Sunday 30 October 2016

29. திருவருள் விழைதல்


தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில்
சாமியே நினையேத்திக்
காணு வேனிலை அருளிவன் புன்மையில்
காலங்கள் கழிக்கிறேன்
மாணு மன்பர்கள் என்சொலார் ஐயநீ
வந்தெனக் கருள்வாயேல்
நாணு வேன் அலன் நடுங்கலன் ஒடுங்கலன்
நாயினும் கடையேனே

தாணு = தான் + உ தான் ஆகிய இறைவன் நிற்கும் உ ஆகிய
இடது கண் சந்திரன். சாதனையால் கண் மணியிலிருந்து வெளிப்படும்
ஜோதியே! நம் மனம் தணிந்தால் உதிக்கும் சாமியே! உனையே நினைந்து வாழ வேண்டும்! உனையே நினைந்து வாழ வேண்டும்! உன் அருள் கிட்டினால் நடுங்கவோ ஒடுங்கவோ மாட்டேன். உன் அருள் பெற்ற அன்பர்கள் வாழ்த்துவர்.

தேவரே முதல் உலகங்கள் யாவையும் சிருட்டி ஆதிய செய்யும்
மூவரே எதிர்வரினும் - பாடல் 3

முத்தொழில் செய்யும் மும்முர்த்திகளும் மற்றும் எல்லா தேவர்களும் வந்தாலும் சரி எனக்கு பெரிதல்ல! என் கண்மணி ஒளியாக விளங்கும் நீ அருள் பாலிக்காவிட்டால் யாவரையும் அறியா மூடனாவேன்!
அதாவது என்னை யான் அறியாவிட்டால் - உணராமல் மூவர் தேவர் யாரையும் அறியமுடியாது !



ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும் 

ஆற்றா புலம்பல்


அண்ணாவே என் அருமை அய்யாவே பன்னிரண்டு
கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம்பவள
வண்ணாவோ நற்றணிகை மன்னவோ என்றென்றே
என்னவோ துன்பத் திருங்கடற்குள் மன்னினனே

அண்ணாவோ - அண்ணாவுக்கு மேல் ஒளிரும் ஒளியே! என்னை
காக்கும் ஐயாவே! பன்னிரண்டு கலையுடைய சூரியகலை
- வலதுகண்ணே! வலது கண் இடது கண் அக்னி என மூன்று கண்
சேர்ந்த நிலையே வேல், சிவந்த ஜோதியே தணிகையாகிய என் கண்மணியே
என இப்படியெல்லாம் எண்ணி உனை அடையாமல் உலக வாழக்கையில்
சிக்கி தவிக்கிறேனே காத்தருள்வாய்!

அருணகிரி தன்னப்பா நற்றணிகை தன்னில்
அமர்ந்தருளும் என்னப்பா - பாடல் 2

அருணகிரிக்கு தந்தையே கண்மணியில் அமர்ந்து அருள்புரியும் என் அப்பா என்கிறார்  வள்ளலார். கண்மணி ஒளியே அருணகிரிக்கு வள்ளலாருக்கு தந்தையாகும் உலக உயிர்களனைத்திற்கும் அப்பா ஒளியேயாகும்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும் 

நெஞ்சவலம் கூறல்



இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன்
ஏழை மார்முலைகே கேவிளைந் துழன்றேன்
பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
பாவி யேன் எந்தப் பரிசுகொண்ட டைவேன்
அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர்
அகத்துள் ஊறியே ஆனந்த அமுதே
தொழுது மால்புகழ் தணிகை யென்னரசே
தோன்ற லே பரஞ்சுடர் தரும் ஒளியே



அமுது அமுது கண்ணீர் ஊற்றென பொங்கி வழியும் கண்மணி உள் ஓங்கி
வளர்ந்திடும் ஒளியே! - அமுதமே ! கண்ணனும் வணங்கி  புகழும் கண்மணி
ஒளியே அரசே ! பரஞ்சுடரால்  விளைந்த சுடரே !சஞ்சல மனத்தால் பெண்ணாசையி ல் சிக்கி தவிக்கும் தடுமாறும் நான் பிறந்தேனே !படரும் கொடியை பார்த்து பாம்பென மயங்கி நின்ற அறியாபாவி என்னை காத்தருள்வாயே!




ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

முறையிட்ட பத்து


பொன்னைப் பொருளா நினைப்போர்பால்
போந்து மிடியால் இரந்தலுத் தேன்
நின்னைப் பொருளென் றுணராத
நீசன் இனியோர் நிலைகாணேன்
மின்னைப் பொருவும் சடைபவள
வெற்பில் விளைந்த வியன்கரும்பே
முன்னைப் பொருளே தணிகையனே
முறையோ முறையோ முறையேயோ


இறைவா நீதான் மெய்ப்பொருள் என்று உணராமல் பொன்னை
பொருளாக எண்ணி அதை பெறுவதற்காக பலரிடமும் சென்று
முயன்று மனம் வெறுத்தேன்!  மின்னலைப்போன்ற சடையுடைய
செம்மையான சிவ ஒளியில் தோன்றிய இனிய ஒளியே! முதல் பொருளே
என்கண்மணியே காத்தருள்!

முக்கட் கரும்பின் முழு முத்தே - பாடல் 2

நமது வலது கண் இடது கண்  இரண்டும் உள்ளே சேரும் மூன்றாவது கண்
மூன்றும் சேர்ந்தால் தோன்றும் முத்தே - வெள்ளொளியே !

முன்பின் நடுவாய் முளைத்தோனே - பாடல் 3

நாம் தவம் செய்யும் போது கண்மணி ஒளியை தியானம் செய்யும் போது
முதலில் நமக்கு முன் தோன்றும் ஒளி. தவம் தொடரும் போது நம் சிரசின்
பின் தோன்றும்  ஒளிவட்டம். மேலும் தவம் தொடர தொடர சூரிய சந்திர அக்னி கலை சேர்ந்து மேலும்பும் சிர நடு மேல் எழும்பும் நடுவான ஜோதி! அனுபவம் கூறும் உண்மை!


மோனத்தவர்தம் அகவிளக்கே  - பாடல் 7

இறைவனை அடைய ஒரே வழி மோன நிலையே. 'மோனமென்பது ஞான வரம்பு ' என ஒளவையார் கூறியுள்ளதை காண்க .நம் கண்மணியில் உள்ளே அகத்தில் ஒளிரும் விளக்கை நினைந்து உணர்ந்து சும்மா இருந்தால் மோனமாக - மெளனமாக இருந்தால் கிட்டும் ஞானம். தொடர்ந்தால் கிட்டும் முக்தி.


மூவேதனையை அறுத்தருள் வோய் - பாடல் 8

நம் கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம்  செய்வோமானால் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்கள் நம் உள் ஒளியால் அறுந்து போகும். நம் கண்மணி மத்தியிலுள்ள துவாரத்தை மறைத்து கொண்டிருக்கும் திரையே மும்மலங்கள்.உள் ஒளியை நாம் பெருக்க பெருக்க திரை உஷ்ணத்தால் அறுந்து போகும். ஞானம் கிட்டும்.


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

Sunday 23 October 2016

குறை நேர்ந்த பத்து


வான்பிறந்தார் புகழ் தணிகை மலையைக் கண்டு
வள்ளலே  நின்புகழை மகிழ்ந்து கூறேன்
தேன்பிறந்த மலர்குழலார்க் காளா வாளா
திரிகிறேன் புரிகின்றேன் தீமை நாளும்
ஊன் பிறந்த உடலோம்பி அவமே வாழ்நாள்
ஒழிக்கின்றேன் பழிக்காளாய் உற்றேன் அந்தோ
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவி யேன் யான்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே


வானாகி நின்ற ஒளியில் பிறந்த நம் கண்மணி ஒளி கண்டு
இறைவனை பற்றி யார்க்கும் கூறாமல் இருப்பது மாபெரும் குற்றம்
இறைவனைக் பற்றி கூறாமல் பெண்ணாசை கொண்டு திரிகின்றோம்
அதனால் பற்பல துன்பத்திற்கு ஆளாகிறோம். இந்த உடலை வளர்க்க
பலபாவமும் செய்து வாழ்கிறோம். இப்படி உடல்பசி உள்ளப்பசி
கொண்டு உள்ளம் தடுமாறி அலையும் மனிதா! நான் ஏன் பிறந்தேன்
என்று சிந்திப்பாயாக!

மேருவில்லான் தன் செல்வமே தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளியே - பாடல் 4


சிவன் மேருமலையை வில்லாக கொண்ட வனல்லவா  அவன் மகன் முருகன் தான் தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளி, அதாவது நம் கண்மணியிலுள்ள - நம் உடலிலுள்ள நமக்கு ஞானம் தரக்கூடிய ஒளி.


பாவியேன் உடற்சுமையை பலரும் கூடி இடுகாட்டில்
வைக்குங்கால் என்செய்வேன் - பாடல் 6

நாம் தணிகை மலையான நம் கண்மணி ஒளியை உணர்ந்து தவம் செய்தால்
மரணம் இல்லை. இல்லையேல் உயிர் பிரியும். ஊரெலாங்கூடி பிணமென்று
பெயரிட்டு சுடுகாட்டிலோ இடுகாட்டிலோ கொண்டு சேர்ப்பார். இது தேவையா?
இதற்கா பிறந்தோம்? பிறந்தது சாகவா? சிந்தியுங்கள். சாகாதிருக்க வழி
தணிகை மலையை சார்வதே!


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்


Saturday 22 October 2016

பணித்திறம் சாலாமை


வஞ்சகப் பேதையர் மயக்கி லாழ்ந்துழல்
நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேனையோ
வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
தஞ்சகத் தணிகை வாழ் தரும வானையே

துன்பத்தை தரும் உலக வாழ்வை துட்சமென கருதி, நம் கண்மணியில்
ஒளியாக துலங்கும் தரும துரையை தஞ்சம் அடைந்தால் உய்யலாம்.
அதை விடுத்து வஞ்சக குணம் கொண்டவர் மயக்கத்தில் ஆழ்ந்து நெஞ்சம்
கெட்டு பாவியாகி கெட நேரிடும். தணிகை மலை ஐயனை - நம் கண்மணி
ஒளியை தேனிருந்தொழுகிய செங்கரும்பே , கண்ணை நாடியே மெய்யன்பர்
வாழ்வே என்றும், கண்மணி ஒளியை எண்ணி வழிபடும் அன்பர் வறுமை
நீங்கும் என்றும் , எல்லாம்  தரும் கற்பக விருட்ஷம் என்றும் போற்றிப்பாடுகிறார் வள்ளல் பெருமான்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

காணாப் பத்து


வரங்கொ ளடியார் மனமலரில்
மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
திறங்கொள் தணிகை மலைவாழும்
செல்வப் பெருக்கே சிற்பரமே
தரங்கொ ளுலக  மயல கலத்
தாழ்ந்துள் ளுறுக அழுதழுது
கரங்கொள் சிரத்தோ டியானுன்னைக்
கண்க ளராக் கண்டிலனே

புண்ணிய பயனால் தம் மனம் அமையப்பெற்ற கண்மலரில்
மகிழ்வுடனமர்ந்த மாமணியே! மனமலர் - நம்கண்மலரின்
முன் உள்ள திரைதான் - நம் வினைத்தொகுதி.  அதில்தான்
மனம் உள்ளது. அதைத்தான் வள்ளல்பெருமான் மனமலர் 
என்றார். மனம் உள்ள மலர்! உலகமயல் அகல - உலகத்தின்
மீது உள்ள ஆசை அகல, தாழ்மையுடன், பணிவுடன் நம் உள்ளம் உருக,
அழுது அழுது செய்யும் தவம் மூலமாகத்தான் இறைவனை காணலாம்.
நாம் உருப்பெற,அழுதால் அழுதால் பெறலாம் அவன் அருளை! கண்ணார
காணலாம், தயவு செய்து ஒளிமிகுமல்லவா! உஷ்ணம் பெருகுமல்லவா!
சூடு தணிய வேண்டுமே - சூடு ஆரவேண்டும் -கண்ணார வேண்டுமாயின்
தவம் தொடர்ந்து செய்ய வேண்டும். முதலில் உஷ்ணம் ஏறும் பின்
குளிர்ச்சி பெறும். இதுவே தியான அனுபவம். வள்ளலார் இதைத்தான்
கூறுகிறார்.



Thursday 20 October 2016

பணித்திறஞசாலாப் பாடிழிவு - திருவருட்பா


அடுத்திலேன் நின்னடியார் அவைக்குட் சற்றும்
அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம்
தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத்
தரிசனம் செய் தேமதுரத் தமிழ்சொல் மாலை
தொடுத்திலேன் அழுதுநின தருளை வேண்டித்
தொழுதுதொழு தானந்தத் தூநீர் ஆடேன்
எடுத்திலேன் நல்லனெனும் பெயரை அந்தோ
ஏன் பிறந்தேன் புவிச்சுமையா இருக்கி றேனே


நல்லவர்களோடு இறையடியார்களோடு சேர்ந்து வாழ வேண்டும்.
எல்லோரிடமும் அன்புடையவனாக இருக்க வேண்டும். இறைவன்
அடியாராக இருக்க வேண்டும். நம்மிடம் உள்ள வஞ்சம் உட்பட
எல்லா துர்குணங்களை விட்டொழிக்கணும். தணிகையான - எல்லா
துர்குணங்களையும் தணித்து நம்மை தூயவனாக்கும் கண்மணி
ஒளியை கண்டு தவம் செய்ய வேண்டும். தேமதூரத்தமிழ்ச்
சொல்மாலை இறைவனுக்கு சூட்டி மகிழ வேண்டும். எல்லோரும்
பாட முடியுமா? முடியும்!

இறைவனை    சரணடைபவன் தன்னாலே பாட ஆரம்பித்து விடுவான்.
ஆன்மீகவாதியின் ஒரு தகுதி பாடுவது. பாட்டுவிப்பவன் உள்ஒளி . பாடுவோம்
நாம்! கண்மணி ஒளியை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ நெகிழ கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும். இவ்வண்ணம் தவம் செய்து இறைவனை நமகண்மணி ஒளியை பெருக்கி ஞானம் பெறலாம்! இதில்லாதவன் பிறந்தது பூமிக்கு பாரமே!

சிவதருமம் செய்வோர் நல்லோர் - பாடல் 6
எவ்வளவோ பொருட்கள் தான தருமம் செய்வதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
'சிவதருமம்' என்ன? இந்த உலகத்தையே வேண்டுமானாலும் தானம் செய்து
விடமுடியும். சிவதருமம் செய்ய முடியுமா? அப்படி செய்பவரே நல்லோர்!
சிவதருமம் என்றால் ஒளியை தருமம் செய்வது! எப்படி செய்வது யார் செய்வது? எல்லாராலும் முடியாது! கண்மணி ஒளியை தருமம் செய்பவரே சிவ தருமம் செய்பவர். அடியேன் சிவ தருமம் செய்து வருகிறேன்! சற்குரு திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளாசியால் சிவதருமம் செய்து வருகிறேன்.

தன் உள் ஒளியை பெருக்கி கொண்டவன் ஞானி ஒருவரின் பரிபூரண அருள்
பெற்றவனே சிவதருமம் செய்ய முடியும்! சிவதருமம் செய்பவன் 'குரு' அவனை நல்லோர் என வள்ளலார் கூறுகிறார்.

நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை

சிவ தருமம் செய்யும் குரு லட்சத்தில் ஒருவரே! லட்சியம் உள்ள குருவே
இறைவனை சுட்டி கட்ட முடியும்! ஞானம் பெற்றவனாவான்!

அகமலர முக மலர்வோ டருள்செய்யுன்றன்
செம்பாத மலர் - பாடல் 9

நம் அகம் - உள்ளம் மலர்ச்சியடைய வேண்டும். முகமலர் - நம் முகத்தில்
உள்ள மலர் கண். செம்பாதமலர் - தவம் செய்து செம்மையேறிய திருவடியாகிய கண்மலர் நமக்கு அருள் செய்யும் இறைவன் இருப்பிடம்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

ஏழ்மையின் இரங்கல் - திருவருட்பா


தேனே உளங்கொள் தெளிவே அகண்ட
சீதம்மேவி நின்ற சிவமே
கோனே கனிந்த சிவபோத ஞான
குருவே விளங்கு குகனே
தானே தனக்கு நிகராய் விளங்கு
தணிகா சலத்தெம்  அரசே
நான் ஏழை இங்கு மனம் நொந்து நொந்து
நலிகின்ற செய்கை நலமே

தேன்போல் தித்திப்பவனே! உனை உணர்ந்தால் உள்ளத்தெளிவே!
எங்குமாய் பரந்து நின்ற ஒளியே! தலைவா! கண்மணி ஒளி ஏறி ஏறி
கனிந்து அதனால் வெளிப்படும் ஞான குருவே! என்கண்மணி ஒளியாக
விளங்கும் கண்மணி குகைக்குள் இருக்கும் ஒளியே குகனே!
உனக்கு நிகர் நீதான்! கண்மணி ஒளியே என் அரசே அறியாமையில்
உழலும் என்னை ஏழையை அறிவு தந்து ஞானம் தந்து ஞான செல்வந்தனாக்குக! என வள்ளல் பெருமான் வேண்டுகிறார்.

என்னை யான் அறிந்து உன் அடிசேர - பாடல் 8
என்னை நான் அறியவேண்டும்! நான் யார் என அறிய வேண்டும்!
அறிய ஒரே வழி இறைவன் திருவடியை சேர வேண்டும். இறைவன் திருவடியை சேர வேண்டும். இறைவன் திருவடியை நம் சிரசில் கண்மணியில் பதித்துள்ளான்! கண்டுகொள்வீர்! விரைந்து சேர்வீர் உன் கண்மணியில் ஒளியில் அதுவே திருவடி! மலர் பாதம்! இறைவன் திருவடியில் சரணடைந்தால் நாம் யார் என்று அறியலாம்.




ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

Tuesday 4 October 2016

ஆற்றா விரகம்


தணிகை மலையைச் சாரேனோ
சாமி யழகைப் பாரேனோ
பிணிகை யரையைப் பேரேனோ
பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ
ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ
பார்மீ திரங்கும்  நீரேனோ


தணிகை மலையான என் கண்மணியை சார்ந்தால் - சேர்ந்தால்
சாமி அழகு - ஒளி அழகை கண்டு களிக்கலாம் . என்னுடைய எல்லா
பிணிகளும் போய்விடும். மிகப்பெரிய பிணியாகிய பிறவிப்பிணியே
போய்விடும். இறையன்பு பெற்று அடியாராகலாம். ஒளி தரிசனம் பெற்று
அடியாராகலாம். ஒளி தரிசனம் பெற்று உள் புகுந்து தவம் தொடரும்
காலையில் உள்ளிருந்து அமுதம் கிடைக்கும்.  நம் தாகம் பசி எல்லாம்
போய்விடும். இறைவனுக்கு தொண்டு செய்யும் அடியார்களோடு
சத்சங்கம் கொண்டு தவம் செய்வார்க்கு இது கிட்டும்!

புவிமீது இருகால் மாடேனே - பாடல் 3

நான்கு கால் மாடு வண்டி இழுக்கவும் வயலில் உழவும் உதவும்.
தணிகை மலையை - தன் கண்மணியை ஒளியை அறியாதவன்
உலகில் உள்ள இரு கால்மாடு ஆகும். மனிதன் யார் என்றால் மனதை
இதம் பண்ண தெரிந்தவன். பக்குவமாக, தவம் செய்து இறைவனை
அடைபவன் மனிதன். மனம் போன போக்கிலே போகிறவன் மிருகம்.
"மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் " என ஒன்றாம்
வகுப்பில் படித்ததில் ஞாபகத்தில் கொள்க.


காட்டும் அவன் தாள் கண்ணேனோ - பாடல் 5
இறைவனை காட்டும் அவன்தாள் - திருவடி அது நம் கண்ணேயாகும்.
அதை அடைய மாட்டேனோ எனப்படுகிறார் வள்ளல் பெருமான்.
அதுமட்டுமா அவன் தாளாகிய - திருவடியாகிய கண்ணே நம்மையும்
காட்டும்! நாம் யார்?  என நமக்கு காட்டித்தரும்!
வள்ளலார்

காவி மலைக்கண் வாதியேனோ
கண்ணுள் மணியை துதியேனோ - பாடல் 7

காவிமலைக்கண் - நாம் தியானம் செய்யும் போது நம் கண் சிவந்து
காவிக்கண்ணாகி விடும். சந்நியாசி காவி கட்ட வேண்டும் என்பர்.
காவித்துணியை உடலில் சுற்றிக் கொள்பவன் சந்நியாசி இல்லை!
கண் வெள்ளை விழி சிவப்பாகி காவியாக எப்போதும் இருப்பவனே
- அதாவது சதா காலமும் தவத்தில் ஆழ்ந்திருப்பவனே உண்மையான
சந்நியாசி. நாம் அந்தகாவி மாலைகண்ணிலேயே வசிக்க வேண்டும்
என்கிறார் வள்ளல் பெருமான்.  கண்ணுள் மணியை நினைந்து உணர்ந்து
துதித்தலே தவம் செய்தலே காவி மலைகண் பெற வழியாகும் .

திருத்தணிகை தேவர் எவர்க்கும் முன்னாரே - பாடல் 8
திருத்தணிகைத்தேவர் - நம் கண்மணி ஒளி எவர்க்கும் முன்னரே
- தியானம் செய்யும் எவர்க்கும் முன்னால் தோன்றுபவர். நம் கண்மணி
ஒளியை தியானம் செய்தால் நம் கண்கள் நமக்கு முன் தோன்றும்.
கண்ணாரக் காணலாம் நம் கண்களையே!

என்தாய் தனக்குத் தாயாரோ - பாடல் 10
இறைவன், எனக்கும் என் தாய்க்கும் தாய்! எல்லாம் வல்ல,
எல்லா உயிர்களையும் படைத்த அந்த இறைவனே எல்லோருக்கும்
உயிர் கொடுத்த தாய்.