Thursday 29 September 2016

திருவடி சூட விழைதல்


தேனார் அலங்கல் குழல்மடவார்
திறத்தின் மயங்காத் திறல் அடைதற்க்
கானார் கொடியெம் பெருமான்தன்
அருட்கண் மணியே அற்புதமே
கானார் பொழில்சூழ் திருத்தணிகைக்
கரும்பே கருணைப் பெருங்கடலே
வானார் அமுதே நின்திருத்தாள்
அடியேன் முடிமேல் வைப்பாயே


பெண்ணாசையில் மயங்காது காத்து, சிவனாரின் அருட்கண்மணியே ,
அற்புதமே, திருத்தணிகை மலை என விளங்கும் என் கண்மணியே
கரும்பே, கருணைக்கடலே,,வானமுதே ,உன் திருவடியை அடியேன்
முடிமேல் வைப்பாயே!

பரதம் மயில் மேல் செயும் தணிகைப்பரனே - பாடல் 5

முருகப்பெருமான் மயில்மீது வருவான். முருகனான கண்மணி ஒளி
பலவர்ண ஒளிக்கு மேலான காட்சி தரும். மெய்யடியார் அனுபவம் இது
மயில்மீது பரதநாட்டியம் ஆடவா முடியும்?

குயில்மேல் குலவும் திருத்தணிகைக்
குணப்பொற்குன்றே கொள் கலப
மயில்மேல் மணியே - பாடல் 6


நம் கண்மணி ஒளியை தியானம் செய்யும் போது பலவர்ணங்கள்
ஒளியும் அதன்மேல் தூய ஒளியும் காட்சி கிட்டும். அப்போது
குயில் - பாடுவது என்பது பலவித ஓசை கேட்கும். தசவித நாதம் கேட்கும்.
பலவர்ண ஒளியின் மேல் ஜோதி முருகன் காட்சியும் தசவித நாதமும்
சாதனை செய்யும் அடியார்கள் பார்ப்பர்! கேட்பர்!

கடமும் திகழ் தணிகை மலையின் மருந்தே
வாக்கினோடு மனமும் கடந்தோய்  - பாடல் 7

கடம் - உடல், நம் உடலில் திகழும் தணிகைமலை கண்.
அதுவே நம் பிறவிப்பிணிக்கும் மருந்து. அந்த ஒப்பற்ற இறைவன்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் மனோ வாக்கு காயத்திற்கு
அப்பார்பட்டவன்! நம் உடலில் கண்மணியாக ஒளியாக இருந்தாலும்
உடலைதொடாமல் இருக்கிறான்! நம் மனதிற்கு அப்பாற்பட்டவன் !
நம் வாக்கு அவனிடம் செல்லாது! மவுனமே இறை மொழி!
மனம் இல்லாதவனே அருட்பெருஞ்ஜோதியை அடையமுடியும்,


திருத்தணிகை அரசே ஞான அமுதளிக்கும் வள்ளல்பெருமான் - பாடல் 9

திருத்தணிகை அரசன் - நம் கண்மணி . நம் கண் ஒளியே நமக்கு
ஞானத்தையும் அமுதத்தையும் தரும் வள்ளல் பெருமான். நம் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் இறைவன்தான் வள்ளல் பெருமான் என்கிறார். நமக்கு இறைவனை சுட்டி இராமலிங்க சுவாமிகளே வள்ளல் பெருமான்!

தெய்வச் சூளாமணியே - பாடல் 10


நவரத்தினங்கள் மாணிக்க மணி மாலைகள் எல்லாம் எல்லோரும் கழுத்திலும்
பெண்கள் தலையிலும் அலங்கரித்து கொள்வது. சூடிக்கொள்வது இறைவன்
நமக்கு அருளிய மணி நம் கண்மணியாகும்! யாரும் சூட முடியாத மணி
சூளாமணியாகும். எனவே நம் கண்மணியை சூளா மணி என்றனர் ஞானிகள்
பரிபாசையாக! இதுபோலவே சிந்தாமணி என்பதும். உலகில் உள்ள எல்லா
மணி மாலைகளும் கீழே சிந்திவிடும் சிதறி விடும். ஆனால் இறைவன் நமக்கு
அருளிய மணி நம் கண்மணி சிந்தாது சிதறாது. பத்திரமாக உள்ளது. எனவே தான் கண்மணியை  சிந்தாமணி என்றனர் ஞானிகள் பரிபாசையாக!

No comments:

Post a Comment