Friday 26 June 2020

68 . அர்ப்பித் திரங்கல்

                                          68 .  அர்ப்பித்  திரங்கல்

                தம்பி  ரான்தய  விருக்கஇங்  கெனக்கோர்
                      தாழ்வுண்  டோஎனத்  தருக்கொடும்  இருந்தேன்
               எம்பி  ரான்நினக்  கேழையேன்  அளவில்
                      இரக்கம்  ஒன்றிலை  என்என்ப  தின்னும்
               நம்பி  ரான்என  நம்பிநிற்  கின்றேன்
                      நம்பும்  என்றனை  வெம்பிடச்  செயினும்
               செம்பி  ரான்அருள்  அளிக்கினும்  உனது
                      சித்தம்  அன்றியான்  செய்வதொன்  றிலையே

               எல்லாம்வல்ல  இறைவன்  -  தம்பிரான்  அருள்  தான்  எனக்கு  இருக்கிறதே  என 
ஆணவத்தோடு  இருந்துவிட்டேன்.  என்  தலைவனே  அடியேனுக்கு  சற்றேனும்  இரங்கி
ஆட்கொள்ளலாகாதா!  எல்லோரும்  நம்பக்கூடிய  பொருளான  ஒளியானவனே  நம்பிக்கை
நாயகனே  என்னை  துன்பத்திலாழ்த்துவதும்  அருள்  புரிவதும்  உனது  சித்தமல்லவா?
படைத்தவனான  உனக்கு  தெரியாததா?!  என்  வினையாற்றி  எனக்கு  என்ன  தரணுமோ?
எப்போது  அருளணுமோ  அருள்  எல்லாம்  உன்செயல்!  உன்திருவடியே  சரணம்.  நான்
சொல்ல  ஒன்றுமில்லை!

                ஆட்டுகின்றனை  ஆட்டுகின்றனன்  இவ்  அகிலகோடியும்
                         அவ்வகையானால்  ..................     பாடல்  3

                கோடிக்கணக்கான  அண்டங்களும்  அதில்  உள்ள  உயிர்கள்  அனைத்தினையும்
நீயே  ஆட்டுவிக்கின்றாய்!  ஆடுகின்றன!  அவன்  அன்றி  ஓர்  அணுவும்  அசையாது! 
அப்படியிருக்க  நம்  செயல்  ஏது?  சிந்திக்க  வேண்டிய  விஷயம்  இது?!

                பாடுந்  தொண்டர்கள்  இடர்படில்  தரியாய்  ............... பாடல்  6

                இறைவனை  நெஞ்சத்தில்  இருத்தி  பாடி  ஆடி  மகிழும்  நல்  அடியார்கள்  படும் 
துன்பங்களை  இறைவன்  பார்த்துக்கொண்டிருக்க  மாட்டார்!  ஓடிவந்து  அருள்  புரிவார்.

                ஒருவர்  எப்போது  இறைவனை  துதித்து  பாடல்  புனைவர்?  எண்ணத்தில்  இறைவன்
நிறைந்திருந்தாலே  அது  சாத்தியம்.  சித்தர்கள்  ஞானிகள்  பாடல்கள்  அவ்வாறே  அமைந்தன.
வள்ளல்பெருமான்  எண்ணமெலாம்  எல்லாம்  வல்ல  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரே 
நிறைந்திருந்தார்!  பல்லாயிரம்  அருள்  பாக்களை  பாடினார்.  இறை  அனுபவத்தில்  திளைத்தார்!
" திருஅருட்பா "  நமக்கு  கிடைத்தது.

                தன்னை  பாடும்  இராமலிங்கம்  விளக்கு  இல்லாமல்  கஷ்டப்படக்கூடாதே  என்று,
வள்ளலார்  தண்ணீரை  ஊற்ற  அதையும்  எரியச்  செய்தான்  ஆண்டவன்!  இதுபோல  இன்னும்
எவ்வளவோ  அற்புதங்கள்  வள்ளலார்  வாழ்வில்  நிகழ்ந்தது.

No comments:

Post a Comment