Wednesday 21 June 2017

47 ஆற்றா விண்ணப்பம்

அன்னையில் பெரிதும் இனிய என் அரசே
அம்பலத் தாடல் செய் அமுதே
பொன்னைஒத் தொளிரும் புரிசடை கனியே
போதமே ஒற்றிஎம் பொருளே
உன்னைவிட் டயலார் உறவு கொண் டடையேன்
உண்மைஎன் உள்ளம் நீ அறிவாய்
என்னைவிட் டிடல் நான் என் செய்வேன் ஓதிபோல்
இருக்கின்ற இவ்வெளி யேனே

பெற்ற தாயினும் பெரிய தயவுடைய தயாபரன் இறைவன்!
எவ்வுயிர்க்கும் தாயானவன் இறைவன்! நமக்கு உடல்
கொடுத்தவள் தாய்! அந்த உடலுக்கு உயிர் கொடுத்தவன்
எவ்வுயிர்க்கும் உயிரானவன் இறைவனே! அவர் எல்லோர் கண்ணிலும்
அம்பலமாக எல்லோரும் அறிய ஆடிக்கொண்டிருப்பவன் ஒளியாக! தவம்
செய்தால் அமுதம் தருபவன்! பொன் போன்று தக தகக்கும் மஞ்சளும்
சிவப்பும் கலந்த ஒளிப் பிழம்பு! சடை போன்று நீண்டு நம் உள்
ஓங்கி ஒளிர்பவன்! நம்மை கனிய வைக்கும் பக்குவமாக்கும் ஒளி!
போதம் எப்போதும் இருக்கச் செய்பவன்! உணர்வின் மூர்த்தி!
நம் கண்மணியில் ஒளியாக துளங்குபவன்! உன்னை விட்டு வேறு
எங்கும் போகேன்! என் உள்ளம் நீ அறிவாய்! காரணம், என் உள்ளத்தில்
ஒளியாக இருப்பவன் நீயன்றோ! உனக்கு தெரியாமல் எதுவும்
நடப்பதில்லையே! எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருப்பவன் நீயல்லவா!

என்னை விட்டிடில் நான் பிணமாவேனே! மரம்போல் உணர்வற்றிருக்கம் எனக்கு என்றும் உணர்வோடு இருக்க ! நீ என்னுடன் இருக்க அருள்வாயே!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Tuesday 20 June 2017

2.46 சிறுமை விண்ணப்பம்


இன்று நின்றவர் நாளைநின் றிலரே
என்செய் வோம்இதற் றுளம் பதைத்துச்
சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
நன்று நின்துணை நாடக மலர்த்தாள்
நண்ண என்று நீ நயந்தருள் வாயோ
பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே
போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே

அழிவே இல்லாத அருட்பெருஞ்ஜோதியான இறைவன்
கண்மணியில் துலங்குகிறான். உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவானவன். எவ்வுயிர்க்கும் தாய் அவன்! அவள் இருக்கிறவரை
- அவன் நம் உடலில் இருக்கும் வரை உடல் அழியாது. இறைவனாகிய ஒளி-உயிர் நம்மை விட்டு பிரிந்தால் இந்த உடல் அழிந்து விடும். உயிர்
அழிவதேயில்லை! இன்று இருப்பவர் நாளை இல்லையே! நேற்று இருந்தவர்
இன்று இல்லையே! நேற்று இருந்தவர் இன்று இல்லையே என்செய்வோம்
என ஏதுமறியாது உளம் கலங்கி வாடுகின்ற நாம் என்றும் நமக்கு துணை இறைவனின் மலரடி - கண்ணொளி என்பதை உணர்வோமாக! உணர்ந்து
தவம் செய்து இறையருளை பெறுவோமாக.

கந்தமும் மலரும் என நின்றாய் - பாடல் 6

மலரும் மணமும் போல இறைவன் சிவமும் சக்தியுமாக இருக்கிறான். விந்துவும் நாதமும் ஆக இருப்பவனே ஒலியும் ஒளியுமானவன்!

"நாத விந்து கலாதி நமோநம வேதமந்த்ர சொரூபா"
என அருணகிரியார் பாடலும் உரைப்பது இதுவே! நாத விந்துவான இறைவனே வேத மந்திர சொரூபமாக உள்ளவன் - ஒளியானவன் - கண்மணி ஒளியானவன்!

தத்து மத்திடைத்தயிரென வினையால் தளர்ந்து முப்பிணியில் தண்டுகொண்டு ழன்றே செத்து மீளவும் பிறப்பு

புத்தை நீக்கிய ஒற்றியம் பரனே - பாடல் 9

தயிர் வேண்டுமாயின் பாலை காய்ச்சி உறை விட்டு மத்து கொண்டு கடைய வெண்ணெய் தனியே தயிர் தனியே வருவது போலவே நம் தவமும்! நம் கண்மணியில் - உணர்வாகிய மத்தை
நாட்டி கடைய, பாலிலிருந்து, வினை கண்மணியிலிருந்து சுழன்று
விடும். இங்ஙனம் தவம் மேலோங்கும் போது ஒளி பெருகி வினையற்றுப் போகும். வினை பிரிந்து இல்லாதாக்குதலே தவம்!
புத்தை நீக்கிய ஒற்றியம் பரனே - என்பது நம் கண்மணியில் புற்று போல
வளர்ந்திருப்பது மறைந்திருப்பது வினை உள்ளிட்டமும் மலம். அதை நீக்க கண்மணி ஒளி பெருக வேண்டும். இதுதான் தவம் கண்மணி ஒளியில்
உணர்வூட்டினால் புத்தாகிய மும்மலம் நீங்கி விடும்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Wednesday 7 June 2017

2.45 வழிமொழி விண்ணப்பம்


நீல னேன்கொடும் பொய்யல துரையா
நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண்
சால ஆயினும் நின்கழல் அடிக்கே
சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ
ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல்
அகில கோடியும் அழிந்திடும் அன்றே
சீல மேவிய ஒற்றியம் பரனே
தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே.


பொய்மையைத்தவிர வேறு எதுவும் பேசாத நீசன்! நான் என்பதை
என் நெஞ்சில் ஐந்தும் சேர்ந்த கண்மணியில் ஒளியாக துலங்கும்
நீ அறிவாயே! இறைவா நீயே கதி என உன் திருவடியை சரணடைந்த
என்னை கைவிட்டிடாதே! ஆலகால விஷத்தை உண்டு தேவர்கள்
காத்தது போல் என் விஷமாம் மும்மலத்தை உண்டு. என் உள்
ஒளியே சிவமே காப்பாற்று. இல்லையேல் நான் அழிந்து விடுவேன்.
நல்ல அருள் கொண்ட என் கண் அம்பலத்தில் நடமிடும் ஒளியாகிய
இறைவனே காப்பாற்று! அருள்புரி!

ஒற்றி அரசே திருச்சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே - பாடல் 7
கண்மணி ஒளியே - திருவாகிய இறைவன் - சின்ன அம்பலமாகிய
கண்ணில் மணியில் திகழ்கிறான் ஒளி விளக்காக! திரு - சின்ன - அம்பலம்
திருச்சிற்றம்பலம். சின்ன அம்பலம் கண்ணில் திரு - ஒளியாகிய இறைவன்
உள்ளான்.

ஞான சற் குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Saturday 3 June 2017

44 ஆடலமுதப்பத்து


சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
வந்து நின்னடி காட்செய என்றால்
வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
இல்லை என்னில்நான் இல்லைஉயிந் திடலே
அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே

இறைவா தீய குணங்கள் எல்லாம் கொண்டவன் ஆதலால்
மனம் நொந்து வேதனைப்பட்டு வாடுகிறேன்! தளர்வடைகின்றேன்!
என் செய்வேன் என்மனம் என்வசம் இல்லையே! வினைவழி
இழுத்துக் கொண்டல்லவா போகிறது! இறைவா உன் திருவடி
தொண்டுசெய்ய திருவடியை எண்ணி தவம் செய்ய முடியவில்லையே !
உன்னருள் தந்தால் தான் நான் உய்வேன் இல்லையெனில் என்
வாழ்வில் உயர்வில்லை இன்பமில்லை எந்நாளும் துன்பமே! "அவனருளால்
அவன் தாள் வணங்கி"என்ற திருவாசகவரிகள் உணர்த்துவதும் இதுவே!

ஒற்றியூர் ஆன கண்மணி ஒளி, அந்திமாலை சூரியன் போன்று தகதகக்கும்
தங்கஜோதியாகும்! எல்லோரும் அறிய எல்லோர் கண்ணிலும் அம்பலமாகவே
ஆடிக் கொண்டிருக்கும் ஜோதியே அது!

என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா தேகுகின்றது
இவ் ஏழையேன் மனந்தான் உன்ன தின்னருள் ஒரு
சிறிதுண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மை -பாடல் 4

நம் மனதை எவ்வித செயல்களாலும் நிறுத்தவே முடியாது!
ஏனெனில் சதா இயங்கிக் கொண்டிருப்பது தான் அதன் வேலை!
மனம் இயங்கும்வரை வினை நடந்துக் கொண்டேயிருக்கும்!
வினையிருக்கும் வரைக்கும் பிறப்பு இறப்பு உண்டு! இதற்கு
என்னதான் முடிவு? மனதை அதன்வழியில் போய் அடக்குவது
அழிப்பதுதான் புத்திசாலிதனம்! அதற்க்கு குருவருள் திருவருள்
அவசியம் வேண்டும்! குருமூலம் கண்மணியில் மனதை நிறுத்தி
தீட்சை பெற்று தவம் செய்துவந்தால் மனம் கண்மணியில்
தங்குவதின் மூலம் கண் ஒளி பெருகும்! ஒளியால் கண்ணை மறைத்த
மறைப்பு வினைத்திரை கிழியும்! வினை மறைப்பு அற்றால் மனம்
இல்லையே! வினையின் வேலைக்காரன் தான் மனம்!புலன் வழி
- வினைவழி போகும் மனதை, கண்மணியில் - விழியில் நிறுத்தினால்
கருவிழி போவதை தடுக்கலாம்! காலனும் இல்லையே!

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com