Friday 2 September 2016

திருவருட் பாமாலை - 2

எத்தனையோ மகான்களின் எத்தனையோ ஞான நூல்கள் இருப்பினும்
அத்தனையும் தன்னகத்தே கொண்டு எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது
திருவருட்பா!

வள்ளல் பெருமான், பொய்புகலேன் புனைந்துரையேன் சத்தியம் சொல்கிறேன் என்று உலகருக்கு தயவுடன் அன்புடன் பண்புரைக்கின்றார். அது மட்டுமா? "நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தையன்றோ!" என்றல்லவா பறைசாற்றுகின்றார்.

திருவருட்பா பாடினால் கிட்டும் பேரறிவு! உணர்ந்தால் மட்டும் கிட்டும் ஞானம்! எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாத தெள்ளமுது திருவருட்பா!
"பாட்டுவித்தால் பாடுகின்றேன் "என இறைவன் தன்னை பாட பணித்ததால் வள்ளல்பெருமானால் இறைவனுக்கு சூட்டப்பட்ட பாமாலைகளே திருவருட்பா!

திருவருட்பா முழுமையும் கடினமுயற்ச்சி செய்து சென்னை ஆ பாலகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் 12 தொகுதிகளாக வெளியிட்டார். சன்மார்க்க அன்பர்கள் அகமிக மகிழ்ந்து திருவருட்பா
பாதிப்புச் செம்மல் என்று அழைத்து பெருமைப்படுத்தினார்.

சென்னை அருட்பெருஞ்ஜோதி அச்சகத்தார் முதல் 5  திருமுறை ஒரு தொகுதியாகவும் 6- ஆம் திருமுறை ஒரு தொகுதியாகவும் அழகாக நேர்த்தியாக வெளியிட்டு சன்மார்க்க சங்கத்தவர்களை
மகிழ்வித்தனர்.

சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார்  சன்மார்க்கத்துக்கே தன்னை அர்ப்பணித்து கொண்ட பெரியவர்.வள்ளல் பெருமான் வாழ்க்கை வரலாற்றை மிக சிறப்பாக நேர்த்தியாக தெளிவாக எழுதி வெளியிட்டு சன்மார்க்க உலகிற்கு பெருந்தொண்டாற்றியுள்ளார்.வள்ளல் பெருமான் அருட்பாக்களை
கால முறைப்படி அழகாக தொகுத்து ஆறு திருமுறைகளாக பகுத்து சிறந்த உயர்ந்த பதிப்பாக இரு பகுதியாக வெளியிட்டு மாபெரும் சேவை செய்துள்ளார். நன்கு ஆராய்ந்து பதிப்பித்த அவரின்
தொண்டு திருவருட்பா வரலாற்றில் சன்மார்க்க வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கத்தக்கது!

சன்மார்க்க உலகமே சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகம் ஒளவை துரைசாமி பிள்ளை அவர்களை கொண்டு திருவருட்பா முழுமைக்கும் உரை எழுத வைத்து 10 பாகமாக வெளியிட்டுள்ளார்கள்.

--- தொடரும்


No comments:

Post a Comment