Friday, 26 June 2026

58. கொடை மட விண்ணப்பம்

58. கொடை மட விண்ணப்பம்

நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே

அம்பலத்தே நடஞ்செய்மின் போன்ற வேணியனே - நாம் எல்லோரும் அறிய அம்பலமாக நம் கண்மணியில் ஆடிக்கொண்டிருக்கும் ஒளியானவனே! அதிலிருந்து தோன்றும் ஒளிக்கதிர்கள் மின்னலைபோல உள்ளன. அது சிவனின் சடை போல இருக்கிறது! ஒற்றிமேவிய வேதியனே - நம் உடலில் கண்மணியில் ஒன்றியிருக்கும் ஒளியே! வேதங்கள் உரைக்கும் இறைவனே - ஜோதியானவனே - வேதியனே! உன் போன்ற தெய்வம் வேறில்லை. உன் பொன்னான திருவடிகளே எனக்குத்துணை! ஞானத்தை தரும்! இறைவா போற்றுகிறேன் - பணிகிறேன். அருள்புரிக இந்த ஏழைக்கும்!.

மலம் மாற்றுகின்ற விண்ணவனே........................ பாடல் 3

நம் கண்மணியில் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் உள் இருக்கும் ஒளியாகிய பரம்பொருளை பற்றி நாம் தவம் செய்தால், நம் உள்ஒளி பெருகி ஊசிமுனை துவாரத்தை அடைத்துக் கொண்டிருக்கும் திரையை - மும்மலங்களை எரித்து இல்லாமல் செய்து விடும்! நம் கண்மணியின் உள்பகுதியே விண் - ஆகாயம். விண்ணில் ஒளியாக துலங்குபவனை விண்ணவனே என்றார் வள்ளல் பெருமான்!

அன்று நால்வர்க்கும் யோகமுறை அறந்தான்சொன்னவனே - பாடல் - 5

ஆதியில், முதல்குருவாக தட்சிணா மூர்த்தியாக தோன்றிய பரம்பொருளே! சனகாதி முனிவர் நால்வர்க்கும் ஞானோபதேசம் சொல்லாமல் சொன்னவரே! "சும்மா இருக்கும்" திறத்தை உணர்த்தி காட்டியவரே! இதுவே நாம் செய்யவேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய, உணர்ந்துகொள்ள வேண்டிய சிறந்த அறமாகும்!

ஈன்றவனே அன்பர் இன்னுயிர் .................... பாடல் 6

நம் உடலை தந்ததுதான் தாயும் தந்தையும்! உயிரை தருவது இறைவனே! அதனால்தான் வள்ளல் பெருமான் பரம்பொருளை ஈன்றவனே என்கிறார்!

கங்கரனேமதிக் கண்ணியனே நுதல் கண்ணினனே-பாடல் 7

கங்கரன் - கங்கையுடைய கரத்தையுடையவன். கங்கை என்றால் நீர். வற்றாத நீரையுடைய நமது கண்களே சந்திரன் - சூரியன் ஆகும். இறைவனின் திருவடியாகவும் திருக்கரங்களாகவும் விளங்குவதும் இதுவே! அனுபவ நிலையில் ஒளிக்கதிர்களே கரங்கள் எனப்பட்டது! நுதல் கண்ணினனே - கண்ணிலே இருக்கும் பொருள். வேறென்ன? ஒளிதானே! அதுதானே இறைவன்!

சின்மயனே அனல் செங்கையில் ஏந்தியசேவகனே-பாடல் 8

சின்மயனே - சின்முத்திரை குறிக்கும் கண்ணில் இருப்பவன் சின்மயன் - ஒளி! அனல் செங்கையில் ஏந்திய - நாம் தவம் செய்யும்போது நம் கண்வெள்ளை விழி சிவப்பாக மாறிவிடும்.

அந்நிலையே செங்கை சிவந்தகை என்றும், அனல் அப்போது நிரம்பி இருக்கும். அதனால்தான் அனல் ஏந்திய செங்கை எனப்பட்டது. சேவகன் யார் இறைவன்தான்! பரம்பொருளை நாடிடும் பக்தர்க்கு அவன் சேவகன் போல் எல்லாம் செய்கிறானல்லவா? நமக்கு உயிர் தந்த அந்த இறைவனே நமக்கு வேலைக் காரனாகவும் இருந்து நம்மை காத்தருள்கிறான்!

கண்ணியனே பற்பலவாகும் அண்டங்கள் கண்டவனே-பாடல் 9

எண்ணிலடங்கா அண்டங்கள் பலவும் படைத்து அருளிய அந்த இறைவன் - பரம்பொருள் நம் மெய்யிலே - உடலிலே - மெய்ப்பொருளாக நம் கண்மணியிலே ஒளியாக துலங்குகிறான்! கண்ணிலே நின்று ஒளிர்வதால் வள்ளல்பெருமான் கண்ணியனே என்கிறார்!

ஒற்றிக்கோயிலின் மேவும் குருபரனே - பாடல் 10

நமது கண்மணியில் ஒற்றியிருக்கிறான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன்! அதனால் கண்மணி ஒற்றியூர் என்று ஆனது. திருவாகிய இறைவன் ஒற்றியிருப்பதால் திருவொற்றியூர் எனப்பட்டது. திருவொற்றியூராகிய நம் கண்மணியில் கோயில்கொண்டிருக்கும் அந்த ஜோதியே - ஒளியே - இறைவனே - பரம்பொருளே நமது குருபரன் ஆகும்! நமக்கு உயிர்தந்த பரம்பொருள் நமக்கு சேவகனாக இருக்கும் பரமாத்மாதான் நமக்கு குருவாக இருந்து நம்மை வழிநடத்துவான்!! அந்த இறைவனே - நமது உயிரே - நம் ஆத்மாவே நமக்கு உண்மை குரு!?

அந்த மெய்குருவை பெற சற்குரு வள்ளலார் அனுக்கிரகம் தேவை! அருள்புரிய காத்திருக்கிறார் வள்ளலார்! வாருங்கள்!

ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு சற்குருவை பெற்றேயாக வேண்டும்! சற்குரு மூலமாக உபதேசம் தீட்சை பெற்றுத்தான் - சாதனை - தவம் செய்துதான் மெய்குருவை பெறமுடியும்! இது இறைவன் வகுத்த நியதி! சற்குரு வள்ளலார் அருள்தர காத்திருக்கிறார்! வாருங்கள்!

57. மருட்கை விண்ணப்பம்

 

57. மருட்கை விண்ணப்பம்

யாது செய்துகொன் போதுபோ கின்ற
தண்ணெ னேஉம தன்பருக் கடியேன்
கோது செய்யினும் பொறுத்தருள் புரியும்
கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர்
வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன்
வலியி லேன்செயும் வகைஒன்றும் அறியேன்
மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர்
வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே


மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் = பெண்களினால் - கருவிலே உருவாக்கப்படுகின்ற பொலிவான - அழகான தோற்றம் கொண்ட கண்களிலே ஒற்றியிருக்கின்றவரே, வண்கையீர் என் கண்மணி அனையீரே - அருள்மழை பொழியும் கைகளை உடையவரே - அருள் விளங்கும் என் கண்மணியான அருட்பெருஞ்ஜோதி இறைவா! உன் அன்பருக்கும்  அடியேன் எக்குற்றம் புரியினும் பொறுத்து அருள்புரியும் இறைவா!

என்னை அடுத்த குறும்பர் அறியாமையால் வாதம் செய்கின்றனர். மெய்ப்பொருள் அறியாததினால்! என் மனம் தளர்ந்து போகிறது. வேதனைப்படுகின்றேன். இதுபோன்றோரை எதிர்த்து வெற்றி கொள்ளும் வலிமை இல்லையே! என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கின்றேனே இறைவா! என்ன செய்வது? காலம் போகின்றதே அருள்புரிக இறைவா?

காமமாம் கடலில் ஆழ்ந்தால் வஞ்சக கொடிய வாழ்க்கை எனும் திமிங்கலம் நம்மை விழுங்கிவிடும்! அதிலிருந்து தப்ப வேண்டுமென்றால் அருள்பொழியும் நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் அருட்பெருஞ்ஜோதி இறைவனை சரண்புக வேண்டும் - பாடல்-3

ஊழ்வினையை நாம் அறியமாட்டோம். அந்த பாழாய்ப் போனவினை நம்மை மேலும் மேலும் வினைகளிலே ஆழ்த்திவிடும்! வினைகளை போக்க ஒரே வழி, இறைவா என் கண்மணி ஒளியானவரே உன் அருள்பெறுவது ஒன்றுதான்!  - பாடல் 7

இறப்பிலார் தொழும் தேவரீர் பதத்தை - பாடல் 8

இறப்பு இல்லாமல் என்றும் வாழ வேண்டுமானால் - மரணம் இல்லாத பெருவாழ்வு கிடைக்க வேண்டுமானால் நம் கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவன் திருவடியை பற்றவேண்டும். சரணடையவேண்டும். அப்போதுதான் இறைவன் பரிபூரண அருள் கிட்டும்!
எல்லா துயரங்களிலிருந்தும் விடுபடலாம்!

சஞ்சி தந்தரும் காமம்.............................. பாடல் - 9

ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவ புண்ணியமாக அவரவர்க்கே திரும்பி வருகிறது. அவை பிராரத்துவம் - ஆகாமியம் - சஞ்சிதம் என மூன்று வகைப்படும்.

சராசரி மனிதனுக்கு பிராரத்துவம் பிறப்பாகி வருகிறது. பிறந்து வாழ்வதில் ஆகாமியம் நடக்கிறது. அவரவர் வினைக்கேற்ப, நல்லது கெட்டது - பாவ புண்ணியம் கூடவோ குறையவோ செய்கிறது. சராசரி மனிதன் வாழ்வு இதிலேயே முடிந்து போகிறது.

ஆனால் சாமான்யன் ஆன்மீக சாதனை செய்பவன் - சற்குருவை பெற்று, ஞானஉபதேசம் - திருவடி தீட்சை பெற்று தவம் செய்பவன், ஆகாமியம் தவத்தால் உருவாகாது செய்து விடுகிறான்! பிராரத்துவம் குருவருளால் சிறிது சிறிதாக குறைந்து இல்லாது ஆகிவிடும். அதன் பிறகுதான் சஞ்சிதகர்மம் வந்து தாக்கும். குருவை நாடி ஞானதீட்சை பெற்று தவம் செய்பவனுக்குதான் சஞ்சிதகர்மம்! மற்றவர்க்கில்லை! எதற்கு வருகிறது? இல்லாமலாவதற்க்குத்தான்! ஒரு கருமமும் இல்லாமல் ஆனால் தானே பிறப்பு இல்லாமல் போகும்!? இனிமேல் பிறப்பு இல்லாத நிலை என்றால்?! பிறந்த இப்பிறப்பு மரணம் இல்லாது போய் விடுமல்லவா? நமக்கு வேண்டுவது அதுதானே! நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவனை சரணடைந்தால் எல்லா துன்பங்களும் நீங்கப்பெற்று வாழ்வாங்கு வாழலாம்!


-ஞான சற் குரு  சிவசெல்வராஜ் அய்யா 
www.vallalyaar.com