Friday 26 June 2020

61. பழமொழி மேல் வைத்துப்பரிவு கூர்தல்

                                  61. பழமொழி  மேல்  வைத்துப்பரிவு  கூர்தல்

                              வானை  நோக்கிமண்  வழிநடப்  பவன்போல்
                                    வயங்கும்  நின் அருள்  வழியிடை  நடப்பான்
                              ஊனை  நோக்கினேன்  ஆயினும்  அடியேன்
                                    உய்யும்  வண்ணம்நீ  உவந்தருள்  புரிவாய்
                              மானை  நோக்கிய  நோக்குடை  மலையாள்
                                    மகிழ  மன்றிடை  மாநடம்  புரிவோய்
                              தேனை  நோக்கிய  கொன்றையஞ்  சடையோய்
                                    திகழும்  ஒற்றியூர்த்  தியாகநா  யகனே


                                       சக்தியாய்  இடக்கண்ணிலும்  சிவமாய்  வலக்கண்ணிலும்  ஒளிநடம்
புரிகின்றது!  நம்  கண்மணியில்  ஒளியாக  துலங்குபவன்  பேரொளியாகி
உள்புகுந்தால்  தேன்போன்ற  அமுதம்  கிட்டும்.  இந்த  நிலையை  அறிந்து  உணர்ந்து
தவம்  செய்பவன்  உய்வான்!  இரட்சிக்கப்படுவான்!  இறைவனின்  அருள்ஒன்றே
குறிக்கோளாக  கொண்டு  செயல்படுபவன்  வாழ்வான்!  அதைவிடுத்து  உலகபொருட்கள்மீது
ஆசைப்பட்டு  மாயையில்  மயங்கி  திரிபவன்  உருப்படவே  மாட்டான்!  அப்படிப்பட்டவன்
யார்  என்றால்?  "வானை  நோக்கி  மன்வழிநடப்பவன்"  என  வள்ளல்  பெருமான்  கூறுகிறார்!
இதையே   "கண்பார்த்து  கால்  நடவாவிட்டால்  இடரேயுறும்"  என  ஞானியர்  கூறுவர்.
இதன்புறப்பொருள்  நாம்  நடக்கும்போது  பார்த்து  போக  வேண்டும்.  பத்திரமாக  போய்
சேரலாம்.  அகப்பொருள்  ஞானம்  என்னவென்றால்  கண்மணி  ஒளியை  பார்த்து  நினைந்து
உணர்ந்து  தவம்  செய்தால்  இறைவன்  திருவடி  -   கால்   -   ஒளி  உள்நடந்து  மூன்றாவது
கண்ணாகிய  அக்னி  கலையை  அடையும்.  அப்படிசென்றால்  முக்தி!  இல்லையெனில்
இடர்  மரணம்  வந்து  விடும்.  "பொருளைப்பற்றி  அருளை  நாடு!"

                         வாயிலான்  பெருவழக்குரைப்பது  போல  ................. பாடல்   2

             வாய்  இல்லாதவன்  அதாவது  ஊமை  அவன்குறையை  எப்படி  யாரிடம்
கூற  முடியும் ?  அதுபோல  இறைவனை  உணராது  எப்படி  தவம்  செய்வது?  முதலில்
நல்ல  ஒரு  குருவை  நாடி  இறைவனை  மெய்ப்பொருளை  உபதேசம்  பெற்று  தீட்சை
பெற்று  உணர்ந்து  தவம்  செய்யவேண்டும்.  பின்னரே  இறையனுபவம்  மட்டுமல்ல
எல்லா  நிலையும்   அறியலாம்!  எல்லாமும்  கிட்டும்!  "ஊமை  கண்ட  கனவுபோல"  என்றும்
கூறுவர்.  ஊமை  தான்கண்ட  கனவை  எப்படி  பிறருக்கு  கூறமுடியாதோ  அதுபோல
குருவை  பெறாதவன்  உபதேசம்  பெறாதவன்  தீட்சை  பெறாதவன்  சொல்லும் !?

             இங்கு  வள்ளல்  பெருமான்  நமக்கு  ஞானவிளக்கமும்  கூறுகிறார்.  வாயிலான்
-  இறைவன்  இருக்கும்  கோயிலின்  வாயிலில்  -  வாசலில்  நம்  கண்ணமணியாகிய
கோயில்  வாசலில்  இருப்பது  வினைகளை  சுமந்து  நிற்கும்  நாம்  தானே!?  நாம்  நம்
வினை  தீர  இறைவனிடம்  தானே  முறையிட  வேண்டும்?  நம்  கண்மணி  வாசலில்
நின்று  உள்  இருக்கும்  இறைவனிடம்  முறையிட்டால்,  அருள்  மயமான  இறைவன்
நம்  குறைநீக்கி  காத்தருள்வான்!  இறைவன்  திருவடியில்  அன்பில்லாதவன்  எப்படி
அவன்  அருளை  பெற  முடியும்?  "அன்பே  சிவம்" .  அன்பு  மயமானவனே  இறையருள்
பெறுவான்!

              வித்தை  இன்றியே  விளைத்திடுபவன்  போல
              மெய்ய்  நின்  இரு  மென்மலர்ப்  பதத்தில்
              பக்தி  இன்றியே  முத்தியை  விழைந்தேன்  ........................  பாடல்    3

              மெய்யிலே  -  நம்  உடலிலே  இருப்பதால்  இறைவனை  வள்ளல்  பெருமான்
மெய்ய  என்றார்.  மெய்யனான  இறைவனின்  இரு  மென்மையான  மலர்போன்ற
பதம்  -  பாதமே  நம்  இரு  கண்மலர்  -  கண்மணி.  அதில்  துலங்கும்  ஒளியின்மீது
நமக்கு  பக்தி  இல்லாவிட்டால்  எங்ஙனம்  முக்தி  கிட்டும்.  வித்து  இல்லாமல்  ஒன்றும்
விளையாது  இது  புறப்பொருள்.  வித்தை  இன்றியே  விளைத்திடுபவன்  என்பது  எந்த
ஒரு  வித்தையும்  அறியாதவன்  -  நம்மெய்ப்பொருளிலே  -  கண்மணி  ஒளியிலே
நினைந்து  உணர்ந்து  செயல்  வித்தை  செய்யத்தெரியவில்லை  எனில்  எங்ஙனம்
முக்தி  விளையும்?  தவம்  செய்யும்  வித்தை  தெரிந்தால்தான்  முக்தி  கிடைக்கும்
என்கிறார்  வள்ளலார்.  வித்தில்லாத  சம்பிரதாயம்  மேலுமில்லை  கீலுமில்லை  என்பர்
ஆன்றோர், நமக்கு  முக்தி  கிட்ட,  மேலே  போக  பரவெளியை  அடைய  குருவருள்தான்
வித்து!?  அந்த  வித்தை  முளைவிடச்செய்து  ஞானப்பயிராக  வளர்க்க  வேண்டியதே
நாம்  செய்யும்  தவமாகும்!  வித்து   போடுபவரை  நாடுக!  உங்களுக்கு  முக்தி  விளையும்
நிலமாகட்டும்!.

                       கலம்  இலாது  வான்கடல்  கடப்பவன்போல்   -   பாடல்  4

             வள்ளல்பெருமான்  கூறியதை  நன்கு  கவனியுங்கள்.  மரக்கலம்  தான்  கடலை
கடக்க  உதவும்.  "வான்கடல் "  என்றுதான்  வள்ளலார்  கூறுகிறார்.  உலக  பொருளை
கூறவில்லை!  சம்சார  சாகரத்தை -  பிறவிப்  பெருங்கடலை  கடக்க  இறைவன்  திருவடியாகிய
கலம்  ஏறவேண்டும்!?  அதுமரக்கலம்  அல்ல!  மெய்கலம்!  தோணிபோல்  காணுமடா  அந்தவீடு
என்று  சித்தர்  கூறுவது!  நம்  கண்கள்தான்!  தோணியப்பர்  என்று  சீர்காழியிலே  கோயில்
கொண்ட  இறைவன்  திருநாமம்!  இருப்பது  தோணிபோல்  காணும்  நம்  கண்ணிலே
இருக்கும்  சிவமாகிய  ஒளிதான்!?  நம்  கண்  ஆகிய  கலத்தில்  உட்கார்ந்து  தான்  வான்கடல்
கடக்கமுடியும்!

             இன்றைய  விஞ்ஞான  உலகில்  விண்கலம்  -  ராக்கெட்  மூலம்தானே  வான்கடல்
பயணம்  செய்கிறார்கள்!  என்றைக்குமே  மெய்ஞ்ஞானம்  கூறுவது  இறைவன்  திருவடியாகிய
நம்  கண்ணாகிய  கலம்  மூலமாகத்தான்  வான்கடல்  கடந்து  பரமாத்மாவை  அடைய
முடியும்!?  வான்வெளியில்  பரவெளியில்  சஞ்சரிப்பவனே  பரதேசி!  நாமும்  பரதேசியாவோம்!
பரம்பொருளை  அடைவோம்!

            மலம்  இலாத  நல்  வழியிடை  நடப்போர்
            மனத்துள்  மேவிய  மாமணிச்  சுடரே  .....................  பாடல்  -  4

            மலம்  இலாத  நல்வழியில்  நடப்போர்  -  மும்மலமும்  அண்டாத  -  இருக்கின்ற
மும்மலங்களும்  அற்றுப்போகும்  நல்ல  வழிதான்,  இறைவன்  திருவடியை  அடைந்து
தவம்செய்யும்  ஒப்பற்ற  வழியாகும்!  மலம்  இல்லாதவன்  விமலன்!  அது  இறைவன்தான்!
நாமெல்லாம்  மலம்  உள்ளவர்களே!  நம்  உச்சந்தலையிலிருந்து  உள்ளங்கால்வரை
நம்  உடலெல்லாம்  அழுக்கே!  மலமே!  மலமற்றுப்போக  வேண்டுமானால்  மலமற்ற -
மலம்  அண்டாத  விமலனை  -  இறைவனை  -  திருவடியை  -  நம்  கண்மணி  ஒளியை
பற்றவேண்டும்.  அதுவே  நல்லவழி!  அந்த  விமலன்  தங்கிய  மாமணி  -  கண்மணி
சுடரை  மனதில்  நிறுத்தினாலே  நல்வழி  நடக்க  இயலும்!  உலகெங்கும்  குப்பை
கூழங்களும்  மலமும்தான்.  நம்  உடலெங்கும்  அசுத்தம்தான்  அழுக்குதான்.  உலகில்
இறைவன்  மட்டுமே  தூய்மையானவன்!  தூய்மையான  அந்த  இறைவன்  நம்  உடலிலே
தூய்மையான  ஒரே  இடமான  நம்  கண்மணியிலேதான்  குடியிருக்கிறார்!?

             போர்க்கும்  வெள்ளத்தில்  பொன்புதைப்பவன் ................... பாடல்  5

                        கரைபுரண்டுஓடும்  ஆற்று  வெள்ளத்தில்  பொன்னை  புதைத்து  வைக்க  முடியுமா ?
ஆற்றிலே  வெள்ளம்  இல்லாதபோது  பொன் புதைப்பவனும்  முட்டாளே!  ஆற்றங்கரையில் ,
அமைதியான  இடத்திலேதான்  எதையும்  வைத்து  பயன்பெற  இயலும் .  நம்  வினைகளால்
மனம்  ஓயாது  ஓடிக்கொண்டே  இருக்கின்றது . கடல்  அலைபோல  சலித்துக்கொண்டே
இருப்பதுதான்  நம்  மனம் !  அப்படிப்பட்ட  மனதில்  எப்படி  இறைவனை  எண்ண  முடியும் ?
உணர்வது ?  மனமானது  வினை  உள்ளளவும்  இருக்கும் !  செயல்பட்டுக்கு  கொண்டேயிருக்கும்!
ஆற்றுவெள்ளத்தில்  எதிர்நீச்சல்  போடமுடியாது!  நிற்கவும்  முடியாது!  அதன்  போக்கிலேயே
போய்  கரையேறவேண்டியதுதான்!  ஓடிக்கொண்டிருக்கும்  மனதை  இறைவன்  திருவடியில்
ஓடச்  செய்வதே  புத்தி  சாலித்தனம்.  நம்  கண்மணியில்  மனதை  நிறுத்தி  பழக  பழக  ஓடும்
பொல்லாத  மனம்  ஒருநாள்  அடங்கும்.  வேகம்  குறைந்து  இறைவன்  திருவடியாகிய  நம்
கண்மணி  ஒளியில்  நின்று  விடும்!  குருமூலம்  கண்மணியில்  உணர்வை  தீட்சை  பெற்றவன்
பழகி  பழகி  தவம்செய்து  தவம்செய்து  உணர்வை  பெருக்கி  ஒளியை  பெருக்கி  மனதை
இல்லாமலாக்கிவிடுவான்?  எத்துன்பமும்  வாராது  காப்பாற்றப்படுவான்!

                              ஓட  உன்னியே  உறங்குகின்றவன்  ...............  பாடல்  6

               ஓட  எத்தனிக்காமல்  ஓட  நினைத்து  உறங்கிவிட்டவன்  வெற்றிபெற  போவதில்லை .
துன்பம்  அடைவான்.  இங்கு  வள்ளல்பெருமான்  கூறுவது  யாதெனில்,  ஒளி  உள்ளே  ஓட
வேண்டும்!  நாம்  செய்யும்  தவம்  -  ஒளி  உணர்வு  உன்னி  உன்னி  உள்ளே  அகத்திலே  -
அகமுகமாக  ஓட  வேண்டும்!  அங்ஙனம்  உன்னி  அகவழிபாடாக  கண்மணி  ஒளி  உள்ளே
ஓடும்படி  தவம்  செய்பவன்  புறச்செயல்  ஏதுமின்றி  உறங்குகின்றவன்  போல்  காணப்படுவான்!
அகத்தின்  நிலையை  புறத்திலே  மற்றவர்  அறியமாட்டார்!  உறங்குவது  போல்  -  தூங்குவது
போல்  தூங்காமல்  இருப்பது  இதுதான்!?  " தூங்காமல்  தூங்கி  சுகம்  பெறுவது  எக்காலம்"  என
சித்தர்  கூறும்நிலை  இதுவே!  உள்ளே  ஒளி  எப்படி  ஓடும்?  நம்  இரு  கண்மணியினுள்ளும்
இரு  நாடி  சென்று  உள்ளே  அக்னி  கலையில் -  மூன்றாவது  கண்ணான  இடத்தில  இணைகிறது!
இருகண்  உள்நாடிவழியாக  ஒளி  தவத்தால்  பெருகி  நெருப்பாரு  பாயும்!  இரு  நாடிகளே  மயிர்பாலம்
எனப்படும்!  மயிர்பாலம்  வழி  நெருப்பு  ஆறு  பாம்புபோல  செல்லும்!  அதைத்தான்  வெண்சாரை
என்றனர்  சித்தர்  பெருமக்கள்.  தூங்காமல்  தூங்கவெண்சாரை  ஓட  உன்னி  உன்னி  தவம்  செய்ய
குரு  மூலமாக  திருவடியில்  உணர்வை  பெறுவதே  திருவடி  தீட்சை!  உலக  இச்சையை  விட்டு
குருதீட்சை  பெறுக!


               முதல்  இலாமல்  ஊதியம்  பெறவிழையும்  ...........................  பாடல்  7

                முதல்  போடாமல்  வியாபாரம்  செய்ய  முடியாது .  எக்காரியமும்  நடக்காது!  ஒன்றும்
கிட்டாது .  இந்த  உலகத்திலேயே  முதலாவது  எது  இறைவன்  தானே!  ஆதி  என்றும்  கொள்ளலாம்!
எல்லாவற்றுக்கும்  மூலமானது  என்றும்  கொள்ளலாம்!  எது  இல்லாமல்  ஒன்றும்  இல்லையோ?
அதுவே  மூலம்!  முதல்!  ஆதி!  அது  இறைவன்!  எங்குமானவன்  நம்  கண்மணியிலும்  ஒளியாக
இருக்கிறானல்லவா?  இந்த  பிறவிக்கு  முதல்  -  வித்து  -  உயிர்  இறைவனல்லவா?  அந்த
முதலைவைத்துத்தானே  இந்த  பிறப்பு  இறப்பு  எனும்  வியாபாரம்  நடக்கிறது?  இதில்லாபம்
புண்ணியம்!  நஷ்டம்  பாவம்!  நாமெல்லாம்  இந்த  வியாபாரம்  தான்  செய்கிறோம்!  லாபமோ
நஷ்டமோ  -  பாவமோ  புண்ணியமோ  சேர்ந்து  விடுகிறது!  தவிர்க்க  முடியாது ?!

                 முதல்  இல்லாமல்  -  உயிர்  இல்லாமல் ,  உயிரை  வைத்து  வினைசெயல்படாமல்
கவனமாக  பார்த்து  தவம்  செய்து  ஊதியமாக  முக்தியை  பெறுவதே  சாமர்த்தியமாகும்!?
முதலை  வைத்து  -  உயிரை  வைத்து  ஊதியமாக  மீண்டும்  மீண்டும்  வினைகளை
சம்பாதிக்காமல்  செயல்  அற்று  சும்மா  இருப்பதே  சாமர்த்தியமாகும்!  சும்மா  இருந்தால்
தான்  செயல்  நடக்காது !  செயல்  இல்லாது  போனால்தான்  வினை  உருவாகாது!  வினை
உருவாகாது  போனாலே  முக்தி  கிட்டும் !?

                  சிந்தையை  நிறுத்தி  செயலற்று  சும்மா  இருக்கும்  திறத்தை  குருவினடி  பணிந்து
உபதேசம்  தீட்சை  பெற்று  தவம்செய்க  ஊதியம்  பெறுக !?

                                 கல்லை  உந்திவான்  நதி  கடப்பவர் .....................   பாடல்  8

               கல்லை  தெப்பமாக  கொண்டு  கரைசேர  முடியாதல்லவா?  உலகத்தில்
முடியாததெல்லாம்  அருளாளர்கள்  வாழ்வில்  இறையருளால்  நடந்துள்ளது!  திருநாவுக்கரசரை
கல்லில்  கட்டி  கடலில்  ஆழ்த்தினான்  கொடியவன்  ஒருவன்.  நமச்சிவாயமாகிய  கண்மணி
ஒளியைபற்றி  கல்லை  மிதக்கச்  செய்து  தெப்பமாக்கி  கரைசேர்ந்தார்.  இது  சரித்திரம்!
நடந்த  உண்மை?!  இறைவன்  திருவடியை  சரணடைந்தால்  எதுவும்  நடக்கும்!  " எல்லாம்
செயல்கூடும் "  என  வள்ளல்  பெருமான்  கூறுகிறார்?  இங்கே  வள்ளல்பெருமான்  கூறுவது
தியான  அனுபவம்  கல்  என  கூறியது  மனதை  " நெஞ்சக்கன  கல்லும் "  என  அருணகிரிநாதரும்
கூறுகிறார்.   நமது  நெஞ்சம்  அஞ்சு  பூதமும்  ஒருமித்த  இடம்!  ஐம்பொறிகளும்  கூடும்  இடம்!
அஞ்சும்  இணைந்த  இடமே  நெஞ்சு!  அது  நமது  கண்  அல்லவா?  நமது  நெஞ்சமாகிய  கண்ணில்
கல்போல  இருப்பது  நம்  வினையாகிய  திரை!  மும்மலம்  நெஞ்சக்கனகல்லும்  நெகிழ்ந்து  உருகு -
கண்மணி  ஒளியை  நினைந்து  உணர்ந்து  தவம்  செய்யச்  செய்ய  நெகிழ்ச்சி  ஏற்பட்டு  கல்போன்ற
மனமும்  கரைய  ஆரம்பித்து  விடும்!  அந்நிலை  வரவேண்டும்.  வளர  வேண்டும்.  அந்த  கல்லான
மனம்  இருக்கும்  கண்மணியை  உந்தி  உந்தி  உள்முகமாக  வான் -  பரவெளி  நதியாகிய  ஒளிவெள்ளம்
கடந்து  போக  வேண்டும்.  இதுதான்  சாதனை!  தவம்!  தவம்  செய்ய  குருவை  நாடு!

                நெய்யினால்  சுடு  நெருப்பவிப்பவன் .........................  பாடல்   9

                எரிகின்ற  நெருப்பில்  நெய்யை  ஊற்றினால்  அது  மேலும்  கொழுந்துவிட்டெரியும்.
 இதுபுறப்பொருள்.  நெய்யை  ஊற்றி  நெருப்பை  அணைக்க  முடியாது.  நீரை  ஊற்றித்தான்
நெருப்பை  அணைக்க  முடியும்.  ஆனால்  வள்ளல்  பெருமான்கூறும்  ஞானம்  என்ன  என்று
பார்க்கலாமா?!  உலகத்தில்  உள்ளதற்கு  நேர்மாறாக  உள்ளதே  நம்  ஞான  அனுபவம். 
நமகண்மணியில்  உள்ள  ஒளி  இருப்பது  நீரில்!?  நீர்மேல்  நெருப்பாக  நின்றிலங்குகிறான்
இறைவன்!  கண்கருவிழியினுள்  பிராணநீரில்  தான்  கண்மணி  ஒளி  துலங்குகிறது.  சித்தர்
பெருமக்கள்  கூறும்  ஞான  இரகசியம்  இது!  சாதாரண  நெருப்பு  நீரில்  அணைந்துவிடும்.
நம்  கண்மணி  உள்  ஒளி  எல்லாம்  வல்ல  அந்த  பரம்பொருளின்  பேரொளியின்  ஒருதுளி!?
இந்த  கண்மணி  ஒளி  எதாலும்  யாராலும்  அழிக்கமுடியாத  தண்ணொளி!?  சாட்சாத்
இறைவனே!  நம்  கண்மணி  ஒளியை  குருதீட்சை  மூலம்  உணர்ந்து  தவம்  செய்யச்  செய்ய 
ஒளிபெருகும்.  பெருநெருப்பு  ஆறுபோல்  பாயும்!  வெண்சாரைபாம்பு  போல்  உள்ளே  ஊர்ந்து
சென்று  அக்னி  கலையை  அடையும்!  இருகண்  ஒளியான  சூரிய  சந்திரஒளி  அக்னியோடு
சேர்ந்து  மேலும்  பெரு  நெருப்பாகும்!  ஓங்கிவளரும்  நெருப்பு  மேலேறும்  உச்சிக்கு  போகும்.
நம்  சகஸ்ரதளமாகிய  சிரநடு  உச்சியில்  ஒளிவர  வர  அங்கு  சேர்ந்திருக்கும்  அமுதம்
அதுதான்  நெய்சொட்டு  சொட்டாக  நம்  தொண்டையில்  வரும்!  எந்த  நாடி  வழியாக  ஒளி
மேலேறுமோ  அதே  நாடி  வழியாக  நெய்  -  அமுதம்  வழியும்போது  சுடுநெருப்பு  அவிந்து
போகும்.  குளிர்ச்சி  பொருந்திய  நெருப்பாகி  விடும்!  சுடும்  நெருப்பல்ல?  நாம்  நீரிலே  அரிசியை
கொட்டி  பானையில்  வைத்து  அடியிலே  நெருப்பை  மூட்டி  சமைப்பதுபோல,  சூர்யசந்திர  அக்னி
ஆகிய  மூன்று  நெருப்பைகூட்டி  எழுப்பி  உறைந்த  அமுதத்தை  இளகச்செய்து  பருகுவதோடு
சுடுநெருப்பு  சுகநெருப்பாகி  விடும்!?  இதுவே  ஞான  அனுபவம்!  இதுதான்  நெய்யால்  சுடுநெருப்பை
அவிப்பதாகும்!?  இங்கு  நெய்  அமுதம்  அவிப்பது  வேகவைப்பது  அணைப்பதல்ல!  வள்ளல்பெருமான்
இதுபோன்ற  ஞான  இரகசியங்களை  எல்லோரும்  அறிய  அடியேனை  எழுத  வைத்திருக்கிறார் .
அருள்  வள்ளல்  அல்லவா?  எல்லோரும்  அருள்  பெறவேண்டும்!  உணரவேண்டும்!  மரணமிலா 
பெருவாழ்வு  பெறவேண்டும்  என்பதே  அவர்  எண்ணம்!

                குளிர்ச்சி  பொருந்திய  தாமரை  திருவடிகளாகிய  நம்  கண்மணி  ஒளியை  உணர்ந்து 
தவம்  செய்க!  பொன்னடி  -  தங்கஜோதியை  காணலாம்!

                நீர்  சொரிந்தொளி  விளக்கெரிப்பவன்  ........................  பாடல்  10

                தண்ணீர்  ஊற்றி  விளக்கு  எரிக்க  முடியுமா?  திருவருட்பிரகாச  வள்ளலார்  இராமலிங்க
சுவாமிகள்  வாழ்க்கையில்  அந்த  அதிசயமும்  நிகழ்ந்தது!  வடலூர்  அருகில்  கருங்குழி  என்னும்
ஊரில்  வள்ளலார்  இருந்தபோது  ஒருநாள்  இரவு  எண்ணெய்  எனக்கருதி  தண்ணீரை  ஊற்றியே
விளக்கு  எரித்தார்!  பெருமான்  கைபட்ட  நீரில்  ஜோதி  சுடர்விட்டு  பிரகாசித்தது!  மறுநாள் 
வீட்டுக்காரர்  வந்து  கூறிய  பிறகுதான்  விளக்கில்  இருந்ததும்  ஊற்றியதும்  தண்ணீரே  என
அறிந்தார்  வள்ளல்  பெருமான்!  தன்  அடியவர்  -  தன்பிள்ளை  பாட்டெழுத  ஊறுவரக்கூடாதே
என  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர்  இரவு  முழுவதும்  தண்ணீரிலே  விளக்கெறிய  வைத்தார்!
வள்ளல்பெருமான்  மீது  இறைவன்  கொண்ட  அருள்திறத்தை  என்னென்பது?!  அதிசயம்!  அற்புதம்!
திருவருட்பா  எழுத  திருவருளே  துணை  நின்றது!  இது  புறத்தே  நடந்த  நிகழ்ச்சி.  வள்ளல்பெருமான்
நீர்  சொரிந்து  விளக்கெரிப்பது  ஞான  அனுபவம்,  தவம்.  குருவை  பெற்ற  திருவடி  தீட்சைபெற்று 
தவம்  செய்யும்  பொது  -  நினைந்து  -  உணர்ந்து  -  நெகிழும்  போது  நம்  கண்களில்  இருந்து  நீர் -
கண்ணீர்  சொரியும்.  அருவி  எனகொட்டும்.  கண்ணில்  உணர்வு  பெருகப்பெருக  கண்சிவந்து
கோவை  பழம்போலாகி  நீரை  சொரியும்!  அதேசமயம்  கண்மணி  உள்ஒளி  கொஞ்சங்கொஞ்சமாக
பெருகும்!  கண்ணீர்  சொரிய  கண்ஒளி  பெருகும்  தவம்  இதுவே!  வெளியே  நீர்சொரியும்  உள்ளே
ஒளி  பெருகும்.  இதுவே  வள்ளலார்  நமக்கு  உரைக்கும்  ஞானம் .




No comments:

Post a Comment