Wednesday 1 July 2020

73 . திருச்சாதனத் தெய்வத்திறம்

                                             73 .  திருச்சாதனத்  தெய்வத்திறம் 

              உடையாய்உன்  அடியவர்க்கும்  அவர்மேல்  பூண்ட 
                         ஒண்மணியாம்  கண்மணிக்கும்  ஓங்கு  சைவ 
              அடையாளம்  என்ன  ஒளிர்  வெண்ணீற்  றுக்கும் 
                         அன்பிலேன்  அஞ்சாமல்  அந்தோ  அந்தோ 
              நடையாய  உடல்முழுதும்  நாவாய்  நின்று  
                         நவில்கின்றேன்  என்பாவி  நாவைச்  சற்றும் 
              இடையாத  கொடுந்தீயால்   சுடினும்  அன்றி 
                         என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய் 

              இறைவா  உன்  அடியாரை  போற்றுகிலேன்!  அடியார்களின்  ஒளிபொருந்திய  
கண்மணியை  கண்டு  உணராதவனாயிருக்கிறேன்!  சைவ  நெறி  தழைத்தோங்க  தவம் 
செய்வோர்  திருவடியில்  ஒளிரும்  வெண்ணீருக்கும்  அன்பிலாதவனாய்  உள்ளேன்!  இறைவன் 
திருவடியாகிய  கண்மணியை  -  அதனுள்  ஒளிரும்  ஒளியை  -  அதிலிருந்து  பொங்கி  பாயும்  -
அருள்பொழியும்  வெண்ணீரும்  அறியாமல்,  தூய  அடியாரை  அறியாத  அன்பில்லாதநான் 
வேறு  என்ன  பேசினாலும்  பயனில்லை!  சைவர்  யார்  எனில்  சதா  காலமும்  கண்ணீர்  மல்க 
சிவத்தை  எண்ணி எண்ணி  பேரானந்தத்தில்  திளைப்பவரே!  

             கண்ணுதலே  நின்அடியார்  தமையும்  நோக்கேன் 
                               கண்மணிமா  லைக்கெனினும்  கனிந்து  நில்லேன் 
             பண்ணுதல்சேர்  திருநீற்றுக்  கோலம்  தன்னைப் 
                               பார்த்தேனும்  அஞ்சுகிலேன்  பயனி  லாமே 
             நண்ணுதல்சேர்  உடம்பெல்லாம்  நாவாய்  நின்று 
                               நவில்கின்றேன்  என்கொடிய  நாவை  அந்தோ 
             எண்ணுதல்சேர்  கொடுந்தீயால்  சுடினும்  அன்றி 
                               என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய் 

            கண்நுதலே  -  கண்மணி  ஒளியே  இறைவா  உன்  அடியார்களை  பார்த்து  பணிந்து 
தொண்டு  செய்யவும்  தெரியவில்லை!  கண்மணிமாலைக்காவது  கனிந்து  நிற்கவும் 
தெரியவில்லை!  அடியேனை  வள்ளல்பெருமான்  1992-ம்  வருடம்  கண்மணிமாலை  எனும் 
நூலை  எழுதி  வெளியிட  வைத்தார்.  ஆன்றோர்களே  " கண்மணிமாலை "  நூலை  படித்து 
ஞான  இரகசியங்களை  உணர்ந்து  உயர்வடையுங்கள்  அடியார்களை  போற்றத்தான்  
தெரியவில்லை,  கண்மணிமாலை  நூலை  படித்தாவது  கடவுளை  உணர்ந்துகொள்ளுங்கள்!
ஞானம்  பெற்றுக்கொள்ளுங்கள்.  நாம்  தவம்  செய்யும்போது  கண்மணியிலிருந்து  நீர்முத்து 
முத்தாக  சொட்டும்.  அருவியென  பாயும்  அது  தொடர்ந்து  பாய்வதால்  மாலை  என்றார்.
வள்ளல்பெருமான்!  பண்  -  நுதல்சேர்  திருநீற்றுக்கோலம்  -  பண்  என்றால்நாதம்.  நம்  
கண்மணி  ஒளியில்  மனதை  ஊன்றி  தவம்  செய்யும்போது  திருஇருக்கும்  -  ஒளி  இருக்கும் 
இடமான  கண்மணி  மத்தியிலிருந்து  நீர்  முத்துமுத்தாக  பாயும்  திருவிலிருந்து  -  மணியிலிருந்து 
வரும்  நீர்  -  திருநீர்  எனப்பட்டது.  கண்களில்  திருநீர்  பாயப்பாய  ஒளிக்காட்சியும்  அதைத் 
தொடர்ந்து  நாதத்தொனி  கேட்கும்!  ஒலிஒளியே  சக்தி  சிவமே  இறைவன்!

             இப்படி  தவம்  செய்யும்  அடியார்களை  போற்றாமல்,  " கண்மணிமாலை "  படித்து  
ஞானமும்  பெறாமல்,  கண்ணீர்  பெருக  நாததொனியை  சதாகாலமும்  கேட்டு  இறைவனை 
எண்ணி  உருகும்  அடியாரின்  தவக்கோலத்தை  பார்த்து  சற்றும்  பயமின்றி  வீண்  பேச்சு 
பேசுகின்றவர்களை,  அவர்கள்  நாவைசுட்டு  பொசுக்கினாலும்  போதாதே  என்கிறார்  வள்ளல்  
பெருமான்!  இறைவன்  புகழ்  பாடுங்கள்!  இறைவனை  உன்னிலே  கண்மணியிலே  ஒளியாக  
இருப்பதை  உணருங்கள்!  ஞானம்பெற  கண்மணி  ஒளியை எண்ணி  தவம்  செய்க!  தவம்செய்யும் 
மெய்யடியார்களை  போற்றுக!  ஞானநூலாம்  " கண்மணி  மாலை "  யை  படித்து  உணர்க!

            வள்ளல்பெருமான்  எமக்களித்த  பெரும்  பேறாக  இப்பாடலை  அடியேன்  கொள்கிறேன்.
150  வருடங்களுக்கு  முன்னரே  " கண்ணமணி  மாலை "  யின்  மகத்துவத்தை  திருவருட்பாவால்  
பாடி  எம்மை  பணிசெய்ய  வைத்து  ஆசீர்வதித்துள்ளார்!  உடனிருந்து  காக்கிறார்!  எப்படி  நன்றி 
சொல்வேன்!  என்னையும்  ஒரு  பொருட்டாக  கருதி,  ஞானம்  பெற  வைத்து,  ஞான  குருவாக்கி,
என்னுள்ளிருந்து,  வரும்  அடியார்க்கு  உபதேசம்  தீட்சை  வழங்கி,  கண்மணிமாலை  தொடங்கி 
இதுவரை  26  ஞான  நூற்கள்  எழுதி  வெளியிட  வைத்து  இப்போது  திருவருட்பாவுக்கும்  
மெய்ஞ்ஞான  உரை  எழுதவைத்த  வள்ளல்  பெருமானின்  பொன்னான  திருவடிகளில்  பணிந்து 
சரணடைவதை  தவிர  பெரும்  பேறுவேறு  உண்டுமா?  வள்ளல்  மலரடி  வாழ்க  வாழ்க  வாழ்க!

            பக்தி  இல்லாமல்  முக்தி  இல்லை  என  வள்ளல்  பெருமானின்  முந்தைய  பாடல்களில் 
கண்டோமல்லவா?  அடியேனையும்  ஆரம்பகாலங்களில்  திருச்செந்தூர்  முருகனை,  கன்னியாகுமரி 
பகவதியம்மனை,  சபரிமலை  ஐயப்பனை,  சுசீந்திரம்  ஆஞ்சநேயரை,  வடிவீஸ்வரம்  சுந்தரேஸ்வரரை 
அழகம்மனை  வணங்கவைத்து  பக்திசெலுத்தி  பாடவைத்து  வழிகாட்டி  ஞானத்துக்கு  விழிகாட்டி 
அழைத்துச்சென்றார்  வள்ளலார்!  இன்னும்  ஏராளமான  புண்ணிய  ஸ்தலங்களுக்கும்  போகவைத்து 
தெய்வத்தை  வணங்க  வைத்து  அருள்  பாலித்தார்  வள்ளல்  பெருமான்!  மேலும்  திருச்சி  ஞானசித்தர் 
ஜோதி  இராமசாமி  தேசிகரை  குருவாக்கி  திருவடி  தீட்சை  தந்தார்  வள்ளலார்!  பின்னர்  பல  
ஞானிகள்  தரிசனம்  கிட்டியது!  சமாதிகொண்ட  பல  மகான்களை  தரிசிக்கவும்  அருள்பெறவும் 
வள்ளல்  கருணையே  காரணமாயிற்று!  அவர்களையும்  போற்றி  வணங்கி  கவிபாட  வைத்தார் 
வள்ளல்  பெருமான்!  அடியேன்  குருதிருச்சி  ஞானசித்தர்  ஜோதி  இராமசாமி  தேசிகர்,  கன்னியாகுமரி 
மாவட்டம்  அறுகம்புல்  சித்தர்,  கன்னியாகுமரி  மாவட்டம்  குருமகாதேவ்  ஆகிய  மூன்று  மகான்களுக்கும் 
முன்னின்று  சமாதி  வைக்க  வள்ளல்  பெருமான்  அருள்  பாலித்தார்!

             அடியேன்  குரு  திருச்சி  ஞான  சித்தர்  சமாதியாகும்  நாளில்  கடைசியாக  அடியேனை  
கூப்பிட்டு  குருபீடத்தை  தந்து  ஆசி  வழங்கினார்.  1980ல்  தீட்சை  பெற்று  12  வருடம்  கழித்து  
1992 - ல்  " கண்மணிமாலை "  நூலை  எழுதி  வெளியிடச்  செய்தார்  வள்ளல்பெருமான்.  அடுத்து 
12  வருடத்தில்  2004ல்  கன்னியாகுமரி  வாலை  சந்நிதியில்  வள்ளல்  பெருமான்  ஆசியால்  குருபீடம் 
பெற்றேன்!  பிறந்ததிலிருந்தே  " வாலை "  கன்னியாகுமரி  பகவதியம்மன்  பொற்பாதம்  பணியும் 
பக்தனாகவேயிருந்தேன்!  வளர்ந்தாள்  தாயாக  " வாலை " !  காத்தாள்  தந்தையாக  " வாலை " !
குருவாகவும்  இருந்து  உபதேசம்  தீட்சை  கொடுக்க  அருள்பாலித்தாள்  " வாலை " !  கண்டேன் 
என்  தாயை  " வாலையை "  கண்களாலேயே!  கன்னியாகுமரியிலேயே!  வள்ளல்பெருமான் 
என்  உள்ளத்திலிருந்து  உரைக்கிறார்  உபதேசம்!  என்  கண்களிலிருந்து  கொடுக்கிறார் 
தீட்சை!  வள்ளல்பெருமான்  கருணையால்  இதுவரை  26  ஞானநூற்கள்  எழுதிவெளியிட்டுள்ளேன்.
இப்போது  திருவருட்பா  மெய்ஞ்ஞான  உரை  எழுதத்தூண்டி  என்னை  மகிமைபடுத்துகிறார் 
வள்ளல்பெருமான்.

            அவர்  திருவடியே  கதி  என  கிடக்கும்  எனக்கு  வந்தவர்களுக்கு  உபதேசம்  தீட்சை 
கொடுப்பது  ஒன்றுதான்  வேலை!  வேறுபணி  இல்லை!  மரணமிலா  பெருவாழ்வைபோதிப்பது!
ஞான  இரகசியங்களை  வெட்ட  வெளிச்சமாக்குவது!  எல்லோரும்  ஞானம்  பெற,  இறைவனை 
அறிய,  உணர  ஞான  நூற்களை  வெளியிடுவது!

           உலகமனைத்தும்  ஒரே  கடவுள்  என்ற  கொள்கையில்,  நாமெல்லாம்  மனிதர்கள் 
என்ற  ஒரே  உணர்வில்  சமாதானமாய்  அன்பாய்  பண்பாய்  வாழவேண்டும்!  இதுவே 
சனாதானதர்மம்!  சன்மார்க்கம்!  எல்லா  ஞானிகளும்  இதற்கு  துணை  நிற்பர்  என்ற 
நம்பிக்கை  எனக்கு  உண்டு!  வாருங்கள்  உலகோரே!  மரணமிலா  பெருவாழ்வில்  
வாழ்ந்திடலாம்!  ஜாதி  மத  இன  பேதமில்லை!  எல்லோரும்  இன்புற்றிருக்க  வழிகாட்டுவதே!
விழிகாட்டி, தூண்டி  உணர்த்துவது  ஒன்று  தான்  எமது  பணி!  சற்குரு  வள்ளலார்  துணை  
என்றும்  உண்டு!

 
 

                       

No comments:

Post a Comment