Thursday 5 January 2017

49 திருப்பள்ளித்தாமம் தாங்கல்


வெம்பு முயிருக் கோருறவாய்
வேளை நமனும் வருவானேல்
தம்பி தமையன் துணையாமே
தனையர் மனைவி வருவாரோ
உம்பர் பரவும் திருத்தணிகை
உயர்மா மலைமே யிருப்பவர்க்குத்
தும்பக் குடலை யெடுக்காமல்
துக்க வுடலை யெடுத்தேனே

நம் உயிர் பிரிகையில் நம் உடன்பிறப்புகள் பிள்ளைகள்
உறவினர்கள் மனைவி கூட வரமுடியுமா?
வரமாட்டார்கள்! வரமுடியாது! தேவர்கள் போற்றும் திருவாகிய
ஒளிக்கடவுள் தங்கி துலங்கும் தணிகைமலை - நம் கண்மணியில்
நினைவை நிறுத்தி வாழ்ந்தால் முக்தியுண்டு! அந்த தணிகேசனுக்கு
பூக்கூடை - குடலை கண்மலர் தாங்கிய உடலை எடுப்பது மேன்மை,
அது அறியாவிட்டால் துக்கவுட`லாகுமே!

தொல்லைக் குடுப்பத் துயரதனில்
தொலைத்தே னந்தோ காலமெலாம்
அல்ல லகற்றிப் பெரியோரை
யடுத்து மறியே னரும்பாவி
செல்வத் தணிகைத் திருமலைவாழ்
தேவா வுன்றன் சன்னிதிக்கு
வில்வக் குடலை யெடுக்காமல்
வீணுக் குடலை யெடுத்தேனே
என் வாழ்நாளெல்லாம் தொல்லை தரும் குடும்ப வாழ்வே கதி
என வீணாக கழித்துவிட்டேன்! சம்சார சாகரத்திலிருந்து மீள
வழிகாட்டும் பெரியோரை - நல்ல குருவை நாடி உபதேசம்
பெற்று உருப்பட வழியறியாது போய்விட்ட பாவியானேன்!
 எல்லா செல்வத்தையும் தருகின்ற, நம் குற்றம் தணியும்
இடமான கண் மணி ஒளியை அறிந்து, அந்த தணிகேசன்
சன்னிதிக்கு கண்மலராகிய வில்வகூடையை சுமக்காமல்
- அறியாமல் வீணுக்கு இந்த உடலை எடுத்தேனே என் செய்வேன்!

அவல வயிற்றை வளர்ப்பதற்கே
அல்லும் பகலும் அதனினைவாய்
கலவைப் படுவ தன்றிசிவ
கனியைச் சேர்க் கருத்திலென்
திவலை யொழிக்கும் திருத்தணிகைத்
திருமால் மருகன் திருத்தாட்குக்
குவளைக் குடலை யெடுக்காமல்
கொழுத்த வுடலை யெடுத்தேனே

நாம் நம் வயிறை வளர்பதற்கே இரவுபகலாய் பாடுபட்டு பணம்
சேர்த்து பாழாய் போகிறோம். வயிறு வளர்க்க சாப்பாடு சாப்பாடு
என கூப்பாடு போட்டுத் திரிகிறோம். அதாவது சா + பாடு = சாப்பாடு
- நாம் வாழ்வதற்காக சாப்பிடுகிறோமா என்றால் இல்லை! சாவுக்காக
பாடுபடுகிறோம். சா-பாடு எனத்தானே மனிதன் அலைகிறான். உயிர்வாழ
சிறிது உணவு உண்பவனே ஞானம் பெறுவான்! உடல் வாழ ருசித்து
ரசித்து சாப்பிட்டு சாவை வரவேற்பவரே அதிகம். சாப்பாட்டிலேயே
கவனம் சென்று விடுவதால் உலக வாழ்வே போராட்டமாகி விடுவதால்
மனிதன் அதற்காகவே கவலை படுகிறான். நம்மிடம் உள்ள சிவ கனியை
அறியாது போய் விடுகிறான். சிவமாகிய ஒளியின் கனி சண்முககனி.
கண்மணி ஒளி நம் எல்லா துன்பங்களையும் போக்கும் நம் தணிகாசல
மூர்த்தி திருவடியில் கண்மணியில் சரண் ஆனவன் தப்பித்து கொள்வான்.
இல்லாதவன் அந்த தணிகாசல மூர்த்தி அமர்ந்த குவளை மலரை
அறியாமல் கொழுத்த உடலை எண்ணியே மாழ்வான்.

No comments:

Post a Comment