Monday 18 January 2021

78 . நாரையும் கிளியும் நாட்டுறு தூது

                                        78 .  நாரையும்  கிளியும்  நாட்டுறு  தூது 

              கண்ணன்  நெடுநாள்  மண்ணிடந்தும் 
                        காணக்  கிடையாக்  கழலுடையார் 
              நண்ணும்  ஒற்றி  நகரார்க்கு 
                        நாராய்  சென்று  நவிற்றாயோ 
              அண்ணல்  உமது  பவனிகண்ட 
                        அன்று  முதலாய்  இன்றளவும் 
              உண்ணும்  உணவோ  டுறக்கமுநீத் 
                        துற்றாள்  என்றிவ்  வொருமொழியே 

              குரு  உபதேசம்  பெற்று  தவம்  செய்யும்  போது  கண்மணி  ஒளியை  எண்ணி  தவம் 
செய்கையில்  சிவமாகிய  ஒளி  வெளியே  நம்முன்னே  தோன்றி  மெல்லமெல்ல  நகர்ந்து  வலம் 
வருவதை  காணலாம்.  அதைக்  கண்டு  ஆனந்திக்கும்  தவசீலர்கள்  -  ஆத்மாக்கள்  அனைவரும் 
பெண்களே!  பெண்ணாகிய  ஆத்மாவாகிய  நாம்  இறைவனாகிய  -  பரமாத்மனாகிய  ஆணை  
சேர்தலே  பேரின்பம்!  அதற்குத்தான்  தவம்!  அந்த  அழகனை  கண்டாலே  ஆனந்த  மடையும் 
பெண்ணாகிய  ஆத்மா  பின்  உண்பதோ  உறங்குவதோ  செய்யாது!  சதாகாலமும்  சிவசிந்தனையிலேயே 
திளைக்கும்  ஆனந்த  அனுபவம்  பெற்றால்  ஊண்  உறக்கம்  வேண்டாமே!  அது  யாருக்கும் 
கிடைக்கும்?  தேவர்களாலும்  அறிய  முடியாத  திருவடி!  கண்ணன்  காண  முடியாத  திருவடி!
நாம்  நம்  கண்ணை  நாடினால்  நமக்குகிட்டும்!  கண்ணில்  மணியில்  ஒளியான  இறைவனிடம் 
நாரையே  நீ  தூது  போய்  என்  நிலை  கூறுவாய்  என்று  புனையப்பட்டது  இப்பாடல்.

77 . திருவுலாப் பேரு

                                        77 .  திருவுலாப்  பேரு 

               சீரார்  வளஞ்சேர்  ஒற்றிநகர்த் 
                       தியாகப்  பெருமான்  பவனிதனை 
               ஊரா  ருடன்சென்  றெனது  நெஞ்சம் 
                       உவகை  ஒங்கப்  பார்த்தனன்காண் 
               வாரார்  முலைக்கண்  மலைகளென 
                      வளர்ந்த  வளைகள்  தளர்ந்தனவால் 
               ஏரார்  குழலாய் என்னடிதான் 
                      இச்சை  மயமாய்  நின்றதுவே 

               அழகிய  நீண்ட  கூந்தலை  உடைய  தோழியே,  எல்லா  சிறந்த  வளங்களும்,  நிறைந்த 
திருவொற்றியூர்  உறையும்  தியாகப்பெருமான்  திருவீதியுலா  வந்தார்.  ஊராருடன்  நானும்  சென்ற  
எனது  நெஞ்சம்  மகிழ  கண்டு  களித்தேன்!  சிவத்தை  கண்ட  என்  கண்கள்  விம்மி  பூரித்து  ஆனந்தம் 
அடைந்தேன்!  அதனால்  கண்வளைகள்  தளர்ந்தன  சோர்ந்தன!  சிவத்தின்  மீதுகொண்ட  அன்பால் 
இந்நெகிழ்ச்சி  ஏற்பட்டது.

              தியாகப்  பெருமான்  பவனிவரப்  பார்த்தேன் 
                        கண்கள்  இமைத்திலகாண்  ......................... பாடல்  2

             நாம்  தவம்  செய்யும்  போது  சிவம்  -  ஒளி  வெளிப்பட்டுவிடும்.  அதை  பார்க்கலாம்!
கண்கொட்டாமல்  இமையாமல்  பார்த்துக்கொண்டே  இருக்கவேண்டும்.  இதுதான்  சாதனை!
அங்ஙனம்  சிவத்தை  பார்த்து  லயித்து  இருக்கும்போது  நாம்  புற  உலகத்தை  மறந்து  
போவோம்.  அதை  நயமாக  சொல்வதே  இப்பாடல்கள்  அனைத்தும்!

76 . தனித்திரு மாலை

                                        76 .  தனித்திரு  மாலை 

             வன்மூட்டை  பூச்சியும்  புன்சீலைப் 
                      பேனும்தம்  வாய்க்  கொள்ளியால் 
             என்  மூட்டைத்  தேகம்  சுறுக்கிட 
                      வேசுட்  டிராமுழுதும் 
             தொன்மூட்  டையினும்  துணியினும் 
                      பாயினும்  சூழ்கின்றதோர் 
             பொன்மூட்டை  வேண்டிஎன்  செய்கேன்
                      அருள்முக்கட்  புண்ணியனே 

             இறைவா  முக்கண்ணனே  பரம்  பொருளே,  மூட்டைபூச்சி  சீலைபேன்  இவைகள்  நம் 
மூட்டைதேகத்தை  பருத்த  உடலை  கடித்து  இரத்தத்தை  உறிஞ்சுகின்றதே!  பாயிலும்  துணியிலும் 
இருந்து  நம்மை  துன்புறுத்துகின்றது  எதற்காக  தெரியுமா?  நம்  உடலுள்  இருக்கும்  உயிராகிய 
பொன்மூட்டையை  பெறும்  பொருட்டே!  இறைவா  என்செய்வேன்!

             சக்திமான்  என்பர்நின்  தன்னை  ஐயனே 
             பத்திமான்  தனக்கலால்  பகர்வ  தெங்ஙனே .....................  பாடல்  3

             இறைவா  சிவமே  நீயே  சர்வசக்தியையுடையவன்!  அதுமட்டுமல்ல  சக்தியை  இடப்பாகம் 
கொண்டவன்!  உன்  மகிமையை  பத்திமான்களுக்கு  சொன்னால்  புரிந்துகொள்வர்.  நாத்திகம் 
பேசுவர்  அறியார்.