் இறைவன் ஆடும் நாடகம் வினைகள் தந்து நம்மை செம்மைப்படுத்துவதுதான்!
நம்மை செம்மைப்படுத்துவது தான்! நம்மை காத்தருள்வதுதான்! ஞான நாடகம் இது!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

56 கொடி விண்ணப்பம்


56 கொடி விண்ணப்பம்
மாலை ஒன்றுதோள் சுந்தர பெருமான்
மணத்தில் சென்றவன் வழக்கிட்ட தெனவே
ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம்
உவந்து தொண்டன்என் றுரைப்பிரேல் என்னை
வேலை ஒன்றல மிகப்பல எனினும்
வெறுப்பி லாதுளம் வியந்துசெய் குவன்காண்
சோலை ஒன்றுசீர் ஒற்றியூர் உடையீர்
தூய மால்விடைத் துவ சக்தி னீரே

இறைவா உன் வன் தொண்டனுக்காய் ஓலைகாட்டி வழக்கிட்டு
ஆட்க்கொண்டாயே அடியேனை உன் தொண்டனாக்கி பணியிட்டால்
எவ்வேலையும் உன் அருள் வலத்தால் உவப்புடன் பணிசெய்வேன்!
நந்தி கொடியுடைய சிவமே அருள்புரிக! ஒற்றியூர் உறையும் சிவம்
சிவந்தமேனியான்! பொன்னர் மேனியன்! அவன்தான் வாகனம் நந்தி
வெள்ளை நிறம்! அவன் இடப்பாக அம்மை சக்தி பச்சைநிறம்! நம்
தியானத்தில் இவ்வண்ண ஒளிக்காட்சிகளை காணலாம்!

இரண்டாம் திருமுறை 56 பதிகங்கள் பூரணம்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

54 திருவண்ண விண்ணப்பம்


கண்ணப்பா என்றருளும் காளத்தி அப்பாமுன்
வண்ணப்பால் வேண்டும் மதலையைப்பால் வாரிதியை
உண்ணப்பா என்றுரைத்த ஒற்றிஅப்பா வந்தருள
எண்ணப்பா என்றழும்இல் ஏழைமுகம் பாரோமோ

திண்ணப்பர்  கண்ணை அப்பியதால் சிவனால் கண்ணப்பா
என்றழைக்கபட்டார். "காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான்
காண்"என்று திருநாவுக்கரசர் கூறுகிறார். கண்ணப்பருக்கு அவர்
கண் ஒளி-சிவமே அருள்பாலித்து! இதுபோலவே மகாவிஷ்னு
சிவனை அர்ச்சிக்க மலர் இல்லாமல் 1000-வது மலராக தன் கண் மலரை
எடுத்து அர்ச்சித்தார் அல்லவா!? சிந்தியுங்கள்! புராணம் கூறுவது கதை மட்டுமல்ல!

பக்தி மட்டுமல்ல! ஞானமும் கூடத்தான்! நமக்கு நல்ல பாடந்தான்! பால்
வேண்டி அழுத உபமன்யு என்ற பாலனுக்கு திருப்பாற்கடலை கொடுத்து
அருந்தச்சொன்னாராம் சிவன்! சீர்காழியிலே அழுத பிள்ளை சம்பந்தனுக்கு
பால் கொடுத்து ஞான சம்பந்தர் ஆக்கியருளினார் சிவசக்தி, அருளியது யார்
ஒற்றியப்பர் - கண்மணியிலே ஒற்றியிருக்கும் ஜோதி! சீர்காழியிலே தோணியப்பர்  தோணிபோல உள்ள கண்ணில் உள்ள ஜோதி! கண்ணில் குடியிருக்கும் கடவுள் கருணையால் அழுதவர்க்கெல்லம் அழுது படைப்பான்! நாம் அழுதால் நமக்கு கிட்டும் அமுதம்! எனக்கும் அருள வேண்டும் இறைவா!

நச்சை மிடற்றணிந்த நாயகனே ஓர்பாகம்
பச்சை நிறம் கொண்ட பவளத்தனிமலையே - பாடல் 8

நச்சு ஆகிய மும்மலத்தை கண்டத்தில் கொண்ட கண்மணியே! மணியை
எண்ணி தவம் செய்தால் பச்சை நிற ஒளியும் பின் சிவப்பு நிற ஒளியும்
காணலாம். இது அனுபவ உண்மை! மலையே என்றது கண்மணியையே! 

ஞானசற்குரு சிவசெல்வராஜ்

Wednesday 30 August 2017

53 பொருள் விண்ணப்பம்

இரண்டாம் திருமுறை

உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம்
ஒன்று கோடியாய் சென்று சென்று உலைந்தே
கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன்
கலுழ் கின்றேன் செயக்கடவதொன் றறியேன்
இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே
இன்ப வெள்ளமே என்னுடை உயிரே
திலகமே திரு ஒற்றி எம் உறவே
செல்வமே பர சிவ பரம்பொருளே 

உலக வாழ்க்கையில் உழலும் என் மனமானது ஒரு கோடியாய்
மேலும் மேலும் குற்றங்களை செய்து வினைகளை சேர்த்துக்
கொள்கிறது! கடவுளே நான் என்ன செய்வேன். உன்னை நாடிடும்
அன்பர் உள்ளத்தில் ஒளிர்பவனே இன்ப வெள்ளமே! என் உயிரே
திலகம் போல் உள்ளே புள்ளி வடிவில் விளங்கும் ஜோதியே!
என்கண்மணியே எனக்கு உறவே என் செல்வமே பரசிவமான
பரம்பொருளே.

ஓது மாமறை உபநிடதத்தின் உச்சி மேவிய வச்சிரமணியே - பாடல் \

நான்கு வேதங்களிலும் அதன் விளக்கமாம் உபநிடதங்களிலும்
எல்லாவற்றிக்கும் மேலாக சொல்லபடுகின்ற வைரமணி போல்
ஒளி வீசி கொண்டிருப்பது நமது கண்மணி ஒளி ஒன்றைப்பற்றியே!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Tuesday 29 August 2017

52. காதல் விண்ணப்பம்



வஞ்சக வினைக்கோர் கொள்கலம் அணைய
மனத்தினேன் அனைத்தினும் கொடியேன்
தஞ்சம் என்றடைந்தே நின்திருக் கோயில்
சந்நிதி முன்னர் நிற்கின்றேன்
எஞ்சலில் அடங்காப் பாவி என் றெனைநீ
இகழ்ந்திடில் என்செய்வேன் சிவனே
கஞ்சன் மால் புகழும் ஒற்றியங்கரும்பே
கதிதரும் கருணையங் கடலே

வஞ்சவினையின் மொத்த உருவம். கொடிய மனம் படைத்தவன்
ஆயினும் இறைவா உன் அருள்வேண்டி உன் சந்நிதிக்கு வந்து
இறைஞ்சுகிறேன். பாவி என ஒதுக்கிடாதே! தேவர்கள் புகழும்
கண்மணி ஒளியானவனே கரும்-பு கண்மணியானவனே கருணைக்
கடலே அருள்புரிக!

கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே  கடவுளே
கருணையங் கடலே - பாடல் 4

கண்ணினுள் மணியே - ஒற்றியங்கனி. அதுவே ஒளி! அது
கருணைக்கடலாகும்! அதுவே கடவுள்! நமகண்மணி உள் கடந்து
நிற்கும் ஒளியே!

ஞால வாழ்வனைத்தும் கானல் நீர் - பாடல் 7

இந்த உலக வாழ்வு கானல் நீர் போன்றது! கானல் நீரை கண்டு ஏமாறும்
மான் போல் மனிதர்கள் மாயையால் உந்தப்பட்டு வினைவழி உலக வாழ்வே
இன்பமெனக் கருதி அலைந்து அலைந்து துன்புறுகின்றனர். திருவடியை உணர்வீர்! தப்பித்துக்கொள்க!

காலோடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக்கடவுளே கருணைஎங்கடவுளே
கால் - திருவடி! பூதம் ஐந்தும் சேர்ந்த திருவடி! ஒற்றிக்கடவுள் கண்மணி
ஒளியே அது! கருணை கடல் தான் இறைவன் நம் கண்மணி ஒளி!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

2.51. சிவானந்த பத்து


இச்சை உன்டெனக் குன்திரு மலர்த்தாள்
எய்தும் வண்ணம் இங்கென செயவல்லேன்
கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது
குதிப்பில் நின்றது மதிப்பின் இவ்வுலகில்
பிச்சை  உண்டெனிற் பிச்சரிற் சீறும்
பேயருண்மனை நாயென உழைத்தேன்
கெச்சை மேனி எம் திருவொற்றி அரசே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே

இறைவா உன்மலரடி - மெய்ப்பொருள் - கண்மணி ஒளியை
அடையவேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு! ஆனால் என் மனமோ
என்குறிப்பில் நிற்காது. அலைபாய்கிறதே! உலக இச்சையில் உழல்கிறதே!
பேயனே அலைந்தேன் நாயென திரிந்தேன். இப்படி இருந்தால் உன்மலரடி
எப்படி அடைவேன். தவத்தால் சிவந்த கண்களில் மணியில் ஒளிரும் 
ஒளியான இறைவா அமுதம் நல்கும் சிவமே ஒளியே அருள்க!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Monday 28 August 2017

2. 50. நெஞ்சோடு நேர்தல்

திருமுறை  2
50. நெஞ்சோடு நேர்தல்

அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
கடுத்த ஆடை என்றறிமட நெஞ்சே
கணிகொள் மாமணிக் கலன்கள் நம் கடவுள்
கண்ணுள் மாமணிக் கண்டிகை கண்டாய்
பிணி கொள் வன்பவம் நீக்கும்வெண் ணீறே
பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
திணி கொள் சங்கர சிவசிவ என்று
சென்று வாழ்த்தலே செய்தொழிலாமே

நாம் உடுக்க கோவணம் தந்தார் இறைவன்! அதுவே நமக்கு
உகந்த ஆடையாகும்! கோவணம் - கோ மணம் - கோ மனம்
நம்மில் கண்மணியில் கோவாகிய இறைவன் தலைவன்
இருக்கிறான் ஒளியாக! அவனிடம் மனதை வை என்பது தான்
பரிபாஷை. கண்மணியிலுள்ள இறைவன் கோவணம் போல
நம் மும்மலத்திரையை ஆடையாக உடையவன்! நம் கண்மணியிலுள்ள
அணிகலம் தான் இறைவனின் அணிகலன் தான் - பூண் போல
இருக்கும் நம் வினையாகிய விஷம்! அந்த பாவ வினைகளை நீக்க
நாம் தவம் செய்யும் போது ஊற்றெடுக்கும் வெண்மையான கண்ணீரே.
பூசும் வெண்ணீறாகும்! நமக்கு தொழில் இறைவன் புகழ் பாடுதலே
சதா காலமும் இறைவனை எண்ணி எண்ணி மனதை தூய்மை யாக
வைத்திருப்பதேயாகும்! நம் தொழில் சீவனை சிவமாக்குவது தான்!
அந்த சிவனே உடனிருந்து அருள்வான்!

சுகர் முதல் முனிவோர்உக்க அக்கணம் சிக்கெனதுறந்தார்!  - பாடல் 8
சுகப்பிரம்மம் என்னும் ஞானி பிறந்த உடனே ததுறவு பூண்டார். பிறவி
ஞானி! இன்னும் முனிவர் பலர் நினைத்த மாத்திரமே இறைவனை அடைய
தடையான உலகை துறந்தனர் . இன்றே இப்பொழுதே நாம் செய்ய வேண்டியதை
செய்ய வேண்டும்  நாளை நாளை என தள்ளிப் போடக்கூடாது? நாளை நமனின் நாள்!?
யாரிவார்! ஒன்றே செய்! நன்றே செய்! இன்றே செய்! இக்கணமே செய்!

தூயநெஞ்சமே சுகம் பெற வேண்டில்
சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
காய மாயமாம் கான்செறிந் துலவும்
கள்வர் ஐவரைக் கைவிடுத்தன் மேல்
பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
காய சோதிக்கண் டமருதல் அணியே!  பாடல் 10

நெஞ்சம் தூய்மையானால் சுகம் பெறலாம்! அதற்கு வழி
சொல்கிறோம்! நமது உடம்பில் ஐம்புலன்ளும் நம்மை மனம்
போனபடி வினைக்குதக்கபடி ஆட்டிவைக்கின்றனர்! அவர்களை
விட்டு அதற்க்கு மேலாக ஆணவம் கன்மம் மாயை என்னும்
மும்மலங்களாகிய திரையும் உள்ளது! இதுவே நமக்கு எதிரி! இவர்களை
வெல்ல இரவு பகல் அற்ற இடமான பரவெளியில் ஆகாயத்தில் - கண்மணி
நிற்கும் தலம் ஆகாயம்! அதில் கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவனை கண்டு உணர்ந்து நிலை நிற்றலே, ஒப்பற்ற தவமும் ஆகும்! இதுவே நாம் உய்யும் வழி! பேரின்பம் பெறும் வழி!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
WWW.VALLALYAAR.COM

Sunday 20 August 2017

49 இரங்கல் விண்ணப்பம்

திருஅருட்பா
இரண்டாம் திருமுறை


பற்றி நோக்கிய பாவியேன் தனக்குப்
பரிந்து நீஅருட் பதம்  அளித்திலையே
மற்று நோக்கிய வல்வினை அதனால்
வஞ்ச மாயையின் வாழக்கையின் மனத்தின்
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின்
அலைதந் திவ்வுலகம் படுபாட்டை
உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம்
ஒற்றி மேவிய உலகுடையோனே

நாம் திருவடியை பற்றி தவம் செய்வோமானால் இறைவன்
அருள்புரணமாக கிட்டும்! துன்பமின்றி வாழ்வாங்கு வாழலாம்!
அதெல்லாமல்,தவம் செய்யாமல், உலகியலின்பத்தில் மூழ்கி
திளைப்பவர் தத்தமது வினைப்பயனால் மனம் கேட்டு நோய்கள்
வந்து உடல் கெட்டு முதுமை வந்து சோர்ந்து சம்சாரசாகரத்தில்
உழன்று துன்புறுவர்! பிறர்படும் துயரங்களை அறிந்து வேதனைப்
பட்டார் வள்ளல்பெருமான்! ஐயோ இறைவனை அறியாது துன்புறுகிறார்களே 
என வருந்தினார்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Thursday 17 August 2017

48 சந்நிதி முறையீடு

திருவருட்பா - இரண்டாம்  திருமுறை

ஒற்றி மேவிய உத்தமனே மணித்
தெற்றி மேவிய தில்லைஅப் பாவிழி
நெற்றி மேவிய நின்மலனே உன்னைப்
பற்றி  மேவிய நெஞ்சம்உன் பாலதே

ஒற்றி - கண்ணில் - துலங்கிய இறைவனே! மணித்தொற்றி -
கனமணியில் உள்ள ஒளியே! தில்லை அம்பலவாணரே என்
தந்தையே! விழிநெற்றி - மூன்றாவது கண்ணை உடையவனே!
நின்மலனே - மலமற்றவன் இறைவன்! உன்னைப்பற்றி உன்னுடன்
உணர்வால் ஒன்றி கலந்த என் நெஞ்சம் நீயிருக்கும் இடமே!
உன்னுடையதே!

கல்ஆலின் ஈற்றுப் பொருள் அருள் ஆதியே - பாடல் 2
கல் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு
அருளிய உபதேசம் எனக்கு தருக ஆதிமுதல்வனே! உலகின்
முதல் குரு - தட்சிணாமூர்த்தி! கல் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து
சனகாதி முனிவர்க்கு ஞான உபதேசம் நல்கினார்! என்ன? எப்படி?
"இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டினார்" இதுவே ஞான உபதேசம்
வாய் பேசவில்லை! விழித்திருந்து,  மனமாகிய அசுரனை அந்த இறைவன்
இருக்கின்ற கண்மணியில் திருவடியில் ஒப்படைத்தால் - சரணடைந்தால்
மோட்சம் கிட்டும்! தவம் செய்வது இப்படித்தான்! கண்மணியில் உணர்வால்
நிற்பது - நிலைநின்றால் கண்மணியில் உணர்வை நிறுத்த உபதேசம் கொடுத்து தீட்சை கொடுப்பதே வள்ளலார், எமக்கிட்ட பணி! காலங்காலமாக எல்லா சித்தர்களும் ஞானிகளும் உபதேசித்த ஞானம் இது! " சும்மா இருக்கும்" தவம்!  அறியுங்கள்! உணருங்கள்!

சோதியே திருத்தோணி புரத்தானே - பாடல் 3
சோதியாகிக இறைவன் நம் கனமணியில் துலங்குகிறான்! திருத்தோணிபுரம் - என்பது திருவாகிய இறைவன், தோணி போல இருக்கும் கண்ணில் உள் புறம் இருப்பவன்! "தோணிபோல் காணுமடா காணுமடா அந்த வீடு என சித்தர் பாடல் கூறும் மெய்ப்பொருள்  இரகசியமும் இதுதான்! சீர்காழியிலே கோவில் கொண்டிருக்கும் இறைவனின் திருநாமம்
தோணியப்பர்! தோணிபோல் உள்ள கண்ணிலே அப்பியிருப்பவர் ஆதலால். கண்மணி ஒளி!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்