Saturday 30 May 2020

60. திருவருட் கிரங்கல்

                                                  60. திருவருட்  கிரங்கல்


                          ஒப்பாரும்  இல்லாத  உத்தமனே  ஒற்றியில் என்
                          அப்பாஉன்  பொன்னடிக்கே  அன்பிலேன்  ஆனாலும்
                          தப்பா  தகமலியச்  சஞ்சலத்தால்  ஏங்குகின்ற
                          இப்பா  தகத்தேற்  கிரங்கினால்  ஆகாதோ

                          நம்  கண்மணியான  ஒற்றியூரில்  துலங்கும்  ஒளிக்கு  ஒப்பாக  யாருமே
கிடையாது ?!  உயர்ந்த  உத்தமமான  இறைவனின்  பொன்னடிகளே  இதுவாகும் !
அந்த  அம்மையப்பனான  இறைவனை  சரண்புகுந்தால்  மட்டுமே  நாம்  தப்பிக்கலாம் !
அதை  விடுத்து  எல்லா  படுபாதகங்களையும்  செய்து  மனம்  சஞ்சலமடைந்து  உலகரால்
பாதகன்  கிராதகன்  என  தூற்றப்பட்டால்  அவன்  வாழ்ந்து  என்ன  பயன் ?

                          பற்றும்  செழுந்தமிழால்  பாடுகின்றோர்  செய்தபெருங்குற்றம்
                             குணமாக்க  கொள்ளும்  குணக்கடலே  ............... பாடல்    3

                        செழுந்தமிழால்  பாடுகின்றோர்  அதில்  ஆழ்ந்து  போனால்  இறைவன்
திருவடியை  அறிவர் !  பற்றி  விடுவர் !  ஏனெனில்,  "தமிழ்  அதிவிரைவில்  சுத்த
சிவானுபூதியை  நல்கவல்லது! "  வள்ளல்  பெருமான்  உரைத்த  பொன்னான  வாசகம்
இது!  தமிழில்  புலமை  பெற்று  பாடல்  புனைவோர்  மெய்ப்பொருளை  விரைவில்
உணர  வாய்ப்புண்டு!  தெய்வத்தமிழை  கற்றறிந்தோர்  சற்று  ஆன்மீக  நாட்டம்
கொள்வாரேல்,  தமிழ்  கடலில்  புதைந்து  கிடக்கும் இறைநிலை  அறிவர்! - உணர்வர்!
- உய்வர்!  அகர  உகரமான  எட்டிரண்டை  கண்மணி  ஒளியை  பார்த்து  பேரின்பம்
பெறலாம்!  அவ்வழி  செல்வோர்  செய்பாவமனைத்தும்  பகலவனை  கண்ட  பனிபோல
மறையச்  செய்து  அருள்புரிவான்  பரமாத்மா!

                        எல்லோரும்  பாடல்  புனைய  முடியுமா ?  உள்ளத்தில்,  கருத்தில்  உதிக்கும்
சொற்களை  கோர்க்க  தனித்திறமை  வேண்டும்!  அவனருள்  வேண்டும்!  அப்படிப்பட்டவன்
வாய்  திறந்தால்  வருவது  அனைத்தும்  கவிதையே!  கம்பன்  பாடல்  சொற்கள்  சிலவற்றுக்கு
கலைமகளே  பொருள்  சொன்னாளல்லவா ?  தமிழ்சங்கம்  கண்ட  மதுரைக்கு  சிவனே
வந்து  கவிபுனைந்தாரல்லவா ?  தமிழன்  பெருமையை  தெய்வத்தன்மையை  சொல்லில்
வடிக்க  முடியுமா  என்ன ?!

                         தவம்  செய்வோர்  சிந்தனை,  சொல், செயல்  எல்லாமே  பரம்பொருளை
சுற்றியே  இருப்பதால்  சொல்  அலங்காரமாகிவிடும்!  சிந்தனை  ஒளியாகிய  அறிவு
துலங்கும்!  செயல்  கருணை  மயமாகும்!  பாடுவார்!  ஆடுவார்!  பேரானந்த  பெருவாழ்வு
பெறுவார்!

                        சத்திக்கும்  நாதத்  தலங்கடந்த  தத்துவனே ................. பாடல்     7

                       சத்தியாகிய  தாய்  வாலை  அருள்பெற்றுத்தான்,  அமுதம்  உண்டுதான்
பரமாத்மாவை  அடைய  முடியும்!  அமுதம்  தருபவள்தான்  வாலை!  சித்தர்கள்
அனைவரும்  வாலைத்தாயை  போற்றி  வணங்குகின்றனர்!  உண்மை  உணர்ந்தவர்கள்!
அந்த  வாலை  கோயில்  கொண்ட  தலம்தான்  கன்னியாகுமரி!  கடைக்கோடி  கற்பமதில்
நின்று  தவம்  செய்யும்  குழந்தை,  என்றும்  கன்னி!  அவள்தான்  வாலை!  கன்னியாகுமரி
பகவதியம்மன்!  வாருங்கள்  குமரிக்கு  வாலை  அருள்பெற!  இந்த  வாலை  அருள்  நம்
தியான  அனுபவத்தில்  கிட்டும்.  எப்போது  தெரியுமா ?  நாததலங்கடந்த  பின்னர்தான்!

                      நம்கண்மணி  ஒளியில்  லயித்து  தவம்  செய்கையில்  உணர்வால்  ஒளிபெருகி
நாதத்தொனி  கேட்கும்!  ஒலிஒளி  அனுபவம்  பலபெற்றபின்  வாலை  அருளால்  அமுதம்
கிட்டும்!  அமுதமும்  சாப்பிட்டபின்னரே  அருட்பெருஞ்ஜோதி  தரிசனம்!  "நாதமுடிவில்
நல்லாள்  இருப்பிடம்" என  வாலையை  பற்றி  குறிப்பிடுவர்  சித்தர்  பெருமக்கள்.
வள்ளல்  பெருமானும்  அவ்வாறே  கூறியிருக்கிறார்.

                     கண்ணுள்  மணிபோல்  கருதுகின்ற  நல்லோரை
                     எண்ணும்  கணமும்  விடுத்தேகாத  இன்னமுதே   -   பாடல்   10

                    கண்ணுள்  மணியாக  அதன்  உள்  ஒளியாக  இறைவன்  இருப்பதை  கருதி
தவம்  செய்பவரே  நல்லவர்கள்!  அப்படிப்பட்டவர்களை  விட்டு  ஒரு  கணப்பொழுதும்
பிரியாமல்  இருந்து  அருள்  புரிவான்  இறைவன்!  உயிர்க்கு  உற்ற  துணையவனே!
"இமைப்பொழுதும்  என்நெஞ்சில்  நீங்காதான்தாள்  வாழ்க"  என  மணிவாசகர்
திருவாசக  கூற்றை  நோக்குக!




Tuesday 26 May 2020

59. திருக்காட்சிக்கு இரங்கல்

  59. திருக்காட்சிக்கு  இரங்கல்

                          மண்ணேயும்  வாழ்க்கையிடை  மாழாந்து  வன்பிணியால்
                          புண்ணேயம்  நெஞ்சம்  புழுங்குகின்ற  பொய்யவனேன்
                          பண்ணேயும்  இன்பப்  பரஞ்சுடரே  என்இரண்டு
                          கண்ணே  உன்  பொன்முகத்தைக்  காணக்  கிடைத்திலனே

              உலக  வாழ்க்கையில்,  மாயையில்  சிக்கி  சீரழிந்து  தீராத  நோயால்  துன்புற்று
நெஞ்சம்  புண்பட்டு  வேதனையால்  துயரப்படுபவர்  முடிவில்  மண்ணில்  தான்  போய்
சேருவர்.  இதிலிருந்து  விடுபட  நம்  இரண்டு  கண்ணில்  துலங்கும்  ஒளியை  இறைவனின்
பொன்  முகத்தை  தவம்  செய்து  காணவேண்டும்.  காணலாம்!  ஒளியை  கண்டவர்
தசவித  நாதத்தையும்  கேட்பர்!  இன்பத்தை - பேரின்பத்தை  தரும்  பரஞ்சுடர் - பரமாத்மா
நம்  இரண்டு  கண்களிலும்  உள்ளார்!

              அருள்  ஆர்ந்த  முக்கண்  அழகுதனைக்  கண்டிலனே -  பாடல்  2

              நம்  இருகண்ணில்  துலங்கும்  ஒளியை  எண்ணி  உணர்ந்து  தவம்  செய்தால்
உள்ளே  உள்ளே  அக்னிகலை  உணர்வு  பெறும் -  ஒலிபெருகும் - துலங்கும் .  அதுவே
நமது  மூன்றாவது  கண் !?  அருள்மயமான  முக்கண்சிவம்  பெற்ற  பிள்ளையல்லவா
நாம்!?  நமக்கு  மூன்று  கண்தான்!  தெரிகின்ற  இருகண்  ஒளியை  பெருக்கினால் -
தவத்தால்  மூன்றாவது  கண்  துலங்கும் !?

             தாயானவனே  எந்  தந்தையே  அன்பர்தமைச்  சேயாய்  வளர்க்கும்  சிவனே - பாடல்  4

             இறைவனே  நமக்கு  உயிர்தந்தவன்  ஆதலால்  தாய் !  நம்மை  வளர்த்து
கருவிலே  உருவாக்குபவர்  அதனால்  தந்தை!  தாயும்  அவனே!  தந்தையும்  அவனே!
அதனால்  தான்  ஞானியர்  இறைவனை  "அம்மையப்பன் "  என்றழைத்தனர் .

             யார்  அவனை  -  சிவனை  உணர்ந்து  சரணடைகிறார்களோ? அவர்களை
சேயாய்  பிள்ளையைப்போல்  போற்றி  பாதுகாத்து  வளர்த்து  ஆளாக்குவான் !

          உடலை தந்த  தாய்தந்தையரும்  அழிந்து  விடுவர்!  நம்  உடலும்  அழிந்துவிடும்! 
இறைவனை  உயிர்தந்த  அம்மையப்பனை  சரணடைந்தால்  உடலும்  அழியாது !
உயிரின்  ஆற்றலை  ஒளித்தன்மையை  உடலும்  பெரும் !?  இதைத்தான்  வள்ளல்பெருமான்
உரைக்கின்றார் .

          உயிர்தந்த  தாயும்  தந்தையும்  குருவுமான  இறைவனை  அருட்பெருஞ்ஜோதியை
உணர்பவனே  முக்தியடைகிறான்!  மரணமிலா  பெருவாழ்வு  பெறுகிறான்!  ஞானியாகிறான்!
சித்தனாகிறான்!

            கண்ணும்  கருத்தும்  களிக்கவரும்  கற்பகமே .................பாடல்   6

           இறைவன்  தான்  கற்பகம்!  எல்லாம்தரும்  பரம்பொருள்!  அருள்மழை  பொழியும்
அருட்பெருஞ்ஜோதி!  அவனை  நினைத்து  தவம்  செய்தால்  நம்  கண்கள்  களிப்படையும்
வண்ணம்,  ஆனந்த  பரவசநிலை, பேரின்பம்  கிட்டும்.  எண்ணமெல்லாம்  அந்த  சிவமே
ஒளியே  துளங்குவதால்  கருத்தில்  வேறுஒன்றுமில்லாமல்  அதிலும்  பரவச  நிலை
கூடும்!  சிந்தனை  பார்வை  எல்லாமே  ஒளிமயமாகும்!  பார்க்குமிடமெங்கும்  நீக்கமற
எங்கும்  ஒளிவெள்ளமாக -  பரம்பொருளாக  காணலாம்!  மகிழலாம் !

              முத்திக்குவித்தே  நின்பொன்னடிக்கீழ்  மேவிநிற்க ..... பாடல்   9

              உலக  மாயையில்  மயங்காமல்,  இறைவா  உன்  பொற்பாதம்  சரணடைவதே 
என்  கடன்  என  யார்  தம்  மெய்ப்பொருளில் -  தன்  கண்மணி  ஒளியான -  இறைவன்
திருவடி  நீழலில்  தங்குகின்றனரோ  அவரே  முக்தியை  அடைவர்!  இறைவன்  திருவடியாகிய
தம்  கண்மணி  ஒளியில்  யார்  சரண்புகுகின்றார்களோ! அவரே  புத்திசாலி!? இதுவே
முக்திக்கு  வழி!  முக்திக்கு  வித்து!  இறைவன்  பொன்னடி!  நம்  கண்மணி !

58. கொடை மட விண்ணப்பம்

           58. கொடை  மட  விண்ணப்பம்

                                        நின்போன்ற  தெய்வம்ஒன்  றின்றென  வேதம்  நிகழ்த்தவும்நின்
                                        பொன்போன்ற  ஞானப்  புதுமலர்த்  தாள்துணைப்  போற்றுகிலேன்
                                        என்போன்ற  ஏழையர்  யாண்டுளர்  அம்பலத்  தேநடஞ்செய்
                                        மின்போன்ற  வேணிய  னேஒற்றி  மேவிய  வேதியனே

                                அம்பலத்தே  நடஞ்செய்மின்  போன்ற  வேணியனே - நாம்  எல்லோரும்
அறிய  அம்பலமாக  நம்  கண்மணியில்  ஆடிக்கொண்டிருக்கும்  ஒளியானவனே !
அதிலிருந்து  தோன்றும்  ஒளிக்கதிர்கள்  மின்னலைபோல  உள்ளன. அது  சிவனின்  சடை
போல  இருக்கிறது!  ஒற்றிமேவிய  வேதியனே  -  நம்  உடலில்  கண்மணியில்  ஒற்றியிருக்கும்
ஒளியே!  வேதங்கள்  உரைக்கும்  இறைவனே - ஜோதியானவனே -  வேதியனே! உன்  போன்ற
தெய்வம்  வேறில்லை . உன்  பொன்னான  திருவடிகளே  எனக்குதுணை!  ஞானத்தை
தரும்!  இறைவாபோற்றுகிறேன் - பணிகிறேன். அருள்புரிக இந்த  ஏழைக்கும்!.

                   மலம்  மாற்றுகின்ற  விண்ணவனே ................... பாடல்  3

           நம்  கண்மணியில்  மத்தியில்  ஊசிமுனை  துவாரத்தின்  உள்  இருக்கும்
ஒளியாகிய  பரம்பொருளை  பற்றி  நாம்  தவம்   செய்தால், நம்  உள்ஒளி  பெருகி
ஊசிமுனை  துவாரத்தை  அடைத்துக்  கொண்டிருக்கும்  திரையை - மும்மலங்களை
எரித்து  இல்லாமல்  செய்து  விடும்!  நம்  கண்மணியின்  உள்பகுதியே  விண் - ஆகாயம்.
விண்ணில்  ஒளியாக  துளங்குபவனை  விண்ணவனே  என்றார்  வள்ளல்  பெருமான்1

           அன்று  நால்வர்க்கும்  யோகமுறை  அறந்தான்சொன்னவனே  - பாடல் - 5

           ஆதியில் , முதல்குருவாக  தட்சிணா  மூர்த்தியாக  தோன்றிய  பரம்பொருளே!
சனகாதி  முனிவர்  நால்வர்க்கும்  ஞானோபதேசம்  சொல்லாமல்  சொன்னவரே!
"சும்மா  இருக்கும் " திறத்தை  உணர்த்தி  காட்டியவரே!  இதுவே  நாம்  செய்யவேண்டிய,
தெரிந்து  கொள்ள  வேண்டிய, உணர்ந்துகொள்ள  வேண்டிய  சிறந்த  அறமாகும்!

            ஈன்றவனே  அன்பர்  இன்னுயிர் ...................... பாடல்   6

           நம்  உடலை  தந்ததுதான்  தாயும்  தந்தையும்!  உயிரை  தருவது  இறைவனே!
அதனால்தான்  வள்ளல்  பெருமான்  பரம்பொருளை  ஈன்றவனே  என்கிறார்!

            கங்கரனேமதிக்  கண்ணியனே  நுதல்  கண்ணினனே - பாடல்   7

            கங்கரன் -  கங்கையுடைய  கரத்தையுடையவன். கங்கை  என்றால்  நீர்.
வற்றாத  நீரையுடைய  நமது  கண்களே  சந்திரன் - சூரியன்  ஆகும். இறைவனின்
திருவடியாகவும்  திருக்கரங்களாகவும்  விளங்குவதும்  இதுவே!  அனுபவ  நிலையில்
ஒளிக்கதிர்களே  கரங்கள்  எனப்பட்டது!  நுதல்  கண்ணினனே -  கண்ணிலே
இருக்கும்  பொருள். வேறென்ன ?  ஒளிதானே!  அதுதானே  இறைவன்!

             சின்மயனே  அனல்  செங்கையில்  ஏந்தியசேவகனே  -  பாடல்  8

             சின்மயனே -  சின்முத்திரை  குறிக்கும்  கண்ணில்  இருப்பவன்  சின்மயன் - ஒளி!
அனல்  செங்கையில்  ஏந்திய - நாம்  தவம்  செய்யும்போது  நம்  கண்வெள்ளை  விழி
சிவப்பாக  மாறிவிடும். அந்நிலையே  செங்கை  சிவந்தகை  என்றும், அனல்  அப்போது
நிரம்பி  இருக்கும். அதனால்தான்  அனல்  ஏந்திய  செங்கை  எனப்பட்டது. சேவகன்
யார்  இறைவன்தான்!  பரம்பொருளை  நாடிடும்  பக்தர்க்கு  அவன்  சேவகன்  போல்
எல்லாம்  செய்கிறானல்லவா? நமக்கு  உயிர்  தந்த  அந்த  இறைவனே  நமக்கு  வேலைக்
காரனாகவும்  இருந்து  நம்மை  காத்தருள்கிறான் !

             கண்ணியனே  பற்பலவாகும்  அண்டங்கள்  கண்டவனே  -  பாடல்  9

        எண்ணிலடங்கா  அண்டங்கள்  பலவும்  படைத்து  அருளிய  அந்த
இறைவன் -  பரம்பொருள்  நம்  மெய்யிலே  -  உடலிலே  மெய்ப்பொருளாக
நம்  கண்மணியிலே  ஒளியாக  துலங்குகிறான்!  கண்ணிலே  நின்று  ஒளிர்வதால்
வள்ளல்பெருமான்  கண்ணியனே  என்கிறார்!

        ஒற்றிக்கோயிலின்  மேவும்  குருபரனே  -  பாடல்  10

        நமது  கண்மணியில்  ஒற்றிஇருக்கிறான்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன்!
அதனால்  கண்மணி  ஒற்றியூர்  என்று  ஆனது.  திருவாகிய  இறைவன்  ஒற்றியிருப்பதால்
திருவொற்றியூர்  எனப்பட்டது.  திருவொற்றியூராகிய  நம்  கண்மணியில்
கோயில்கொண்டிருக்கும்  அந்த  ஜோதியே -  ஒளியே  -  இறைவனே -  பரம்பொருளே
நமது  குருபரன்  ஆகும்!  நமக்கு  உயிர்தந்த  பரம்பொருள்  நமக்கு  சேவகனாக
இருக்கும்  பரமாத்மாதான்  நமக்கு  குருவாக  இருந்து  நம்மை  வழிநடத்துவான்!!
அந்த  இறைவனே -  நமது  உயிரே -  நம் ஆத்மாவே நமக்கு  உண்மை  குரு!?

        அந்த  மெய்குருவை  பெற  சற்குரு  வள்ளலார்  அனுக்கிரகம்  தேவை! அருள்புரிய
காத்திருக்கிறார்  வள்ளலார்!  வாருங்கள்!

        ஒவ்வொரு  மனிதனும்  எதாவதொரு  சற்குருவை  பெற்றேயாக  வேண்டும்!
சற்குரு  மூலமாக  உபதேசம்  தீட்சை  பெற்றுத்தான் - சாதனை - தவம்  செய்துதான்
மெய்குருவை  பெறமுடியும்!  இது  இறைவன்  வகுத்த  நியதி!  சற்குரு  வள்ளலார்
அருள்தர  காத்திருக்கிறார்!  வாருங்கள்!


                                                   

57. மருட்கை விண்ணப்பம்


                                                              இரண்டாம்  திருமுறை

                                                           57. மருட்கை  விண்ணப்பம்

                          யாது  செய்குவன்  போதுபோ  கின்ற
                                      தண்ண  லேஉம  தன்பருக்  கடியேன்
                          கோது  செய்யினும்  பொறுத்தருள்  புரியும்
                                      கொள்கை  யீர்எனைக்  குறுகிய  குறும்பர்
                          வாது  செய்கின்றார்  மனந்தளர்  கின்றேன்
                                      வலியி  லேன்செயும்  வகைஒன்றும்  அறியேன்
                          மாதர்  செய்பொழில்  ஒற்றியூர்  உடையீர்
                                      வண்கை  யீர்என்கண்  மணிஅனை  யீரே


                       மாதர்  செய்பொழில்  ஒற்றியூர்  உடையீர் =  பெண்களால் - கருவிலே
உருவாக்கப்படுகின்ற  பொலிவான - அழகான  தோற்றம்  கொண்ட  கண்களிலே
ஒற்றியிருக்கின்றவரே,  வண்கையீர்  என்  கண்மணி  அனையீரே - அருள்மழை
பொழியும்  கைகளை  உடையவரே - அருள்  விளங்கும்  என்  கண்மணியான
அருட்பெருஞ்ஜோதி  இறைவா!  உன்  அன்பருக்கும்  அடியேன்  எக்குற்றம்  புரியினும்
பொறுத்து  அருள்புரியும்  இறைவா!  எனை  அடுத்த  குறும்பர்  அறியாமையால்
வாதம்  செய்கின்றனர். மெய்ப்பொருள்  அறியாததினால்!  என்  மனம்  தளர்ந்து
போகிறது.  வேதனைபடுகிறேன்.  இதுபோன்றோரை  எதிர்த்து  வெற்றி  கொள்ளும்
வலிமை  இல்லையே!  என்ன  செய்வது  என  அறியாமல்  திகைக்கின்றேனே
இறைவா!  என்ன  செய்வது? காலம்  போகின்றதே  அருள்புரிக  இறைவா ?

                      காமமாம்  கடலில்  ஆழ்ந்தால்  வஞ்சக  கொடிய  வாழ்க்கை  எனும்
திமிங்கலம்  நம்மை  விழுங்கிவிடும்!  அதிலிருந்து  தப்ப  வேண்டுமானால்
அருள்பொழியும்  நம்  கண்மணியில்  ஒற்றியிருக்கும்  அருட்பெருஞ்ஜோதி
இறைவனை  சரண்புக  வேண்டும் - பாடல் - 3

                      ஊழ்வினையை  நாம்  அரியமாட்டோம். அந்த  பாழாய்  போனவினை
நம்மை  மேலும்மேலும்  வினைகளிலே  ஆழ்த்திவிடும் !  வினைகளை  போக்க
ஒரே  வழி, இறைவா  என்  கண்மணி  ஒளியானவரே  உன்  அருள்பெறுவது
ஒன்றுதான் !     பாடல் - 7

                இறப்பிலார்  தொழும்  தேவரீர்  பதத்தை  -  பாடல்   8

      இறப்பு  இல்லாமல்  என்றும்  வாழ  வேண்டுமானால் -  மரணம்
இல்லாத  பெருவாழ்வு  கிடைக்க  வேண்டுமானால்  நம்  கண்மணியில்  ஒளியாக
துலங்கும்  இறைவன்  திருவடியை  பற்றவேண்டும். சரணடையவேண்டும். அப்போதுதான்
இறைவன்  பரிபூரண  அருள்  கிட்டும்! எல்லா  துயரங்களிலிருந்தும்  விடுபடலாம்!

       சஞ்சி  தந்தரும்  காமம் .......................  பாடல் - 9

      ஒவ்வொரு  மனிதனும்  செய்யும்  செயல்கள்  அனைத்தும்  பாவ  புண்ணியமாக
அவரவர்க்கே  திரும்பவருகின்றது. அவை  பிராரத்துவம் - ஆகாமியம் - சஞ்சிதம்
என  மூன்று வகைப்படும். சராசரி  மனிதனுக்கு  பிராரத்துவம்  பிறப்பாகி  வருகிறது.
பிறந்து  வாழ்வதில்  ஆகாமியம் நடக்கின்றது. அவரவர்  வினைக்கேற்ப, நல்லது
கெட்டது - பாவ  புண்ணியம்  கூடவோ  குறையவோ  செய்கிறது. சராசரி  மனிதன்
வாழ்வு  இதிலேயே  முடிந்து  போகிறது. ஆனால்  சாமான்யன்  ஆன்மீக  சாதனை
செய்பவன் - சற்குருவை  பெற்று, ஞானஉபதேசம் - திருவடிதீட்சை  பெற்று  தவம்
செய்பவன், ஆகாமியம் தவத்தால்  உருவாகாது  செய்து  விடுகிறான்!  பிராரத்துவம்
குருவருளால்  சிறிது  சிறிதாக  குறைந்து  இல்லாது  ஆகிவிடும். அதன்  பிறகுதான்
சஞ்சிதகர்மம்  வந்து  தாக்கும். குருவை  நாடி  ஞானதீட்சை  பெற்று  தவம்
செய்பவனுக்குதான்  சஞ்சிதகர்மம்!  மற்றவர்க்கில்லை!  எதற்கு  வருகிறது ?
இல்லாமலாவதற்க்குத்தான் !  ஒரு  கருமமும்  இல்லாமல்  ஆனால்  தானே  பிறப்பு
இல்லாமல்  போகும்!? இனிமேல்  பிறப்பு  இல்லாத  நிலை என்றால் ?!  பிறந்த  இப்பிறப்பு
மரணம்  இல்லாது  போய்  விடுமல்லவா ? நமக்கு வேண்டுவது  அதுதானே ! நம்
கண்மணி  ஒளியாக  துலங்கும்  இறைவனை  சரணடைந்தால்  எல்லா துன்பங்களும்
நீங்கப்பெற்று  வாழ்வாங்கு  வாழலாம் !

                                                 

திருவருட் பாமாலை 2 - உள் புகு முன்

                                                              திருவருட்பா - மாலை !

                                                              திருவருள் - பாமாலை !

                                                                      உள்  புகு முன் !



                  "திருவருட்பா " எனும்  அதி  உன்னதமான, ஞானகளஞ்சியமான  இந்நூலை
இயற்றியவர்  திருவருட்பிரகாச  வள்ளலார்  இராமலிங்க  சுவாமிகள்  ஆவார்கள் .

                   வள்ளலாரின்  சீடர்  இறுக்கம்  இரத்தின  முதலியார்  அவர்களின்  வற்புறுத்தலின்
காரணமாக  வள்ளல்பெருமான்  திருவருட்பா  நூலை  வெளியிட  இசைந்தார் .
வள்ளல்பெருமானின்  சீடர்தொழுவூர்  வேலாயுத  முதலியார்  பெருமானின்  பாடல்களை
ஆறு  பகுதிகளாக  பிரித்து  ஆறு  திருமுறைகளாக  திருவருட்பா  என  வெளியிட்டார்.

                   முதல்  நான்கு  திருமுறைகள்  வள்ளல்  பெருமான்  காலத்திலேயே 1867 பிப்ரவரி
மாதம்  வெளியிடப்பட்டதது .

                   ஐந்தாம்  திருமுறை  வள்ளல்பெருமான்  ஜோதியாகி  ஆறுவருடம்  கழித்து
1880-ல்  வெளியிடப்பட்டது .

                   வள்ளல்பெருமான்  அருளிய  ஏனைய  பாடல்கள்  அனைத்தும் ஆறாம்  திருமுறையாக
தொகுக்கப்பட்டு  சோடாவதானம்  சுப்பராய  செட்டியார்  அவர்களால்  1885 ஆம்  ஆண்டு
வெளியிடப்பட்டது .

                   திருவருட்பா  ஆறுதிருமுறைகளையும்  ஒரே  நூலாக  பொன்னேரி  சுந்தரம்
அவர்கள்  1892 ஆம்  ஆண்டு  வெளியிட்டார்கள் .

                  வள்ளல் பெருமானை  இதயத்தில்  தாங்கிய  அன்பர்கள்  பலரும்  சிறியதும்
பெரியதுமாக  திருவருட்பா   பாடல்களை  வெளியிட்டனர் . 19-ஆம்  நூற்றாண்டிலும்
20-ஆம்  நூற்றாண்டிலும்  திருவருட்பா  நூல்கள்  ஏராளமாக  வெளிவந்தது .

                                              தமிழக  மக்களை  வெகுவாக  கவர்ந்த  பாடல்கள்  நிரம்பப்  பெற்றது திருவருட்
பிரகாச  வள்ளல் இராமலிங்க  சுவாமிகள் அருளிய  திருவருட்பாவே !

                           அருட்பா  பாடல்களை  பாடிய  பேர்பெற்றவர்கள்  ஏராளம் ! தேனினும்  இனிய
தீந்தமிழ்  பாக்களாலான  திருவருட்பா  சிறியோர்  முதல்  பெரியவர்வரை , சம்சாரிகள்  முதல்
சன்னியாசிவரை  எல்லோரையும்  கவர்ந்தது . பாடி மகிழ்ந்தனர்  பலர்! ஆடிக்களித்தனர்
பலர்!

                           திருவருட்பா எல்லோராலும்  போற்றப்பட  காரணம், மிகமிக  எளிமையாக
மிகமிக  இனிமையாக  ஒவ்வொரு  பாடலும்  அமைந்ததுமட்டுமல்ல!  கருத்தாழமிக்க
சொல்லோவியமாகவும்  திகழ்ந்தது  திருவருட்பா!

                           எத்தனையோ  மகான்களின்  எத்தனையோ  ஞானநூற்கள்  இருப்பினும்
அத்தனையும்  தன்னகத்தே  கொண்டு  எல்லாவற்றிலும்  சிறந்து  விளங்குகிறது
திருவருட்பா!

                           வள்ளல்  பெருமான், பொய்புகலேன் - புனைந்துரையேன் - சத்தியம்
சொல்கின்றேன்  என்று  உலகருக்கு  தயவுடன்  அன்புடன்  பண்புரைக்கின்றார். அது
மட்டுமா ?  "நான்  உரைக்கும்  வார்த்தையெலாம்  நாயகன்  தன்  வார்த்தையன்றோ!"
என்றல்லவா  பறைசாற்றுகின்றார்.

                            திருவருட்பா  பாடினால்  கிட்டும்  பேரறிவு!  உணர்ந்தால்  கிட்டும்  ஞானம்!
எத்தனை  முறை  படித்தாலும்  தெவிட்டாத  தெள்ளமுது  திருவருட்பா!

                            "பாடுவித்தால்  பாடுகின்றேன்" என  இறைவன்  தன்னை  பாட  பணித்ததால்,
வள்ளல்  பெருமானால்  இறைவனுக்கு  சூட்டப்பட்ட  பாமாலைகளே  திருவருட்பா!

                            திருவருட்பா  முழுமையும்  கடினமுயற்ச்சி  செய்து  சென்னை  ஆ. பாலகிருஷ்ணபிள்ளை  அவர்கள்  12  தொகுதிகளாக  வெளியிட்டார். சன்மார்க்க அன்பர்கள்  அகமிக  மகிழ்ந்து  திருவருட்பா  பதிப்புச்  செம்மல்  என்று  அழைத்து
பெருமைபடுத்தினர்.


                                  சென்னை  அருட்பெருஞ்ஜோதி  அச்சகத்தார்  முதல்  5 திருமுறை  ஒரு  தொகுதியாகவும்  6-ஆம்  திருமுறை  ஒரு  தொகுதியாகவும் அழகாக  நேர்த்தியாக
வெளியிட்டு  சன்மார்க்க  சங்கத்தவர்களை  மகிழ்வித்தனர்.

                                 சன்மார்க்கதேசிகன்  தவத்திரு  ஊரன்  அடிகளார்  சன்மார்க்கத்துக்கே
தன்னை  அர்பணித்துக்  கொண்ட   பெரியவர்.வள்ளல்  பெருமானின்  வாழ்க்கை
வரலாற்றை  மிகச்சிறப்பாக  நேர்த்தியாக  தெளிவாக எழுதிவெளியிட்டு  சன்மார்க்க
உலகிற்கு  பெருந்தொண்டாற்றியுள்ளார். வள்ளல்  பெருமானின்  அருட்பாக்களை
காலமுறைப்  படி  அழகாக  தொகுத்து  ஆறு  திருமுறைகளாக  பகுத்து  சிறந்த  உயர்ந்த
பதிப்பாக  இரு  பகுதியாக  வெளியிட்டு  மாபெரும்  சேவை  செய்துள்ளார். நன்கு
ஆராய்ந்து  பதிப்பித்து  அவரின்  தொண்டு  திருவருட்பா  வரலாற்றில்  சன்மார்க்க
உலகமே  சன்மார்க்க  தேசிகன்  தவத்திரு  ஊரன்  அடிகளாருக்கு  நன்றிக்கடன்
பட்டுள்ளது .

                                சிதம்பரம்  அண்ணாமலை  பல்கலை  கழகம்  ஒளவை  துரைசாமி
பிள்ளை  அவர்களை  கொண்டு  திருவருட்பா  முழுமைக்கும்  உரை  எழுத  வைத்த
10 பாகமாக  வெளியிட்டார்கள்.

                                திருவருட்பிரகாச  வள்ளலார்  தெய்வநிலையம்  வடலூரில்  தர்மச்சாலை
சத்திய   ஞான  சபை  நிர்வாகத்தை  நடத்திவருவதோடு  வள்ளல்பெருமானின்  பாடல்கள்
2 தொகுதி  உரைநடை  1 தொகுதி  என  3-ம்  சேர்த்து  மலிவு  விலையில்  மக்களுக்கு
வழங்கி  வருகிறார்கள்.

                                 உலகத்துக்கு  ஞானம்  வழங்கும்  புண்ணியபூமி  இந்தியாவில்  ஞான
ஆரண்யமாம்  தமிழகத்தில்  வந்துதித்த  திருவருட்பிரகாச  வள்ளலார்  இராமலிங்க
சுவாமிகள்  கருணையால்  வாழ்ந்துவரும்  அடியேனை  ஒரு  பொருட்டாக  கருதி,
தொடர்ந்து தாராளமாக  காணிக்கை  தந்து, சபை, வீடுகட்டிதந்து  எம்மை  ஆதரிக்கும்
நெய்வேலி  தாய்  ஜோதி  ஸ்ரீ  Er . நகுலன்  அவர்கள்  அன்பால்  இந்நூல்  வெளியாகிறது.
ஞானம்  இங்கே  பரசியமாகிறது!

                                திருவருட்  பிரகாச  வள்ளல்  பெருமான்  உள்ளத்தில்  இருந்து  உவகையுடன்
உரைப்பார்  எனக்கருதி  அடியேன்  மெய்ஞான  உரை  எழுத  சம்மதித்தேன். அடியேனை
குருவாக்கி, மெய்ப்பொருள்  விளக்கம்  கொடுத்து  ஞான  சரியையில்  கூறியபடி  திருவடி
தீட்சை  கொடுத்து  நாடிவரும்  எல்லோரையும்  மரணமிலா  பெருவாழ்வு  பெற  அழைத்துச்
செல்கிறார்  வள்ளலார்!

                                1980 - லிருந்து  28 வருடமாக  அடியேனை  வழிநடத்தி  வாழ்விக்கும்  வள்ளல்
இராமலிங்கரை  பணிவதை  தவிர  எமக்கு  வேறு  வேலையேயில்லை! அவர்  இட்ட
பணியை  செய்வதே  எம்கடன்!

 
         "யாதும்   ஊரே  யாவரும்  கேளீர் "

         மரணமிலா  பெருவாழ்வு  பெற  முதலில்  உபதேசம்!  அடுத்து  தவம்  செய்யும்  முறை  உணர்த்தி  திருவடி தீட்சை!   மெய்ப்பொருளை  அறிந்து  உணர்ந்து  எல்லோரும்  இன்புற்று
வாழ  வழி  காட்டுகிறார் வள்ளலார். அடியேன்  ஒரு  கருவியாகவே  செயல்படுகிறேன்.

       "ஆட்டுவிக்கிறார்  ஆடுகின்றேன் "
  அருட்பா  படித்தால்  அறிவில்  தெளிவு!
  அருட்பா  படித்தால்  அறியலாம்  ஆண்டவனை!
  அருட்பா  படித்தால்  அமைதி  கிட்டும்!
  அருட்பா  படித்தால்   ஆனந்தம்  பெறலாம்!
  அருட்பா  படித்தால்  ஆறறிவு  துலங்கும்!
  அருட்பா  படித்து  உணர்ந்தால்  ஞானி!
  படியுங்கள்  -  உணருங்கள்  -  தவம்  செய்யுங்கள்!
  கிட்டும்  மரணமிலா  பெருவாழ்வு!
                                                                       
                                                                                     என்றும்  உண்மையுள்ள
                                                                                                      சிவ  செல்வராஜ்