Friday 10 July 2020

75 . வடிவுடை மாணிக்கமாலை

                                            75 .  வடிவுடை  மாணிக்கமாலை 

             சீர்கொண்ட   ஒற்றிப்  பதியுடை  யானிடம்  சேர்ந்தமணி 
             வார்கொண்ட  கொங்கை  வடிவாம்  பிகைதன்  மலரடிக்குத் 
             தார்கொண்ட  செந்தமிழ்ப்  பாமாலை  சாத்தத்  தமியனுக்கே 
             ஏர்கொண்ட  நல்லருள்  ஈயும்  குணாலய  ஏரம்பனே 

             இறைவன்  நமக்கு  அருளிய  சீர்!  நமது  ஒற்றியூர்  நமது  கண்மணியில்  ஒற்றியிருக்கும்  
ஒளி!  அவன்  சிவம்  இருப்பது  வலதுகண்!  அவனோடு  சேர்ந்தமணி  -  இடதுகண்  சக்தி.  அந்த 
சக்தியின்  திருநாமம்  வடிவாம்பிகை!  வாலையின்  மற்றொரு  திருநாமம்!  மற்றொரு  கோயில்!
திருவொற்றியூர்!  வார்கொண்ட  கொங்கை  -  மறைக்கப்பட்ட  கொங்கை  -  கண்ணே  கொங்கை!
கண்மணிதுவாரம்  அடைபட்டதை  வார்கொண்ட  என்று  கூறப்பட்டது.  அந்த  தாயின்  மலரடிக்கு  
பழம்  என  கனிந்த  சுவையான  இனிமையான  செந்தமிழ்  பாமாலை  சார்த்திட,  மேல்  ஏற்றிவிட 
-  ஞானத்தில்  மேலேறிட  அருள்தாரும்  விநாயகனே!  அருள்க!

             வள்ளல்  பெருமான்  " வாலை "  தாயைப்  பற்றி  பாடிய  அருட்பாக்கள்  இவை!  வள்ளல் 
பெருமானுக்கு  அமுதூட்டிய  அன்னை!  வள்ளல்  பெருமான்  அன்னையின்  அருள்பெற்று  -  
வாலையின்  அருள்பெற்று  அப்பனின்  ஆனந்த  நடனம்  கண்டு  அருள்பெற்று  பேரானந்தம் 
எய்தினார்.

             கடலமு  தேசெங்  கரும்பே  
                     அருட்கற்  பகக்கனியே 
             உடல்உயி  ரேஉயிர்க்  குள்உணர் 
                     வேஉணர்  வுள்ஒளியே 
            அடல்விடை  யார்ஒற்றி  யார்இடங் 
                     கொண்ட  அருமருந்தே 
            மடலவிழ்  ஞான  மலரே 
                     வடிவுடை  மாணிக்கமே 

            பாற்கடலில்  கிடைத்ததுதானே  அமுதம்.  நமது  வெள்ளைவிழியே  பாற்கடல்  என்று  
சொல்வர்  ஞானியர்!  கண்ணிலிருந்து  -  தவம்  செய்து  பெறப்படும்  அமுதமே!  தவம்  செய்யும்போது 
வெள்ளைவிழி  சிவப்பாகிவிடும்.  சிவப்பேறிய,  கரும்  -  கண்மணி,  உள்ள  கண்மலர்!  சிவந்த 
கண்ணே!  தவம்  முதிர்ந்த  நிலையில்  கற்பகதருபோல  அருளை  வாரி  வழங்கும்!  நமது  உடலில் 
உள்ள  உயிரே -  கண்மணி  ஒளியே  -  இறைவனே!  உயிருக்குள்  உணர்வாய்  இருப்பவளே!  அந்த 
உணர்வுக்குள்  ஒளியாய்  இருப்பவளே!  வெற்றியை  தரும்  வெள்ளொளியின்  மேல்தோன்றும் 
ஒற்றியார் -  சிவமே!  அந்த  சிவத்தின்  இடப்பாகம்  அமர்ந்த  சக்தியே!  நீயே  கிடைத்தற்கரிய 
அருமருந்து!  பூத்த  -  விரிந்த -  மலர்ந்த  மலரே  அழகிய  ஒளிரும்  கண்ணே -  வடிவுடைமாணிக்கமே!

           கண்ணேஅக்  கண்ணின்  மணியே  மணியில்  கலந்தொளி 
                   செய்விண்ணே .................................    பாடல்  7

           கண்ணே  -  அக்கண்ணின்  மணியே  -  கண்மணியில்  மத்தியில்  ஊசிமுனை  துவாரத்தின் 
உள்  உள்ள  ஒளியே!  அவ்வொளி  அமைந்த  விண்ணே  -  ஆகாயமே!  நம்  கண்மணி  கருவிழிக்குள் 
எந்தபிடிப்புமின்றி  அந்தரத்தில்  ஆகாயத்தில்  விண்ணில்தான்  இருக்கிறது!  பூமி  எப்படி  ஆகாயத்தில் 
இருக்கிறதோ?  அதேபோல்  நம்  கண்மணியும்  உள்ளது!?  அண்டத்தில்  உள்ளவாரே  பிண்டத்திலும்!

           காமம்  படர்நெஞ்  சுடையோர்  கனவினும்  காணப்படா  ............  பாடல்  9

காமமாகிய  பேய்  பிடித்தாட்டும்  மனிதனுக்கு  கனவிலும்  காணக்கிடைக்காது  அம்பிகை 
வடிவம்!  மாயை  -  மகாமாயைதான்  காமமாதிய  துர்க்குணங்களை  வினைப்படிதந்து  நம்மை 
ஆட்டுவிக்கிறாள்!?  காமத்தை  ஆட்சி  செய்பவளே  அம்பிகைதான்!  அதனால்தான்  அவளை 
காமாட்சி  என்றனர்.  காமமில்லாத  மனிதனே  இல்லை!  காமத்திலிருந்து  எப்படி  மீள்வது?
இந்த  உலகத்திலேயே  யாருக்காவது  தாயிடம்  காமம்  வருமா?  எந்த  ஒரு  பெண்ணையும் 
தாயாக  பாருங்கள்!  அம்பிகையின்  வடிவமாக  பாருங்கள்!  அபிராமி  பட்டர்  எல்லா  பெண்ணையும் 
அபிராமியாகவே  பார்த்தார்.  அதனால்  தான்  அமாவாசை  அன்று  நிலவை  காட்டினாள்  அம்பிகை.
மகா  கவி  காளிதாசனும்,  தனக்கு  காளியருள்   கிடைக்க  காரணமான  மனைவியையே  தாய் 
என்று  அழைத்தான்.  மகாகவி  காளிதாசனுக்காகவும்  அமாவாசை  அன்று  நிலவை  காட்டினாள் 
காளித்தாய்!

            ஒரு வயது  பெண்ணையும்  அம்மாதாயே  என்றுதான்  அழைக்கணும்!  16 வயது  
பருவப்பெண்ணையும்  அம்மாதாயே  என்றுதான்  அழைக்கணும்!  எந்தப்பெண்ணையும்  அம்மா 
என்றே  பார்த்தால்,  அம்பிகையின்  அருள்கிட்டும்.  காமத்திலிருந்து  மீளலாம்!  அம்மா  தாயே  
நீயே  சரணம்  என  அம்பிகையின்  பாதத்தில்  சரணடைந்தால்!  அந்த  தாய்  இந்த  பிள்ளையை 
காத்தருள்வாள்!

            இந்த  உடலை  கொடுத்த  தாய்  தானே  நமக்கு  பாலூட்டி  சீராட்டி  வளர்ப்பாள்!  இந்த 
உடலுக்குள்  இருக்கும்  உயிர்  கொடுத்ததாய்  இறைவியே  அமுதூட்டி  உயிர்  வளர்ப்பாள்!?
பின்னர்தான்  பரம்பொருள்!  முக்திகிட்டும்!

            தாயைப்  பணியாதவன்  தறுதலையாவான்!  தாயை  பணிந்தால்!,  தாயைப்போல  நம்மை 
அரவணைப்பவர்  இவ்வுலகில்  வேறு  யார்  உளர்?!  தாயில்லாமல்  நானில்லை!  யாருமில்லை!?
தாயின்  மகத்துவம்,  பெருமை  அறிந்தவனே  ஞானம்பெறுவான்!

           திருஞான  சம்பந்தருக்கு  3  வயதில்  அமுதூட்டிய   தாய்!  வள்ளலாருக்கு  அண்ணி  உருவில் 
வந்து  அமுதூட்டியதாய்!  எல்லா  சித்தரும்  ஞானியரும்  போற்றும்  தாய்  " வாலை "!  இந்தியாவின் 
வடக்கே  காஷ்மீரிலே  வைஷ்ணவி  தேவியாய்  வாலை!  இந்தியாவின்  கிழக்கே  கல்கத்தாவில் 
காளியாய்  வாலை!  இந்தியாவின்  மேற்கே  பம்பாயில்  லட்சுமியாய்  வாலை!  இந்தியாவின் 
தெற்கே  கன்னியாகுமரியில்  கன்னியாகுமரியாய்  வாலை!  எங்கெங்குகாணினும்  சக்தியடா!
தாய்ப்பால்தானே  பிறந்த  குழந்தைக்கு  சிறந்தஉணவு!  இனி  பிறவாமலிருக்க  " வாலை "  தரும் 
அமுதம்  பருகவேண்டும்!  எல்லா  பெண்களையும்  தாயாக  பார்த்து,  வாலையை  பணிந்து 
பக்தியுடன்  தவம்  செய்தால்  கிட்டும்  வாலை  தரிசனம்!  தருவாள்  அமுதம்!  முக்தியை  தர 
சக்தியின்  அருளே  அவசியம்  தேவை!  பிறந்த  குழந்தைக்கு  தேவை  தாய்ப்பால்!  இனி 
பிறவாமலிருக்க  நமக்கு  தேவை  வாலை  அமுதம்!

           எல்லாம்  வல்ல  மகாமாயை,  அகிலாண்ட  கோடி  பிரம்மாண்ட  நாயகி,  எவ்வுயிர்க்கும் 
தாய், ஆதிசக்தி  " வாலை "  எண்ணிலா  ஊர்களில்  கோயில்  கொண்டிருந்தாலும்,  பற்பல 
பெயர்களில்  உருக்கொண்டிருந்தாலும்  வாலை  வாலையாகவே  கோயில்  கொண்ட  
புண்ணியதலம்தான்,  முக்கடலும்  சங்கமிக்கும்  இந்தியாவின்  தென்கோடிமுனையான 
கன்னியாகுமரி!

            அடியேனை  இங்கு  வரவழைத்து  வாழ்வு  தந்து  குருவாக்கி  காட்சி  தந்து  அருள்  புரிந்து 
படியளக்கும்  தாய்  கன்னியாகுமரி  " வாலை "!  இதுவரை  இவ்வுலகில்  எல்லோராலும்  மறைத்து 
இரகசியம்  என்று  சொல்லப்பட்ட  ஞானத்தை  வெட்ட  வெளிச்சமாக்கி  26  நூற்களில்  ஞானரகசியங்களை 
வெளிப்படுத்தவைத்து  வெளியிடவைத்து  என்னை  எங்களை  வாழவைத்துக்  கொண்டிருக்கிறாள் 
" வாலை "!  வாலையின்  பாதத்தில்  சரணடைந்ததால்  புண்ணியம்  பெற்றேன்!  கண்ணியனானேன்!

            அந்த  வாலைத்தாயை  நீங்களும்  காணவேண்டாமா?  வாருங்கள்  கன்னியாகுமரிக்கு!  
வாலை  அருள்பெறலாம்!  வரம்பல  பெறலாம்!  வாழ்வாங்கு  வாழலாம்!

            சித்தருக்கெல்லாம்  சித்தர்!  கல்பகோடி  காலமாக  இருக்கும்  சித்தர்!  காகபுசுண்டர்!  இந்த 
வாலையைப்பற்றி  கூறுவதை  பாருங்கள்!  

            இடப்பாக  மிருந்தவளு  மிவளே  மூலம் 
                    இருவருக்கும்  நடுவான  திவளே  மூலம் 
            தொடக்காக  நின்றவளு  மிவளே  மூலம் 
                    சூட்சமெல்லாங்  கற்றுணர்ந்த  திவளே  மூலம் 
            அடக்காக  அடக்கத்துக்  கிவளே  மூலம் 
                    ஐவருக்குங்  குருமூல  மாதி  மூலம் 
            கடக்கோடி  கற்பமதில்  நின்று  மூலம் 
                    கன்னியிவள்  சிறுவாலை  கன்னிதானே 

            கன்னியாகுமரி  எனப்பெயர்  கொண்ட  கன்னியாகுமரி  ஊரில்  கோயில்கொண்டுள்ள  இவளே 
" வாலை "!  மூலப்பரம்  பொருள்!  தாய்!  சக்தி!  நமக்கு  தவம்  செய்ய  சக்தி  வேண்டாமா?

           தாயை  பணியுங்கள்!  தயவுடன்  வாழுங்கள்!  தவம்  செய்யுங்கள்!  தங்கஜோதி  காணலாம்!
சூரியசந்திர  உதய  அஸ்தமனம்  ஒருசேர  காணும்  உலகிலேயே  உள்ள  ஒரே  இடம்  
கன்னியாகுமரி!

          எல்லா  உலகுந்  தந்த  நின்னை .............  பாடல்  12

          இந்த  பிரபஞ்சத்தையே  தந்தவள்  தாய்!  எவ்வுயிர்க்கும்  தாய்!  வடிவுடைய  மாணிக்கமாக 
அழகான  கண்ணாக  திகழ்கிறாள்!

          வினையாள்  உயிர்மல  நீக்கிமெய் 
                  வீட்டின்  விடுத்திடு  நீ ............... பாடல்  14

          நமது  உயிரை  வினையாக  மலம் -  மும்மலம்  ஆட்டிவைக்கிறது.  அதை  நீக்கி  மெய்வீட்டில் 
சேர்த்திடுவாய்  தாய்!  உயிர்மலம் -  நம்உயிரோடு  சேர்ந்து  இருக்கிறது  மலமாகிய  நம்வினைகள்!

         முத்தேவர்  விண்ணன்  முதல்  தேவர்  சித்தர்முனிவர்  

         மற்றை  எத்தேவரு  நின்னடி  நினைவார் 

         நினைக்கின்றிலர்  தாம்  செத்தேபிறக்கும்  சிறியர் ............ பாடல்   37

         மும்மூர்த்திகள்  இந்திரன்  முதலான  தேவர்கள்  சித்தர்  முனிவர்  மற்றும்  எத்தேவரும்  தாயே 
வாலையே  உன்  திருவடியை  பணிவர்!  உன்னை  நினைக்காதவர்கள்  செத்து  பிறக்கும்  சிரியரே!

         முக்திபெற  வேண்டின்  வாலையருள்  வேண்டும்!  தேவரும்  மூவரும்  சித்தர்  முனிவோரும் 
வணங்குகிறார்கள்  என்றால்  எவ்வளவு  மேலான  நிலை!  அற்ப  பதரான  நாம்  உயர்வு  பெற 
வேண்டுமானால்  வாலையை  பணிந்து  அருள்பெற்று  அமுதம்  அருந்தியே  ஆக  வேண்டும்!
வாலையை  பணியவில்லை  எனில்  முக்தி  கிடையாது!?

         திருநாள்  நினைந்தொழும்  நன்னாள் 
         தொழாமல்  செலுத்திய  நாள்  கருநாள் ................. பாடல்  38

         தாயை -  வாலையை  நினைந்து  வணங்கும்  நாள்தான்  நல்லநாள்  திருநாள்  ஆகும்.  தாயை 
தொழாத  நாள்கருநாள்  துன்பம்தரும்நாள்.

         வாணாள்  அடைவர்  வறுமை 
                 யுறார்நன்  மனைமக்கள்பொன் 
         பூணாள்  இடம்புகழ்  போதம் 
                 பெறுவர்பின்  புன்மைஒன்றும் 
         காணார்நின்  நாமம்  கருதுகின் 
                 றோர்ஒற்றிக்  கண்ணுதல்பால் 
         மாணார்வம்  உற்ற  மயிலே 
                  வடிவுடை   மாணிக்கமே ..................  பாடல்   39

         ஒற்றி  கண்ணுதல்  பால்  மாணார்வம்  உற்றமயிலே  வடிவுடை  மாணிக்கமே  -  நம் 
கண்மணியில்  ஒற்றியிருக்கும்  ஒளியை  சார்ந்து  பேரார்வத்துடன்  தவம்  செய்தால்  நம்  இடது 
கண்  ஒளி  பலவர்ண  ஒளியுடன்  காட்சி  தரும்!  அழகான  ஒளிரும்  கண்ணே  -  இடது  கண்ணே 
தாய்ஸ்தானம்.  அந்த  தாயை  எப்போதும்  கருத்தில்  வைத்து  தவம்  செய்வோர்  வாழ்நாள் 
நீடிக்கும்  நீண்ட  காலம்  வாழ்வர்!  அவர்  வாழ்க்கையில்  வறுமை  தலைகாட்டாது!  நல்லமனைவியும் 
பிள்ளைகளும்  இறைவன்  அருளால்  அமைவர்.  தேவைக்கு  எப்போதும்  பொண்  பணம்  கிட்டும்!
நல்ல  அடியார்கள்  அன்பர்கள்  கிடைப்பர்!  பெரும்  பேரும்  புகழும்  பெறுவர்!  எல்லோராலும்  
போற்றப்படுவார்!  இருக்க  வீடு  அமையும்!  எப்போதும்  போதம் -  உணர்வு  பெற்றே  இருப்பர்.
மெய்யுணர்வு  எப்போதும்  இருக்கும்!  மெய்யுணர்வு  இருக்கும்வரை  ஒரு  துன்பமும்  வராது!

        தாயை  தொழுபவர்களுக்கு  சகல  சம்பத்தும்  கிடைக்கும்.  வாழ்வாங்கு  வாழ்வர்.   

           கதியே  கதிவழி  காட்டுங்கண்ணே ..........................  பாடல்  75

           மனிதனாக  பிறந்த  நாம்  அடையவேண்டிய,  சேரவேண்டிய  நற்கதி  இறைவன்  திருவடியே!
நாம்  பெறவேண்டிய  நல்லகதி  -  முக்தியடைவது  அதற்குமுன்  நாம்  இறைவன்  திருவடியை  
சரணடைய  வேண்டும்.  அந்த  இறைவன்  திருவடியை  -  முக்தி  பேற்றையடைய  வழிகாட்டுவது 
நமது  கண்ணே!  நமது  கண்மணியின்  மத்தியில்  ஊசிமுனையளவு  சிரியதுவாரம்  உள்ளது 
அது  மெல்லிய  சவ்வால்  மூடப்பட்டுள்ளது.  அதன்  உள்ளே  இறைவனே  ஜோதியாக  இருக்கிறான்.
கண்ணே  வழிகாட்டி!  விழிகாட்ட  வினை  தீரும்  பேரின்பம்  கிட்டும்.

           கற்பதும்  கேட்பதும்  எல்லாம்  நின்  அற்புதக்  கஞ்சமலர்ப்  
                   பொற்பதம்  காணும்  பொருட்டு ...................  பாடல்  90

           வேதபுராண  இதிகாசங்கள்  மற்றுள்ள  ஞானநூற்களை  கற்பதும்  அவற்றின்  உபதேசங்களை 
கேட்பதும்  எல்லாம்,  தாயாக  இருந்து  அமுதூட்டும்  உலகன்னை  தூய  பொற்பாதம்  சேரவே!

   

No comments:

Post a Comment