Sunday 28 June 2020

72 . தவத்திறம் போற்றல்

                                           72 .  தவத்திறம்  போற்றல் 

              வில்வத்  தொடும்பொன்  கொன்றைஅணி 
                         வேணிப்  பெருமான்  ஒற்றிநகர் 
              செல்வப்  பெருமான்  சிவபெருமான் 
                         தியாகப்  பெருமான்  திருஅழகைக் 
              கல்வைப்  புடைய  மனம்  களிக்கக் 
                         கண்கள்  களிக்கக்  கண்டுநின்றேன் 
              இல்லைப்  புடையேன்  அம்மாநான் 
                         என்ன  தவந்தான்  செய்தேனோ 

               வில்வ  தழையும்,  கொன்றை  மலர்மாலையும்  அணிந்து  சடை  உடைய  பெருமான் 
இருப்பது  நம்  ஒற்றி  நகரான  கண்மணியில்!  அவர்  செல்வப்பெருமான்  சிவபெருமான்  
தியாகப்பெருமான்.  அவரின்  மேனி  அழகை  கல்மனம்  படைத்த  நான்  கண்கள்  களிக்ககண்டு 
மகிழ்ந்து  நின்றுவிட்டேன்.  இல்லறவாசியானநான்  அந்த  ஒப்பில்லா  இறைவனை  காண  என்ன 
தவம்  செய்தேனோ?!

              பிறப்பை  அகற்றும்  ஒற்றியில்  போய்ப் 
              பேரானந்தம்  பெறக்  கண்டேன் 
              இறப்பைத்  தவிர்த்தேன் ...............................  பாடல்  6

,             இனிபிறவா  நிலையை  தரும்  ஒற்றியாகிய  கண்மணி  ஒளியில்  போய்  நின்று  கண்டு 
அகமிக  மகிழ்ந்து  பேரானந்தம்  பெற்றேன்!  கண்டேன்  கண்களால்  கடவுளை!  அதன்  பயனால் 
இறப்பும்  இல்லாதநிலை  பெற்றேன்.  சாகாவரம்  பெற்றேன்.  இறைவன்  இருக்கும்  ஒற்றியூருக்கு 
கண்மணி  ஒளிக்கு  நாம்  போனால்  பிறப்பு  இறப்பு  இல்லாத  பேரின்ப  பெருவாழ்வு  பெறலாம்.

              தியாகப்பெருமான்  திருக்கூத்தைக்  கல்லாம் 
              கொடிய  மனம்  கரையக்  கண்டேன் 
              பண்டு  காணாத  எல்லாம்  கண்டேன் ......................  பாடல்  7

              நம்  ஒற்றியூரில்  கோயில்  கொண்டிருக்கும்  தியாகப்  பெருமானின்  திருநடனத்தை 
தவம்செய்து  செய்து  கல்லான  என்  கொடிய  மனமும்  கரையும்  படியாக  கண்டு  பேரானந்தம் 
கொண்டேன்.  அதுமட்டுமா?  இதுவரை  காணாத  அற்புத  காட்சிகளை  எல்லாம்  கண்ணில் 
கண்டேன்.

              ஒற்றி  நகர்தன்னில்  பார்த்தேன்  வினைபோம் 
              வழிபார்த்து  என்னை  மறந்தேன் ...................         பாடல்   9

              ஒற்றிநகரில்  -  என்  கண்மணியில்  பார்த்து  பார்த்து  தவம்  செய்யச்செய்ய  என் 
வினையெலாம்  இல்லாது  போக  கண்டு  என்னையே  மறந்தேன்.  பேரானந்தம்  அடைந்தேன்!

              சோம  சுந்தரனாராக  மதுரையில்  அருள்  பாலிக்கும்  சிவபெருமான்,  திருஞானசம்பந்தருக்கு 
முத்துச்சிவிகை  குடையொடுபொன்  சின்னம்  கொடுத்த  சிவபெருமான்  ஒற்றியூராகிய  நம்  
கண்மணியில்  தான்  அருள்  ஜோதியாக  துலங்குகிறார்!

       

             

71 . முக்தியுபாயும்

                                              71 .  முக்தியுபாயும் 

             ஒற்றி  ஊரனைப் 
                      பற்றி  நெஞ்சமே 
             நிற்றி  நீ  அருள் 
                      பெற்றி  சேரவே 
    
             ஒற்றியூரன் -  நம்கண்மணி  ஒளியாகிய  இறைவன்.  அவனைப்பற்றி -  மனதால்  
ஊன்றி  நின்றால்  உனக்கு  இறையருள்  கிடைக்கும் .

             சேர  நெஞ்சமே  தூரம்  அன்று  காண்  -    பாடல்   2

             இறைவனை  சேர  வெகுதூரம்  போக  வேண்டியதில்லை ?  ' காண ' -  நாம்  காணுகின்ற  
இடத்தில்  -  கண்ணில்  உள்ளான்.  நம்முடனேயே  இருக்கிறான்.

             முக்தி  வேண்டுமேல்  பத்தி  வேண்டுமால்  ........ பாடல்   3

             நாம்  முக்தியடைய  விரும்பினால்  கண்டிப்பாக  பக்தி  வேண்டும்.  மாறாத  பக்தியுடன் 
இறைவனை  சதாகாலமும்  எண்ணி  எண்ணி  உருக  வேண்டும்.  பக்தியில்லையேல்  முக்தி 
இல்லை!

             பிஞ்சகன்  பதம்  தஞ்சம்  என்பதே ...........  பாடல்   4

             நம்  கண்மணி  பிஞ்சு  -  என்றும்  இளசாகவே  உள்ளது.  நாம்  பிறந்தது  முதல்  நம் 
உடலில்  எல்லாம்  வளரும்  ஆனால்  கண்மணி  மட்டும்  வளராது?!  இந்த  உலகத்திலுள்ள 
எல்லோருக்கும்  பிறக்கும்போது  இருந்து  தன்மையிலேயே  எத்தனை  ஆண்டு  ஆனாலும் 
அப்படியே  இருக்கும்!  அங்கு  ஒளியாக  துலங்குகிறான்  இறைவன்!  அவனை  ஞானிகள்  
" பிஞ்சகன் "  என்றனர்.  அவன்  திருவடியே  தஞ்சம்  என்று  இருப்பவரே  முக்தி  பெறுவர்.

Friday 26 June 2020

64 . பிரசாதப் பதிகம்

                                              64 .  பிரசாதப்  பதிகம்

                   சரதத்  தால்  அன்பர்  சார்ந்திடும்  நின்திரு
                   விரதத்  தான்  அன்றி  வேறொன்றில்  தீருமோ
                   பரதத்  தாண்டவ  னேபரி  திப்புரி
                   வரதத்  தாண்டவ  னேஇவ்வ  ருத்தமே

                   இறைவன்  திருநடனத்திலிருந்து  உருவானது  தான்  பரதநாட்டியம்.  ஓயாது
நடமிடம்  நிருத்தனே,  உன்  திருவடியை  சரணடைந்து  தவம்  செய்யும்  மெய்யடியார்களுக்கு
எந்த  துன்பமும்  நெருங்காது!  தவம்  செய்வதே  விரதங்களில்  முதன்மையானது.  அவர்களே
உன்  திருவருளை  பரிபூரணமாக  பெறுவர்.

                   நீதி  மாதவர்  நெஞ்சிடை  நின்றொளிர்
                   சோதி  யேமுத்தொ  ழிலுடை  மூவர்க்கும்
                   ஆதி  யேநின்அ  ருள்ஒன்றும்  இல்லையேல்
                   வாதி   யாநிற்கும்  வன்பிணி  யாவுமே  .............     பாடல்  8

                   இறைவன்,  நீதி  வழுவா  நெறிமுறையில்  வாழும்  நற்றவத்தவர்  நெஞ்சத்தில்  -
கண்களில்  நின்று  ஒளிர்கிறான்!  அந்த  ஜோதியே  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரே  சிவன்
பிரம்மா  விஷ்ணு  ஆகிய  முத்தொழில்  புரியும்  மூர்த்திகளுக்கும்  ஆதியாவர்!  அப்படிப்பட்ட
ஆதிபரம்பொருளே  நம்  உயிராக  நம்  கண்களில்  ஒளியாக  துலங்குகிறார்!  அவர்  இல்லையெனில் 
நமது  எந்த  பிணியும்  போகாது!  வைத்தியநாதபெருமானான  அவர்  அருளே  எந்நோய்க்கும்
நல்ல  மருந்தாகும் .

                   பெத்தம்  அற்றிடப்  பெற்றவர்  .............................  பாடல்  9

                   எல்லாம்வல்ல  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரின்  நல்லருளே  சகல  நோய்களுக்கும்
நல்ல  மருந்தாகும்!  ஜோதியை  தரும்  அருள்ஜோதியே  இறைவனே  வைத்தியநாதர்  ஆகும்! 
பிறவிபிணியையே  நீக்க  வல்லது.  ஜோதிமருந்தே!  அப்படிப்  பட்ட  அற்புத  மருந்தான  ஜோதி
மருந்தை  பெற்றவரே  நோய்  நொடியின்றி  மரணமிலா  பெருவாழ்வு  பெறுவர் .

65 . நெஞ்சுறுத்த திருநேரிசை

                                         65 .  நெஞ்சுறுத்த  திருநேரிசை

               பொன்னார்  விடைக்கொடிஎம்  புண்ணியனைப்  புங்கவனை
               ஒன்னார்  புரம்எரித்த  உத்தமனை  -  மன்னாய
               அத்தனை  நம்  ஒற்றியூர்  அப்பனை  எல்  லாம்வல்ல
               சிந்தனைநீ  வாழ்த்துதி  நெஞ்சே

               எல்லாம்  வல்ல சித்தன்  நம்  கண்மணியாகிய  ஒற்றியூரில்  குடிகொண்டுள்ளவனே
எவ்வுயிர்க்கும்  தந்தை!  தலைவன்!  அவன்  தூய  வெள்ளைஒளியின்  மேல்  சிவந்த
ஒளியானவன்!  அந்த  செவ்வொளி  கண்டதும்  முப்புரமாகிய  மும்மலமும்  எரிந்துபோகும்!
அப்படிப்பட்ட  ஒப்புயர்வற்ற  அருட்பெருஞ்ஜோதி  இறைவனை  வாழ்த்து!  துதிசெய்!  வணங்கு!

               திருநாளைப்  போவான்  தொழுமன்றில்  புண்ணியனை  ஒற்றியில்
                     தாய்  ஆவான்  திருவடி   ...........................     பாடல்   4

               திருநாளைப்  போவார்  -  நந்தனார்  வணங்கி  போற்றிப்  பரவிய  அம்பலவாணன்
நடராசன்  தான்,  ஒற்றியில்  -  கண்ணில்  மணியாக  ஒளியாக  தாயாக  ஒளிர்பவன்!  அவன்
ஒளிவிடும்  இடமே  நம்  கண்களே  திருவடி  எனப்படும்.

               சொல்ஆர்ந்த  விண்மணியை  என்  உயிரை  மெய்ப்பொருளை
                      ஒற்றியில்  என்  கண்மணியை  நெஞ்சே  கருது .... பாடல்  5

               நாம்  செய்த  பாவங்கள்  எல்லாம்  எரிந்து  சாம்பலாகும்!  எங்கு?  எப்படி?  நாம்  நற்கதி
பெற  மோட்சம்  பெற  தவம்  செய்வோமானால்!  இறைவன்  திருவடியாகிய  நம்  கண்மணி 
ஒளியை  நினைந்து  உணர்ந்து  தவம்  செய்கையில்  உள்ஒளி  பெருகி,  கண்மணி  மத்திய
துவாரத்தை  அடைத்துக்கொண்டிருக்கும்  திரையாகிய  மெல்லிய  சவ்வு  -  நம்  பாவவினைகள்
உள்ஒளி  பெருகுவதால்  எரிந்து  சாம்பலாகும்!  இச்சாதனை  செய்பவரே  நற்கதியடைவர்.

               சித்தமனைத்  தீபகமாம்  சிற்பரனை  ஒற்றியூர்
                    உத்தமனை  நெஞ்சமே  ஓது  .....................................  பாடல்  21

               ஒற்றியூராகிய  கண்மணியில்  குடிகொண்ட  ஜோதியை  சிற்பரனை  -  சின்ன 
பரம்பொருளை  உத்தமனை  நெஞ்சத்தில்  இருத்தி  தவம்  செய்பவர்  சித்தத்திலே  தீபமாக
ஜொலிப்பான்  இறைவன்! 

               ஒற்றியில்  வாழ்  எந்தை  அடி  வணங்கு  வார்க்கு,  பதந்தருவான்,  செல்வங்கள்  யாவும்
தருவான்  இவ்வுலக  வாழ்வின்  இன்பங்கள்  யாவும்  கிட்டும்.  வாழ்வாங்கு  வாழலாம் .

63 . எண்ணத் திரங்கல்

                                                          63 .  எண்ணத்  திரங்கல்

                   எளியேன்நின்  திருமுன்பே  என்உரைக்கேன்  பொல்லாத
                   களியேன்  கொடுங்காமக்  கன்மனத்தேன்  நன்மையிலா
                   வெளியேன்  வெறியேன்தன்  மெய்ப்பிணியை  ஒற்றியில்வாழ்
                   அளியோய்நீ  நீக்காயேல்  ஆர்நீக்க  வல்லாரே

                   திருவொற்றியூராகிய  என்  கண்மணியில்  ஒளியாக  என்  உயிராக  துலங்கும்
இறைவா,  கல்மனம்  படைத்தபாவி  எனது  உடல்  பிணிகளை  நீதானே  நீக்கி  அருளவேண்டும்.
உன்னிடம்  கூறாமல்  நான்  யாரிடம்  கூறுவேன்.  துர்க்குணங்களால்  நிரம்பிய  என் 
உள்ளப்பிணியையும்  நீதானே  போர்க்கவேண்டும்.  அருள்வாய்  இறைவா !

                   முன்னேசெய்  வெவ்வினை  தான்  மூண்டதுவோ  அலது  நான்
                         இன்னே  பிழைதான்  இயற்றியதுண்டோ  ........பாடல்  2

                   நமக்கு  இப்பிறவி  அமைந்தது  நாம்  முற்பிறப்பில்  செய்த  வினையின்  காரணமாகவே! 
பிறந்தபின்  ஏற்படும்  துன்பங்கள்  முன்  வினையாலும்,  இப்பிறப்பில்  செய்யும்  வினைகளாலுமே
தான் !

66 . தனிமைக் கிரங்கல்

                                        66 .  தனிமைக்  கிரங்கல்

                 ஆக்கம்  ஆதிய ஐந்தொழில்  நடத்த
                        அயன்முன்  ஆகிய  ஐவரை  அளித்து
                 நீக்கம்  இன்றிஎவ்  விடத்தினும்  நிறைந்த
                        நித்த  நீஎனும்  நிச்சயம்  அதனைத்
                 தாக்க  எண்ணியே  தாமதப்  பாவி
                        தலைப்பட்  டான்அவன்  தனைஅகற்  றுதற்கே
                 ஊக்கம்  உற்றநின்  திருவருள்  வேண்டும்
                        ஒற்றி  ஓங்கிய  உத்தமப்  பொருளே

                 விரிந்து  பரந்த  எல்லையற்ற  இப்பிரபஞ்சத்தை  நடத்த  படைத்தல்,  காத்தல்,
அழித்தல்,  மறைத்தல்,  அருளல்,  எனும்  ஐந்தொழிலைபுரிய  நான்முகன்,  திருமால்,
உருத்திரன்,  மகேசன்,  சதாசிவன் என  ஐவரையும்  படைத்த  பரம்பொருளே  எங்கும்
எதிலும்  நீக்கமற  நிறைந்திருக்கிறான்.  நம்  கண்மணியிலும்  ஒற்றியிருக்கிறான்! 
இவையெல்லாம்  அறிந்தும்  ராட்சதம்,  தாமதம்,  சத்துவம்  என்னும்  முக்குணங்களில்
ஒன்றான  தாமதபாவி  என்னை  உய்வடைய  முடியாமல்  தடுக்கிறானே!  இறைவா  என் 
கண்மணியானவனே  உன்  திருவருளால்  இதினின்று  மீண்டு  உன்  பதம்  அடைய
அருள்புரிவாயாக!

                 மெய்ப்போதம்  உணர்த்துவார்  .......................      பாடல்  2

                 இத்தாமதகுணம்  நமக்கு  மண்ணாசை,  பொன்னாசை,  பெண்ணாசையை
ஊட்டி  கெடுக்கப்பார்க்கும்.  அதிலிருந்து  தப்ப  வேண்டுமாயின்  மெய்ப்போதம்  -
நம்மெய்க்கு  உடம்புக்கு,  போதம்  -  உணர்வு  தருவாரை  சரணடைந்து  உணர்வு 
பெறவேண்டும்!  அதாவது  சற்குருவை  அடைந்து  உபதேசம்  தீட்சை  பெறவேண்டும்.
தீட்சையின்  மூலம்  மெய்யுணர்வு  கிட்டும்.  எப்போதும்  போதத்துடன்  இருக்கலாம்.
போதமில்லையெனில்  மயக்கம்  -  தூக்கம்  -  மரணந்தான்!

                 கோடி  நாவினும்  கூறிட  அடங்கா  கொடிய  மாயையின்  நெடி
                         வாழ்க்கை  ................................                       பாடல்   5

                கோடி  நாவை கொண்டு  கூறினாலும்  இந்த  மாயையால்  ஆன  உலக  துன்ப
வாழ்க்கையை  கூறமுடியாது!  அளவிட  முடியாது!  சொல்லில்  வடிக்க  இயலாது
துயரமான  நீண்ட  நெடிய  பயணமாகும்  நமது  வாழ்க்கை!  இதிலிருந்து  மீள  ஒரேவழி,
நம்  மெய்ப்பொருளை  பற்றி  தவம்  செய்து  மீள்வது  ஒன்றுதான்!

               கண்ணிலான்  சுடர்  காணிய  விழைந்த  கருத்தை .............. பாடல்  8

               கண்ணில்லாதவன்  ஒளியை  காண  முடியுமா?  கண்களில்  ஒளியாக  துலங்குகிறான்
இறைவன்!  கண்களில்  ஒளியில்லாதவன்  குருடன்!  கண்களின்  துலங்கும்  ஒளி  உள்ளே
அக்னி  காலையிலிருந்து  இரண்டாக  பிரிந்து  இரு  நாடி  வழி  இரு  கண்களில்  துலங்குகிறது!
அதனால்  பார்க்கும்  ஆற்றல்  பெறுகிறான்.  அக்னி  கலை  ஒளி  இரு  நாடி  வழி  இரு  கண்ணில் 
வராதவன்  பார்வை  இல்லாதவன்.  பார்க்கின்ற  ஆற்றல்  பெற்றவன்  உணர்வால்  ஒளியை 
பெருக்கி  அதி  விரைவில்  வினையறுத்து  ஞானம்  பெறமுடியும்!  பார்வை  இல்லாதவனும்
ஞானம்  பெறலாம்!  இறைவன்  அருள்வார்!  உள்ளே  அக்னி  கலையில்  கருத்தை  செலுத்தி
தவம்  செய்யவேண்டும்.  சற்று  கடினமான  செயல்தான்!  இருப்பினும்  முயன்றால்  முடியாதது
ஒன்றுண்டா?  அருள்மயமான  இறைவன்  அருள்புரியாது  போய்விடுவாரா?!  சதாசர்வ
காலமும்  இறைவனை  நினைந்து  உணர்ந்து  நெகிழ்ந்தால்  கண்ணில்லாதவனுக்கும்
காட்சிகொடுப்பார்  கருணைகடலான  கடவுள்!

               எத்தனையோ  இறைவன்  அடியார்கள்  கண்ணில்லாதவர்கள்  முகத்தியடைந்த 
கதைகளை  படித்திருக்கிறோமல்லவா?  குருடனும்  முடவனுமான  இரட்டைபுலவர்கள்
இங்கே  வாழ்ந்தவர்  தானே!  இருவரும்  சேர்ந்து  சுற்றித்திரிந்தனர்.  சேர்ந்தே  கவிபல
பாடியுள்ளனர். ஞானம்  எல்லோர்க்கும்  அருள்பவனே  இறைவன்!  அகத்திலே  கடவுளை
காணலாமல்லவா?  அருளே  வடிவான  இறைவனை  கருத்திலே  இருத்தினால் 
கண்ணில்லாதவனும்  காணலாம்!

67 . கருணை பெறாது இரங்கல்

                                         67 .  கருணை  பெறாது  இரங்கல்

                நன்றி  ஒன்றிய  நின்னடி  யவர்க்கே 
                       நானும்  இங்கொரு  நாயடி  யவன்காண்
                குன்றின்  ஒன்றிய  இடர்மிக  உடையேன்
                       குற்றம்  நீக்கும்நல்  குணமிலேன்  எனினும்
                என்றின்  ஒன்றிய  சிவபரஞ்  சுடரே
                       இன்ப  வாரியே  என்னுயிர்த்  துணையே
                ஒன்றின்  ஒன்றிய  உத்தமப்  பொருளே
                       உனைஅ  லால்எனை  உடையவர்  எவரே

                இறைவா  உன்  அடியார்க்கெல்லாம்  அடியேன்  நான்.  மலையளவு  பெருந்துன்பம் 
உடையவன்.  என்குறைகளை  போக்கும்  அறிவு  இல்லாதவன்.  ஆயினும்  என்னுள்  என்
மெய்யிலே  நற்பொருளாக  கண்மணி  ஒளியாக  துலங்குகிறாயே  பரஞ்சுடரே!  இன்பக்கடலே,
என்னுயிர்  துணையே,  என்  உயிரில்  ஒன்றிய  உத்தம  சத்திய  பொருளே,  எனக்கு  உன்னை
விட்டால்  யார்  இருக்கிறார்?!  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரே  அருளுகவே.

                முன்பு தீது  செய்தேன்  இப்போது  தீது  செய்கிறேன்  இனிமேலும்  தீதுசெய்வேன்
இதுவே  என்  இயல்பு.  ஆனால்  இறைவா  உத்தம  பரம்பொருளே  நான்  உனக்கு  செய்வது
ஒன்றுமில்லையே!  அப்படியிருந்தும்  என்னை  ஆண்டு  அருள்கிறாயே  உன்  கருணையை
என்னென்று  போற்றுவேன்!  இறைவா  நீ  எப்படி  என்னை  ஆக்கசித்தம்  கொண்டுள்ளாயோ
அப்படியே  ஆகுக!  எல்லாமான  நீ  என்னை  உய்விப்பாய்  என  மகிழ்வோடு  வாழ்கிறேன்!
நீதானே  எமை  காக்க  வேண்டும்?  உன்  திருவடியே  சரணம்.

68 . அர்ப்பித் திரங்கல்

                                          68 .  அர்ப்பித்  திரங்கல்

                தம்பி  ரான்தய  விருக்கஇங்  கெனக்கோர்
                      தாழ்வுண்  டோஎனத்  தருக்கொடும்  இருந்தேன்
               எம்பி  ரான்நினக்  கேழையேன்  அளவில்
                      இரக்கம்  ஒன்றிலை  என்என்ப  தின்னும்
               நம்பி  ரான்என  நம்பிநிற்  கின்றேன்
                      நம்பும்  என்றனை  வெம்பிடச்  செயினும்
               செம்பி  ரான்அருள்  அளிக்கினும்  உனது
                      சித்தம்  அன்றியான்  செய்வதொன்  றிலையே

               எல்லாம்வல்ல  இறைவன்  -  தம்பிரான்  அருள்  தான்  எனக்கு  இருக்கிறதே  என 
ஆணவத்தோடு  இருந்துவிட்டேன்.  என்  தலைவனே  அடியேனுக்கு  சற்றேனும்  இரங்கி
ஆட்கொள்ளலாகாதா!  எல்லோரும்  நம்பக்கூடிய  பொருளான  ஒளியானவனே  நம்பிக்கை
நாயகனே  என்னை  துன்பத்திலாழ்த்துவதும்  அருள்  புரிவதும்  உனது  சித்தமல்லவா?
படைத்தவனான  உனக்கு  தெரியாததா?!  என்  வினையாற்றி  எனக்கு  என்ன  தரணுமோ?
எப்போது  அருளணுமோ  அருள்  எல்லாம்  உன்செயல்!  உன்திருவடியே  சரணம்.  நான்
சொல்ல  ஒன்றுமில்லை!

                ஆட்டுகின்றனை  ஆட்டுகின்றனன்  இவ்  அகிலகோடியும்
                         அவ்வகையானால்  ..................     பாடல்  3

                கோடிக்கணக்கான  அண்டங்களும்  அதில்  உள்ள  உயிர்கள்  அனைத்தினையும்
நீயே  ஆட்டுவிக்கின்றாய்!  ஆடுகின்றன!  அவன்  அன்றி  ஓர்  அணுவும்  அசையாது! 
அப்படியிருக்க  நம்  செயல்  ஏது?  சிந்திக்க  வேண்டிய  விஷயம்  இது?!

                பாடுந்  தொண்டர்கள்  இடர்படில்  தரியாய்  ............... பாடல்  6

                இறைவனை  நெஞ்சத்தில்  இருத்தி  பாடி  ஆடி  மகிழும்  நல்  அடியார்கள்  படும் 
துன்பங்களை  இறைவன்  பார்த்துக்கொண்டிருக்க  மாட்டார்!  ஓடிவந்து  அருள்  புரிவார்.

                ஒருவர்  எப்போது  இறைவனை  துதித்து  பாடல்  புனைவர்?  எண்ணத்தில்  இறைவன்
நிறைந்திருந்தாலே  அது  சாத்தியம்.  சித்தர்கள்  ஞானிகள்  பாடல்கள்  அவ்வாறே  அமைந்தன.
வள்ளல்பெருமான்  எண்ணமெலாம்  எல்லாம்  வல்ல  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரே 
நிறைந்திருந்தார்!  பல்லாயிரம்  அருள்  பாக்களை  பாடினார்.  இறை  அனுபவத்தில்  திளைத்தார்!
" திருஅருட்பா "  நமக்கு  கிடைத்தது.

                தன்னை  பாடும்  இராமலிங்கம்  விளக்கு  இல்லாமல்  கஷ்டப்படக்கூடாதே  என்று,
வள்ளலார்  தண்ணீரை  ஊற்ற  அதையும்  எரியச்  செய்தான்  ஆண்டவன்!  இதுபோல  இன்னும்
எவ்வளவோ  அற்புதங்கள்  வள்ளலார்  வாழ்வில்  நிகழ்ந்தது.

62 . நெஞ்சு நிலைக்கு இரங்கல்

                                              62 .  நெஞ்சு  நிலைக்கு  இரங்கல்

                     ஆளாக  நின்பொன்  அடிக்கன்பு  செய்திட  ஐயநெடு
                     நாளாக  இச்சைஉண்  டென்னைசெய்  கேன்கோடு  நங்கையர்  தம்
                     மாளா  மயல்சண்ட  மாருதத்  தால்மன  வாசிஎன்சொல்
                     கேளா  தலைகின்ற  தால்ஒற்றி  மேவும்  கிளர்ஒளியே

                     இறைவா  உன்பொன்  அடிக்கு  அடிமைபட்டு  அன்பு  செய்திட  நெடுநாளாக 
ஆசை  உண்டு  ஆனால்  என்  மனமாகிய  குதிரை  என்  சொல்  கேளாமல்  காமம்  முதலான
கீழான  எண்ணங்கொண்டு  தறிகெட்டு  ஓடுகிறது.  என்செய்வேன்!  ஒற்றியிலுள்ள  ஓங்கிவளரும்
ஒளியே  இறைவா!  மனமானது  காற்றைவிட  வேகமாக  ஓடி  நம்மை  மாயையில்  சிக்க 
வைத்துவிடும்.  அதிலிருந்து  தப்ப  வேண்டுமாயின்  நம்  கண்மணியில்  ஒற்றியிருக்கும் 
கிளர்ந்து  எழுந்து  ஓங்கி  வளரும்  ஒளியை  -  இறைவனை  சரணடையவேண்டும் .

                     ஒளியாய்  ஒளிக்குள்  ஒளிர்ஒளியே  ஒற்றி  உத்தமநீ  ............  பாடல்  2

                     நம்  கண்மணியிலே  ஒற்றியிருக்கும்  உத்தமனான  இறைவன்  ஒளியானவன் !
கண்மணி  ஒளிக்குள்  விளங்கும்  -  ஒளிரும்  ஒளியானவன்!  அருட்பெருஞ்ஜோதி   ஆண்டவனே
ஒளிக்குள்  ஒளியானவன்!  அணுவுக்குள்  ஒளியானவன் .

                     ஒற்றிவாணா  என்  கண்ணினுண்மாமணியே  ....................... பாடல்  7

                     திருவொற்றியூர்  என்பது  திருவாகிய  இறைவன்  ஒளியானவன்  நம்  கண்ணினுள்
விளங்கும்  மணியிலே  அதன்  மத்தியிலே  உள்ள  சிறு  துவாரத்தின்  உள்  துலங்குகிறான் !
திருவாகிய  ஒளி  ஒற்றியிருப்பதால்  நம்  கண்மணியே  திருவொற்றியூர்  எனப்பட்டது .
ஒற்றிவாணன்  -  ஒளியே .

                     சதானந்த  நாயகமே  மறை  நான்கினுக்கும்  ஒன்றே  உயர்ஒளியே
                            ஒற்றியூர்  எம்  உயிர்த்துணையே   ........................  பாடல்  9

                     நம்  உயிராக  துணையாக  நம்  கண்மணி  ஒற்றியிலே  ஒளியாக  துலங்குகிறான்
இறைவன்!  அந்த  இறைவனை  பற்றினால்  -  நம்  திருவடியை  கண்களை  பற்றினால் 
எப்போதும்  ஆனந்தமே!  பேரின்பமே!  சதா  ஆனந்த  பரவச  அனுபவமே!  அந்த  இறைவன் ,
ரிக் ,  யஜுர் ,  சாம ,  அதர்வணம்  என்ற  நான்கு  வேதங்களும்  உரைக்கும்  ஒரே  இறைவனான
உயர்வான  மேலான  ஒளியே!  நல்லவேதமும்  சொல்லும்  வேதநாயகன்  நம்  கண்மணியில்
ஒளியாக  துலங்குகிறான்!  நம்  உயிராக  விளங்குகின்றான்! 

                     என்றன்  கண்  இரண்டின்  இணையாம்  பரஞ்சுடரே  அழியா  நலமே
                            இன்பமே   ........................................                            பாடல்   10

                     நமது  இருகண்களிலும்  இணையாக  துலங்கும்  அந்த  இறைவன்  பரத்திலே -
வெளியிலே  -  ஆகாயத்திலே  உள்ள  சுடரே  -  ஜோதியே!  நம்  உடல்  அழிந்தாலும்  நம்
உயிர்  அழியாது!  நம்  கண்மணியில்  உயிராக  பரஞ்ஜோதி  இருக்கும்  வரை  நமக்கு 
நலமே  விழையும்!  எல்லா  இன்பமும்  பெறலாம்!

                     பொருளே  நின்பொன்னடி   ...............................   பாடல்   11

                     பொருள்  என்றால்  மெய்ப்பொருள்!  நமது  கண்மணி  ஒளியே!  அதுதான்
இறைவன்  திருவடி!  அந்த  திருவடி  -  ஜோதி  தங்கமயமானது!  தங்கம்  போல் 
தகதகக்கும்  ஜோதி  -  தங்கஜோதி .

61. பழமொழி மேல் வைத்துப்பரிவு கூர்தல்

                                  61. பழமொழி  மேல்  வைத்துப்பரிவு  கூர்தல்

                              வானை  நோக்கிமண்  வழிநடப்  பவன்போல்
                                    வயங்கும்  நின் அருள்  வழியிடை  நடப்பான்
                              ஊனை  நோக்கினேன்  ஆயினும்  அடியேன்
                                    உய்யும்  வண்ணம்நீ  உவந்தருள்  புரிவாய்
                              மானை  நோக்கிய  நோக்குடை  மலையாள்
                                    மகிழ  மன்றிடை  மாநடம்  புரிவோய்
                              தேனை  நோக்கிய  கொன்றையஞ்  சடையோய்
                                    திகழும்  ஒற்றியூர்த்  தியாகநா  யகனே


                                       சக்தியாய்  இடக்கண்ணிலும்  சிவமாய்  வலக்கண்ணிலும்  ஒளிநடம்
புரிகின்றது!  நம்  கண்மணியில்  ஒளியாக  துலங்குபவன்  பேரொளியாகி
உள்புகுந்தால்  தேன்போன்ற  அமுதம்  கிட்டும்.  இந்த  நிலையை  அறிந்து  உணர்ந்து
தவம்  செய்பவன்  உய்வான்!  இரட்சிக்கப்படுவான்!  இறைவனின்  அருள்ஒன்றே
குறிக்கோளாக  கொண்டு  செயல்படுபவன்  வாழ்வான்!  அதைவிடுத்து  உலகபொருட்கள்மீது
ஆசைப்பட்டு  மாயையில்  மயங்கி  திரிபவன்  உருப்படவே  மாட்டான்!  அப்படிப்பட்டவன்
யார்  என்றால்?  "வானை  நோக்கி  மன்வழிநடப்பவன்"  என  வள்ளல்  பெருமான்  கூறுகிறார்!
இதையே   "கண்பார்த்து  கால்  நடவாவிட்டால்  இடரேயுறும்"  என  ஞானியர்  கூறுவர்.
இதன்புறப்பொருள்  நாம்  நடக்கும்போது  பார்த்து  போக  வேண்டும்.  பத்திரமாக  போய்
சேரலாம்.  அகப்பொருள்  ஞானம்  என்னவென்றால்  கண்மணி  ஒளியை  பார்த்து  நினைந்து
உணர்ந்து  தவம்  செய்தால்  இறைவன்  திருவடி  -   கால்   -   ஒளி  உள்நடந்து  மூன்றாவது
கண்ணாகிய  அக்னி  கலையை  அடையும்.  அப்படிசென்றால்  முக்தி!  இல்லையெனில்
இடர்  மரணம்  வந்து  விடும்.  "பொருளைப்பற்றி  அருளை  நாடு!"

                         வாயிலான்  பெருவழக்குரைப்பது  போல  ................. பாடல்   2

             வாய்  இல்லாதவன்  அதாவது  ஊமை  அவன்குறையை  எப்படி  யாரிடம்
கூற  முடியும் ?  அதுபோல  இறைவனை  உணராது  எப்படி  தவம்  செய்வது?  முதலில்
நல்ல  ஒரு  குருவை  நாடி  இறைவனை  மெய்ப்பொருளை  உபதேசம்  பெற்று  தீட்சை
பெற்று  உணர்ந்து  தவம்  செய்யவேண்டும்.  பின்னரே  இறையனுபவம்  மட்டுமல்ல
எல்லா  நிலையும்   அறியலாம்!  எல்லாமும்  கிட்டும்!  "ஊமை  கண்ட  கனவுபோல"  என்றும்
கூறுவர்.  ஊமை  தான்கண்ட  கனவை  எப்படி  பிறருக்கு  கூறமுடியாதோ  அதுபோல
குருவை  பெறாதவன்  உபதேசம்  பெறாதவன்  தீட்சை  பெறாதவன்  சொல்லும் !?

             இங்கு  வள்ளல்  பெருமான்  நமக்கு  ஞானவிளக்கமும்  கூறுகிறார்.  வாயிலான்
-  இறைவன்  இருக்கும்  கோயிலின்  வாயிலில்  -  வாசலில்  நம்  கண்ணமணியாகிய
கோயில்  வாசலில்  இருப்பது  வினைகளை  சுமந்து  நிற்கும்  நாம்  தானே!?  நாம்  நம்
வினை  தீர  இறைவனிடம்  தானே  முறையிட  வேண்டும்?  நம்  கண்மணி  வாசலில்
நின்று  உள்  இருக்கும்  இறைவனிடம்  முறையிட்டால்,  அருள்  மயமான  இறைவன்
நம்  குறைநீக்கி  காத்தருள்வான்!  இறைவன்  திருவடியில்  அன்பில்லாதவன்  எப்படி
அவன்  அருளை  பெற  முடியும்?  "அன்பே  சிவம்" .  அன்பு  மயமானவனே  இறையருள்
பெறுவான்!

              வித்தை  இன்றியே  விளைத்திடுபவன்  போல
              மெய்ய்  நின்  இரு  மென்மலர்ப்  பதத்தில்
              பக்தி  இன்றியே  முத்தியை  விழைந்தேன்  ........................  பாடல்    3

              மெய்யிலே  -  நம்  உடலிலே  இருப்பதால்  இறைவனை  வள்ளல்  பெருமான்
மெய்ய  என்றார்.  மெய்யனான  இறைவனின்  இரு  மென்மையான  மலர்போன்ற
பதம்  -  பாதமே  நம்  இரு  கண்மலர்  -  கண்மணி.  அதில்  துலங்கும்  ஒளியின்மீது
நமக்கு  பக்தி  இல்லாவிட்டால்  எங்ஙனம்  முக்தி  கிட்டும்.  வித்து  இல்லாமல்  ஒன்றும்
விளையாது  இது  புறப்பொருள்.  வித்தை  இன்றியே  விளைத்திடுபவன்  என்பது  எந்த
ஒரு  வித்தையும்  அறியாதவன்  -  நம்மெய்ப்பொருளிலே  -  கண்மணி  ஒளியிலே
நினைந்து  உணர்ந்து  செயல்  வித்தை  செய்யத்தெரியவில்லை  எனில்  எங்ஙனம்
முக்தி  விளையும்?  தவம்  செய்யும்  வித்தை  தெரிந்தால்தான்  முக்தி  கிடைக்கும்
என்கிறார்  வள்ளலார்.  வித்தில்லாத  சம்பிரதாயம்  மேலுமில்லை  கீலுமில்லை  என்பர்
ஆன்றோர், நமக்கு  முக்தி  கிட்ட,  மேலே  போக  பரவெளியை  அடைய  குருவருள்தான்
வித்து!?  அந்த  வித்தை  முளைவிடச்செய்து  ஞானப்பயிராக  வளர்க்க  வேண்டியதே
நாம்  செய்யும்  தவமாகும்!  வித்து   போடுபவரை  நாடுக!  உங்களுக்கு  முக்தி  விளையும்
நிலமாகட்டும்!.

                       கலம்  இலாது  வான்கடல்  கடப்பவன்போல்   -   பாடல்  4

             வள்ளல்பெருமான்  கூறியதை  நன்கு  கவனியுங்கள்.  மரக்கலம்  தான்  கடலை
கடக்க  உதவும்.  "வான்கடல் "  என்றுதான்  வள்ளலார்  கூறுகிறார்.  உலக  பொருளை
கூறவில்லை!  சம்சார  சாகரத்தை -  பிறவிப்  பெருங்கடலை  கடக்க  இறைவன்  திருவடியாகிய
கலம்  ஏறவேண்டும்!?  அதுமரக்கலம்  அல்ல!  மெய்கலம்!  தோணிபோல்  காணுமடா  அந்தவீடு
என்று  சித்தர்  கூறுவது!  நம்  கண்கள்தான்!  தோணியப்பர்  என்று  சீர்காழியிலே  கோயில்
கொண்ட  இறைவன்  திருநாமம்!  இருப்பது  தோணிபோல்  காணும்  நம்  கண்ணிலே
இருக்கும்  சிவமாகிய  ஒளிதான்!?  நம்  கண்  ஆகிய  கலத்தில்  உட்கார்ந்து  தான்  வான்கடல்
கடக்கமுடியும்!

             இன்றைய  விஞ்ஞான  உலகில்  விண்கலம்  -  ராக்கெட்  மூலம்தானே  வான்கடல்
பயணம்  செய்கிறார்கள்!  என்றைக்குமே  மெய்ஞ்ஞானம்  கூறுவது  இறைவன்  திருவடியாகிய
நம்  கண்ணாகிய  கலம்  மூலமாகத்தான்  வான்கடல்  கடந்து  பரமாத்மாவை  அடைய
முடியும்!?  வான்வெளியில்  பரவெளியில்  சஞ்சரிப்பவனே  பரதேசி!  நாமும்  பரதேசியாவோம்!
பரம்பொருளை  அடைவோம்!

            மலம்  இலாத  நல்  வழியிடை  நடப்போர்
            மனத்துள்  மேவிய  மாமணிச்  சுடரே  .....................  பாடல்  -  4

            மலம்  இலாத  நல்வழியில்  நடப்போர்  -  மும்மலமும்  அண்டாத  -  இருக்கின்ற
மும்மலங்களும்  அற்றுப்போகும்  நல்ல  வழிதான்,  இறைவன்  திருவடியை  அடைந்து
தவம்செய்யும்  ஒப்பற்ற  வழியாகும்!  மலம்  இல்லாதவன்  விமலன்!  அது  இறைவன்தான்!
நாமெல்லாம்  மலம்  உள்ளவர்களே!  நம்  உச்சந்தலையிலிருந்து  உள்ளங்கால்வரை
நம்  உடலெல்லாம்  அழுக்கே!  மலமே!  மலமற்றுப்போக  வேண்டுமானால்  மலமற்ற -
மலம்  அண்டாத  விமலனை  -  இறைவனை  -  திருவடியை  -  நம்  கண்மணி  ஒளியை
பற்றவேண்டும்.  அதுவே  நல்லவழி!  அந்த  விமலன்  தங்கிய  மாமணி  -  கண்மணி
சுடரை  மனதில்  நிறுத்தினாலே  நல்வழி  நடக்க  இயலும்!  உலகெங்கும்  குப்பை
கூழங்களும்  மலமும்தான்.  நம்  உடலெங்கும்  அசுத்தம்தான்  அழுக்குதான்.  உலகில்
இறைவன்  மட்டுமே  தூய்மையானவன்!  தூய்மையான  அந்த  இறைவன்  நம்  உடலிலே
தூய்மையான  ஒரே  இடமான  நம்  கண்மணியிலேதான்  குடியிருக்கிறார்!?

             போர்க்கும்  வெள்ளத்தில்  பொன்புதைப்பவன் ................... பாடல்  5

                        கரைபுரண்டுஓடும்  ஆற்று  வெள்ளத்தில்  பொன்னை  புதைத்து  வைக்க  முடியுமா ?
ஆற்றிலே  வெள்ளம்  இல்லாதபோது  பொன் புதைப்பவனும்  முட்டாளே!  ஆற்றங்கரையில் ,
அமைதியான  இடத்திலேதான்  எதையும்  வைத்து  பயன்பெற  இயலும் .  நம்  வினைகளால்
மனம்  ஓயாது  ஓடிக்கொண்டே  இருக்கின்றது . கடல்  அலைபோல  சலித்துக்கொண்டே
இருப்பதுதான்  நம்  மனம் !  அப்படிப்பட்ட  மனதில்  எப்படி  இறைவனை  எண்ண  முடியும் ?
உணர்வது ?  மனமானது  வினை  உள்ளளவும்  இருக்கும் !  செயல்பட்டுக்கு  கொண்டேயிருக்கும்!
ஆற்றுவெள்ளத்தில்  எதிர்நீச்சல்  போடமுடியாது!  நிற்கவும்  முடியாது!  அதன்  போக்கிலேயே
போய்  கரையேறவேண்டியதுதான்!  ஓடிக்கொண்டிருக்கும்  மனதை  இறைவன்  திருவடியில்
ஓடச்  செய்வதே  புத்தி  சாலித்தனம்.  நம்  கண்மணியில்  மனதை  நிறுத்தி  பழக  பழக  ஓடும்
பொல்லாத  மனம்  ஒருநாள்  அடங்கும்.  வேகம்  குறைந்து  இறைவன்  திருவடியாகிய  நம்
கண்மணி  ஒளியில்  நின்று  விடும்!  குருமூலம்  கண்மணியில்  உணர்வை  தீட்சை  பெற்றவன்
பழகி  பழகி  தவம்செய்து  தவம்செய்து  உணர்வை  பெருக்கி  ஒளியை  பெருக்கி  மனதை
இல்லாமலாக்கிவிடுவான்?  எத்துன்பமும்  வாராது  காப்பாற்றப்படுவான்!

                              ஓட  உன்னியே  உறங்குகின்றவன்  ...............  பாடல்  6

               ஓட  எத்தனிக்காமல்  ஓட  நினைத்து  உறங்கிவிட்டவன்  வெற்றிபெற  போவதில்லை .
துன்பம்  அடைவான்.  இங்கு  வள்ளல்பெருமான்  கூறுவது  யாதெனில்,  ஒளி  உள்ளே  ஓட
வேண்டும்!  நாம்  செய்யும்  தவம்  -  ஒளி  உணர்வு  உன்னி  உன்னி  உள்ளே  அகத்திலே  -
அகமுகமாக  ஓட  வேண்டும்!  அங்ஙனம்  உன்னி  அகவழிபாடாக  கண்மணி  ஒளி  உள்ளே
ஓடும்படி  தவம்  செய்பவன்  புறச்செயல்  ஏதுமின்றி  உறங்குகின்றவன்  போல்  காணப்படுவான்!
அகத்தின்  நிலையை  புறத்திலே  மற்றவர்  அறியமாட்டார்!  உறங்குவது  போல்  -  தூங்குவது
போல்  தூங்காமல்  இருப்பது  இதுதான்!?  " தூங்காமல்  தூங்கி  சுகம்  பெறுவது  எக்காலம்"  என
சித்தர்  கூறும்நிலை  இதுவே!  உள்ளே  ஒளி  எப்படி  ஓடும்?  நம்  இரு  கண்மணியினுள்ளும்
இரு  நாடி  சென்று  உள்ளே  அக்னி  கலையில் -  மூன்றாவது  கண்ணான  இடத்தில  இணைகிறது!
இருகண்  உள்நாடிவழியாக  ஒளி  தவத்தால்  பெருகி  நெருப்பாரு  பாயும்!  இரு  நாடிகளே  மயிர்பாலம்
எனப்படும்!  மயிர்பாலம்  வழி  நெருப்பு  ஆறு  பாம்புபோல  செல்லும்!  அதைத்தான்  வெண்சாரை
என்றனர்  சித்தர்  பெருமக்கள்.  தூங்காமல்  தூங்கவெண்சாரை  ஓட  உன்னி  உன்னி  தவம்  செய்ய
குரு  மூலமாக  திருவடியில்  உணர்வை  பெறுவதே  திருவடி  தீட்சை!  உலக  இச்சையை  விட்டு
குருதீட்சை  பெறுக!


               முதல்  இலாமல்  ஊதியம்  பெறவிழையும்  ...........................  பாடல்  7

                முதல்  போடாமல்  வியாபாரம்  செய்ய  முடியாது .  எக்காரியமும்  நடக்காது!  ஒன்றும்
கிட்டாது .  இந்த  உலகத்திலேயே  முதலாவது  எது  இறைவன்  தானே!  ஆதி  என்றும்  கொள்ளலாம்!
எல்லாவற்றுக்கும்  மூலமானது  என்றும்  கொள்ளலாம்!  எது  இல்லாமல்  ஒன்றும்  இல்லையோ?
அதுவே  மூலம்!  முதல்!  ஆதி!  அது  இறைவன்!  எங்குமானவன்  நம்  கண்மணியிலும்  ஒளியாக
இருக்கிறானல்லவா?  இந்த  பிறவிக்கு  முதல்  -  வித்து  -  உயிர்  இறைவனல்லவா?  அந்த
முதலைவைத்துத்தானே  இந்த  பிறப்பு  இறப்பு  எனும்  வியாபாரம்  நடக்கிறது?  இதில்லாபம்
புண்ணியம்!  நஷ்டம்  பாவம்!  நாமெல்லாம்  இந்த  வியாபாரம்  தான்  செய்கிறோம்!  லாபமோ
நஷ்டமோ  -  பாவமோ  புண்ணியமோ  சேர்ந்து  விடுகிறது!  தவிர்க்க  முடியாது ?!

                 முதல்  இல்லாமல்  -  உயிர்  இல்லாமல் ,  உயிரை  வைத்து  வினைசெயல்படாமல்
கவனமாக  பார்த்து  தவம்  செய்து  ஊதியமாக  முக்தியை  பெறுவதே  சாமர்த்தியமாகும்!?
முதலை  வைத்து  -  உயிரை  வைத்து  ஊதியமாக  மீண்டும்  மீண்டும்  வினைகளை
சம்பாதிக்காமல்  செயல்  அற்று  சும்மா  இருப்பதே  சாமர்த்தியமாகும்!  சும்மா  இருந்தால்
தான்  செயல்  நடக்காது !  செயல்  இல்லாது  போனால்தான்  வினை  உருவாகாது!  வினை
உருவாகாது  போனாலே  முக்தி  கிட்டும் !?

                  சிந்தையை  நிறுத்தி  செயலற்று  சும்மா  இருக்கும்  திறத்தை  குருவினடி  பணிந்து
உபதேசம்  தீட்சை  பெற்று  தவம்செய்க  ஊதியம்  பெறுக !?

                                 கல்லை  உந்திவான்  நதி  கடப்பவர் .....................   பாடல்  8

               கல்லை  தெப்பமாக  கொண்டு  கரைசேர  முடியாதல்லவா?  உலகத்தில்
முடியாததெல்லாம்  அருளாளர்கள்  வாழ்வில்  இறையருளால்  நடந்துள்ளது!  திருநாவுக்கரசரை
கல்லில்  கட்டி  கடலில்  ஆழ்த்தினான்  கொடியவன்  ஒருவன்.  நமச்சிவாயமாகிய  கண்மணி
ஒளியைபற்றி  கல்லை  மிதக்கச்  செய்து  தெப்பமாக்கி  கரைசேர்ந்தார்.  இது  சரித்திரம்!
நடந்த  உண்மை?!  இறைவன்  திருவடியை  சரணடைந்தால்  எதுவும்  நடக்கும்!  " எல்லாம்
செயல்கூடும் "  என  வள்ளல்  பெருமான்  கூறுகிறார்?  இங்கே  வள்ளல்பெருமான்  கூறுவது
தியான  அனுபவம்  கல்  என  கூறியது  மனதை  " நெஞ்சக்கன  கல்லும் "  என  அருணகிரிநாதரும்
கூறுகிறார்.   நமது  நெஞ்சம்  அஞ்சு  பூதமும்  ஒருமித்த  இடம்!  ஐம்பொறிகளும்  கூடும்  இடம்!
அஞ்சும்  இணைந்த  இடமே  நெஞ்சு!  அது  நமது  கண்  அல்லவா?  நமது  நெஞ்சமாகிய  கண்ணில்
கல்போல  இருப்பது  நம்  வினையாகிய  திரை!  மும்மலம்  நெஞ்சக்கனகல்லும்  நெகிழ்ந்து  உருகு -
கண்மணி  ஒளியை  நினைந்து  உணர்ந்து  தவம்  செய்யச்  செய்ய  நெகிழ்ச்சி  ஏற்பட்டு  கல்போன்ற
மனமும்  கரைய  ஆரம்பித்து  விடும்!  அந்நிலை  வரவேண்டும்.  வளர  வேண்டும்.  அந்த  கல்லான
மனம்  இருக்கும்  கண்மணியை  உந்தி  உந்தி  உள்முகமாக  வான் -  பரவெளி  நதியாகிய  ஒளிவெள்ளம்
கடந்து  போக  வேண்டும்.  இதுதான்  சாதனை!  தவம்!  தவம்  செய்ய  குருவை  நாடு!

                நெய்யினால்  சுடு  நெருப்பவிப்பவன் .........................  பாடல்   9

                எரிகின்ற  நெருப்பில்  நெய்யை  ஊற்றினால்  அது  மேலும்  கொழுந்துவிட்டெரியும்.
 இதுபுறப்பொருள்.  நெய்யை  ஊற்றி  நெருப்பை  அணைக்க  முடியாது.  நீரை  ஊற்றித்தான்
நெருப்பை  அணைக்க  முடியும்.  ஆனால்  வள்ளல்  பெருமான்கூறும்  ஞானம்  என்ன  என்று
பார்க்கலாமா?!  உலகத்தில்  உள்ளதற்கு  நேர்மாறாக  உள்ளதே  நம்  ஞான  அனுபவம். 
நமகண்மணியில்  உள்ள  ஒளி  இருப்பது  நீரில்!?  நீர்மேல்  நெருப்பாக  நின்றிலங்குகிறான்
இறைவன்!  கண்கருவிழியினுள்  பிராணநீரில்  தான்  கண்மணி  ஒளி  துலங்குகிறது.  சித்தர்
பெருமக்கள்  கூறும்  ஞான  இரகசியம்  இது!  சாதாரண  நெருப்பு  நீரில்  அணைந்துவிடும்.
நம்  கண்மணி  உள்  ஒளி  எல்லாம்  வல்ல  அந்த  பரம்பொருளின்  பேரொளியின்  ஒருதுளி!?
இந்த  கண்மணி  ஒளி  எதாலும்  யாராலும்  அழிக்கமுடியாத  தண்ணொளி!?  சாட்சாத்
இறைவனே!  நம்  கண்மணி  ஒளியை  குருதீட்சை  மூலம்  உணர்ந்து  தவம்  செய்யச்  செய்ய 
ஒளிபெருகும்.  பெருநெருப்பு  ஆறுபோல்  பாயும்!  வெண்சாரைபாம்பு  போல்  உள்ளே  ஊர்ந்து
சென்று  அக்னி  கலையை  அடையும்!  இருகண்  ஒளியான  சூரிய  சந்திரஒளி  அக்னியோடு
சேர்ந்து  மேலும்  பெரு  நெருப்பாகும்!  ஓங்கிவளரும்  நெருப்பு  மேலேறும்  உச்சிக்கு  போகும்.
நம்  சகஸ்ரதளமாகிய  சிரநடு  உச்சியில்  ஒளிவர  வர  அங்கு  சேர்ந்திருக்கும்  அமுதம்
அதுதான்  நெய்சொட்டு  சொட்டாக  நம்  தொண்டையில்  வரும்!  எந்த  நாடி  வழியாக  ஒளி
மேலேறுமோ  அதே  நாடி  வழியாக  நெய்  -  அமுதம்  வழியும்போது  சுடுநெருப்பு  அவிந்து
போகும்.  குளிர்ச்சி  பொருந்திய  நெருப்பாகி  விடும்!  சுடும்  நெருப்பல்ல?  நாம்  நீரிலே  அரிசியை
கொட்டி  பானையில்  வைத்து  அடியிலே  நெருப்பை  மூட்டி  சமைப்பதுபோல,  சூர்யசந்திர  அக்னி
ஆகிய  மூன்று  நெருப்பைகூட்டி  எழுப்பி  உறைந்த  அமுதத்தை  இளகச்செய்து  பருகுவதோடு
சுடுநெருப்பு  சுகநெருப்பாகி  விடும்!?  இதுவே  ஞான  அனுபவம்!  இதுதான்  நெய்யால்  சுடுநெருப்பை
அவிப்பதாகும்!?  இங்கு  நெய்  அமுதம்  அவிப்பது  வேகவைப்பது  அணைப்பதல்ல!  வள்ளல்பெருமான்
இதுபோன்ற  ஞான  இரகசியங்களை  எல்லோரும்  அறிய  அடியேனை  எழுத  வைத்திருக்கிறார் .
அருள்  வள்ளல்  அல்லவா?  எல்லோரும்  அருள்  பெறவேண்டும்!  உணரவேண்டும்!  மரணமிலா 
பெருவாழ்வு  பெறவேண்டும்  என்பதே  அவர்  எண்ணம்!

                குளிர்ச்சி  பொருந்திய  தாமரை  திருவடிகளாகிய  நம்  கண்மணி  ஒளியை  உணர்ந்து 
தவம்  செய்க!  பொன்னடி  -  தங்கஜோதியை  காணலாம்!

                நீர்  சொரிந்தொளி  விளக்கெரிப்பவன்  ........................  பாடல்  10

                தண்ணீர்  ஊற்றி  விளக்கு  எரிக்க  முடியுமா?  திருவருட்பிரகாச  வள்ளலார்  இராமலிங்க
சுவாமிகள்  வாழ்க்கையில்  அந்த  அதிசயமும்  நிகழ்ந்தது!  வடலூர்  அருகில்  கருங்குழி  என்னும்
ஊரில்  வள்ளலார்  இருந்தபோது  ஒருநாள்  இரவு  எண்ணெய்  எனக்கருதி  தண்ணீரை  ஊற்றியே
விளக்கு  எரித்தார்!  பெருமான்  கைபட்ட  நீரில்  ஜோதி  சுடர்விட்டு  பிரகாசித்தது!  மறுநாள் 
வீட்டுக்காரர்  வந்து  கூறிய  பிறகுதான்  விளக்கில்  இருந்ததும்  ஊற்றியதும்  தண்ணீரே  என
அறிந்தார்  வள்ளல்  பெருமான்!  தன்  அடியவர்  -  தன்பிள்ளை  பாட்டெழுத  ஊறுவரக்கூடாதே
என  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர்  இரவு  முழுவதும்  தண்ணீரிலே  விளக்கெறிய  வைத்தார்!
வள்ளல்பெருமான்  மீது  இறைவன்  கொண்ட  அருள்திறத்தை  என்னென்பது?!  அதிசயம்!  அற்புதம்!
திருவருட்பா  எழுத  திருவருளே  துணை  நின்றது!  இது  புறத்தே  நடந்த  நிகழ்ச்சி.  வள்ளல்பெருமான்
நீர்  சொரிந்து  விளக்கெரிப்பது  ஞான  அனுபவம்,  தவம்.  குருவை  பெற்ற  திருவடி  தீட்சைபெற்று 
தவம்  செய்யும்  பொது  -  நினைந்து  -  உணர்ந்து  -  நெகிழும்  போது  நம்  கண்களில்  இருந்து  நீர் -
கண்ணீர்  சொரியும்.  அருவி  எனகொட்டும்.  கண்ணில்  உணர்வு  பெருகப்பெருக  கண்சிவந்து
கோவை  பழம்போலாகி  நீரை  சொரியும்!  அதேசமயம்  கண்மணி  உள்ஒளி  கொஞ்சங்கொஞ்சமாக
பெருகும்!  கண்ணீர்  சொரிய  கண்ஒளி  பெருகும்  தவம்  இதுவே!  வெளியே  நீர்சொரியும்  உள்ளே
ஒளி  பெருகும்.  இதுவே  வள்ளலார்  நமக்கு  உரைக்கும்  ஞானம் .




69 . கழிபகற் கிரங்கல்

                                                 69 .  கழிபகற்  கிரங்கல்

               ஆண்ட  துண்டுநீ  என்றனை  டியேன்
                         ஆக்கை  ஒன்றுமே  அசைமடற்  பனைபோல்
              நீண்ட  துண்டுமற்  றுன்னடிக்  கன்பே
                         நீண்ட  தில்லைவல்  நெறிசெலும்  ஒழுக்கம்
             பூண்ட  துண்டுநின்  புனிதநல்  ஒழுக்கே
                        பூண்ட  தில்லைஎன்  புன்மையை  நோக்கி
             ஈண்ட  வந்தரு  ளாய்எனில்  அந்தோ
                        என்செய்  கேன்நர  கிடைஇடும்  போதே

             இறைவா  முன்னரே  நீ  என்னை  ஆட்க்கொண்டுவிட்டாயே!  அப்படியிருந்தும் 
பனைமரம்  போல்  என்  உடல்தான்  வளர்ந்ததேயன்றி  உன்னடி  சேரவில்லையே!
உன்னை  உணராமல்  தீய  ஒழுக்கத்தில்  திழைத்து  விட்டேனே!  இறைவா  அருளே 
வடிவானவனல்லவாநீ  மீண்டும்  இங்கு  வந்து  அருள்  தருக!  உன்  அருள்  இல்லையெனில்
நான்  எப்படி  மீள்வேன்.  நரகத்தில்  போய்விடுவேனே.  காப்பாற்று  உன்இன்னருள்  தா!

             புலப்பகைவர்களால்  .............................  பாடல்   9

             நமது  ஐம்புலன்களும்தான்  நமக்கு  பகைவர்கள்  ஆகிவிடுகின்றனர்! மனம்
இட்ட  கட்டளையைத்தான்  புலன்கள்  செய்கின்றன!  விதிவழியே  மனம்  செயல்  படுகிறது. 
நாம்  என்ன  செய்வது?  ஒரே  வழி  இறைவனின்  காலைப்பிடித்துக்கொண்டு  கதறி
அழவேண்டும்!  இறைவனின்  திருவடி  நம்  கண்தானே!  பற்றுக  திருவடியை  நம் 
பற்றாகிய  வினையறும்!  கதிபெறலாம்!

             நாம்  இறைவனின்  காலை  பிடித்தால்  அவன்  நம்கையை  பிடித்துக்  கொள்வான்! 
சிக்கென  பிடிக்க  வேண்டும்!  பற்றிப்  பிடிக்க  வேண்டும்.  இறைவனின்  கால்  -  திருவடியாகிய
கண்தான்  நம்  கையாகும்!  கையுற  வீசி  நடக்க  நாணிகைகளை  கட்டியே  நடந்தேன்  என
வள்ளலார்  கூறுவதும்  இதுதான்  பார்வையை  சிதறவிடாமல்  பரந்து  போகாமல்  கண்ணிலேயே
நிலை  நிறுத்துவதே  தவம்!  

Thursday 25 June 2020

70 . தரிசனப் பதிகம்

                                               70 .  தரிசனப்  பதிகம்

             திருவார்  பொன்னம்  பலநடுவே
                     தெள்ளார்  அமுதத்  திரள்அனைய
             உருவார்  அறிவா  னந்தநடம்
                     உடையார்  அடியார்க்  குவகைநிலை
             தருவார்  அவர்தம்  திருமுகத்தே
                     ததும்பும்  இளவெண்  நகைகண்டேன்
             இருவா  தனைஅற்  றந்தோநா
                     இன்னும்  ஒருகால்  காண்பேனோ

             இறைவன்  தெவிட்டாத  அமுதம்  போன்றவன்!  அவன்  இருப்பதோ  பொன்னம்பல
நடுவில்!  தவம்  செய்யும்  அடியார்க்கு  உவகையளிப்பவர்.  ஆனந்தம்  தருபவர்.  அந்த
இறைவன்  ஜோதி  வடிவானவர்.  நம்  அறிவு  துலங்கும்படி  ஆனந்த  நடனம்  ஆடுபவர்.
தவம்  செய்யும்  அடியார்கள்  அவர்  திருமுகத்தில்  புன்னகை  ததும்பும்  ஆனந்த  நிலையை
காண்பர்.  தொடர்ந்து  காண்பவர்  இரு  வினைகளும்  அற்றுப்போகும்.  நாம்  கண்மணி  ஒளியை
எண்ணி  எண்ணி  தவம்  செய்கையில்  ஒளியின்  அசைவை  நடனத்தை  தொடர்ந்து  காணலாம்.
பிறவிபயன்  இதுவே.

              கருணைவிழி  வழங்கும்  அன்னார்
              அறிவானந்த  நடம்  ஆடும்  கழல்  .................................  பாடல்  2

             நினைந்து  உணர்ந்து  நெகிழ்ந்து  தவம்  செய்யும்போது  நம்  விழிகள்  அன்பாய்
நெகிழ்ந்து  கருணை  ததும்பும்  விழிகளாகும்!  இங்ஙனம்  சாதனை  முதிரிச்சி  பெறுகையில்
இறைவன்  கழல்  -  திருவடியில்  -  கண்ணிலே  -  நம்  கண்ணிலே  -  ஒளியின்  அசைவை
காணலாம்!  அதுவே  நடனம்  என்பர்.  ஒளிநடனம்  காண்பர்  அறிவு  துலங்கும்.  அதனால்
தான்  அறிவானந்த  நடம்  என்றார்  வள்ளலார்.

             கோயிற்கருகே  சென்று  மனம்  குளிர்கண்டேன்  ..............  பாடல்  3

             இறைவன்  இருக்கும்  இடம்  தானே  கோவில்.  நம்  கண்மணியில்தானே  ஒளியின்
இறைவன்  கோயில்  கொண்டுள்ளான்!  மனம்  குளிர  கண்டாராம்  எப்படி?  எப்படி  மனம்
குளிரும்?  தண்ணீரில்  கிடந்தால்  தானே  குளிரும்?  மனம்  இருக்கும்  கண்மணியில்
உணர்வை  வைத்து  தவம்  செய்யச்செய்ய  கண்ணீர்  பெருக்குமல்லவா?  கண்ணீரில்
கிடக்கும்  மனம்  குளிர்ந்து  தானே  போகும்?  எப்படி?  தவத்தால்  தான்  இறைவனை
காணமுடியும்!

             முழுமாதவத்தால்  கண்டேன்  நான்  என்  கண்  .............. பாடல்  4

             வள்ளல்பெருமான்  முற்பிறவியின்  பயனாய்  இளவயதிலேயே  இறைவனின்
பரிபூரண  அருள்  பெற்றார்.  அவரே  கூறுகிறார்!  முழு  மாதவத்தால்  கண்டேன்  நான்  என்
கண்ணை!  கண்மணி  ஒளியை!  இறைவனின்  திருமுகத்தை!  நாமும்  விடாது  தவம்
செய்தால்  காணலாம்  கடவுளை!  நம்  கண்ணிலேயே!?  நம்  கண்களாலேயே!?

            மின்  என்றுரைக்கும்  படி  மூன்று  விளக்கும்  மழுங்கும்  ....... பாடல்  10

           ஒளிவடிவாம்  சூரியன்  சந்திரன்  அக்கினி  என  மூன்றும்,  நம்  இருகண்ணும்,  இருகண்
உள்சேரும்  மூன்றாவது  கண்ணும்  ஆகும்!  நாம்  தவத்தால்  இம்மூன்று  ஒளியையும்  இணைப்போம்!
இம்மூன்று  ஒளிசேர்ந்தாலும்  அதைவிட  கோடி  கோடி  பங்கு  ஒளிமிகுந்ததே  அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதியாகிய  பரம்பொருள்  சுயம்  ஜோதியின்  முன்  சூரியசந்திர  அக்னி  ஒளி
மங்கிவிடும்!  அப்படிப்பட்ட  பேரொளியை  நாம்  காணமுடியும்!  அதற்குரிய  சக்தியை  தருவார்
இறைவன்!  அவன்  அருள்புரிந்தால்தான்  நாம்  அவனை  காணமுடியும்!

           " அவனருளாலே  அவன்தாள் "  வணங்கி  என  மாணிக்கவாசகர்  கூறுவதும்  இதைத்தான்!
மகாபாரத  யுத்தத்தின்போது  பரமாத்மா  அர்ச்சுனனுக்கு  விஸ்வரூப  தரிசனம்  கொடுத்தார்.
ஆனால்  அர்ச்சுனனால்  பார்க்க  இயலவில்லை?!  கண்ண  பரமாத்மா  பார்க்கும்  சக்தியை
ஞானக்கண்ணை  அர்ச்சுனனுக்கு  வழங்கிய  பின்னரே  அர்ச்சுனனால்  காணமுடிந்தது?!
அப்படியிருந்தும்  உள்ஒளி   வெள்ளத்தை  என்னால்  தாங்கமுடியவில்லை  என  கதறினான்.
கண்ணைபரமாத்மா  அர்ச்சுனனை  பழைய  நிலைக்கு  கொண்டுவந்தார்.  இதே  மகாபாரத
யுத்தத்தில்  கர்ணன்  அர்ச்சுனனின்  அம்பால்  வதைபட்டு  கிடக்கையில்  கிருஷ்ணபரமாத்மா
காட்சி  கொடுத்தார்!  பார்த்தான்  கர்ணன்!  அருள்புரிந்து  முக்தியை  வழங்கினார்.  கர்ணனுக்கு
கண்ணன்!  கண்ணன்  கூடவே  இருந்த  அர்ச்சுனனால்  காணமுடியாத  கண்ணனை  எதிரிக்
கூடாரத்தில்  இருந்து  கர்ணன்  கண்டான்!?

             நம்  கண்ணனை  -  கண்மணி  ஒளியை  காண  நம்  தவம்  செய்யவேண்டும்.  சற்குருவை
நாடி  தீட்சை  பெற்று  கண்ணை  நாடி  கடுந்தவம்  செய்தால்  காணலாம்!  கண்ணனை!  கடவுளை!
நம்  கண்மணி  ஒளியான  பரம்பொருளை!