Friday 30 December 2016

44 செல்வச் சீர்த்தி மாலை


அடியார்க் கெளியர் எனும்முக்கன்
ஐயர் தமக்கும் உலகீன்ற
அம்மை தனக்கும் திருவாய்முத்
தளித்துக் களிக்கும் அருமருந்தே
கடியார் கடப்ப மலர்மலர்ந்த
கருணைப் பொருப்பே கற்பகமே
கண்ணுள் மணியே அன்பர்மனக்
கமலம் விரிக்கும் கதிரொளியே
படியார் வளிவான் தீமுதல்ஐம்
பகுதி யாய பரம்பொருளே
பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப்
பாகே அசுரப் படைமுழுதும்
தடிவாய் என்னச் சுரர்வேண்டத்
தடிந்த வேற்கைத் தனிமுதலே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த
சைவ மணியே சண்முகனே.


சைவத்துக்கும் சக்திக்கும் பிறந்த அருமருந்தே! வலது கண்ணாகிய
சிவமும் இடது கண்ணாகிய சக்தியும் சேர்ந்தால் நமக்கு முன்
ஆறுமுக ஒளிக்கடவுள் - நம் இருகண்ணும் தோன்றும்! கண்மலர்
மலர்வதால் கருணை பிறக்கும். கண்ணுள் மணியே சாதனை செய்பவர்
கண்மறைப்பை விரித்து இல்லாதாக்கும் உள் ஒளியே! ஐம்பூதங்களாலான
பரம்பொருளே! சொல்ல முடியாத அளவு பேரின்பம் தரும் மெய்ஞ்ஞானப்பாகே!  நம் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் அசுரர் அனைவரையும் வேலால்  முக்கண் ஒளியால் கொன்ற தணிகை யமர்ந்த மனதுக்கு இசைந்த நிலையில் அருள்பவனே ஆறுமுக ஒளிக்கடவுளே.

ஓயாதுயிருக்குள் ளொளித் தெவையும் உணர்த்தி தெய்வப்பதியே
முதற்கதியே திருச்செந்தூரிற் றிகழ்மதியே - பாடல் 2


எப்போதும் உயிருள் ஒளியாய் ஒளிர்ந்து எல்லாவற்றையும் நமக்கு
உணர்த்துபவனே நம் கண்மணி ஒளியாகும்! தெய்வப்பதியே - நம்
கண்மணி அதுவே முதற்கதி. நாம் அனுபவத்தில் காண்பது. திருச்செந்தூரில்
திகழ் மதியே - திருவாகிய ஒளிக் கண்கள் சிவந்து ஒளிரும் போது திகழும்.
அதுவே செந்தூர் என்றது. மதியே - சந்திரக்கலை.

 சத்தவுலக சராசரமும் தாளிலொடுக்கும் தனிப்பொருளே - பாடல் 4

ஏழு உலகமும் இந்த பிரபஞ்சமெலாம் திருவடியில் - தாளில் ஒடுங்கி நிற்கின்ற தனிப் பெரும்பொருளே கண்மணியே. ஏழு உலகம் - நம் உடலில் உள்ள ஏழு ஆதாரங்களும் - நம் உடலிலுள்ள 72000 நாடி நரம்புகளும் நம் கண்மணி ஒளியில் அடக்கம். கண்மணி ஒளியே அனைத்துக்கும் ஆதாரம்.

சாதல் பிறத்தல் தவிர்த்தருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் - பாடல் 5


நம் கண்மணி ஒளியை - சத்தியமான நித்திய வஸ்துவை நம் மனம் தணிந்த நிலையில் அமர்ந்து சரணடைந்தால், அங்கேயே நிலை நின்றால் சாதல் பிறத்தல் கிடையாது.பிறப்பு இறப்பு எனும் சூழலில் இருந்து நம்மை மீட்பது திருவடியில் சரணடையும் நிலை ஒன்றே! தேனும் பாலும் பருகினால் தானே இனிக்கும். பருகாமலே உள்ளத்தில் இனிப்பது திருவடி.

ஞான சர்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை
www.vallalyaar.com

No comments:

Post a Comment