Saturday 30 May 2020

60. திருவருட் கிரங்கல்

                                                  60. திருவருட்  கிரங்கல்


                          ஒப்பாரும்  இல்லாத  உத்தமனே  ஒற்றியில் என்
                          அப்பாஉன்  பொன்னடிக்கே  அன்பிலேன்  ஆனாலும்
                          தப்பா  தகமலியச்  சஞ்சலத்தால்  ஏங்குகின்ற
                          இப்பா  தகத்தேற்  கிரங்கினால்  ஆகாதோ

                          நம்  கண்மணியான  ஒற்றியூரில்  துலங்கும்  ஒளிக்கு  ஒப்பாக  யாருமே
கிடையாது ?!  உயர்ந்த  உத்தமமான  இறைவனின்  பொன்னடிகளே  இதுவாகும் !
அந்த  அம்மையப்பனான  இறைவனை  சரண்புகுந்தால்  மட்டுமே  நாம்  தப்பிக்கலாம் !
அதை  விடுத்து  எல்லா  படுபாதகங்களையும்  செய்து  மனம்  சஞ்சலமடைந்து  உலகரால்
பாதகன்  கிராதகன்  என  தூற்றப்பட்டால்  அவன்  வாழ்ந்து  என்ன  பயன் ?

                          பற்றும்  செழுந்தமிழால்  பாடுகின்றோர்  செய்தபெருங்குற்றம்
                             குணமாக்க  கொள்ளும்  குணக்கடலே  ............... பாடல்    3

                        செழுந்தமிழால்  பாடுகின்றோர்  அதில்  ஆழ்ந்து  போனால்  இறைவன்
திருவடியை  அறிவர் !  பற்றி  விடுவர் !  ஏனெனில்,  "தமிழ்  அதிவிரைவில்  சுத்த
சிவானுபூதியை  நல்கவல்லது! "  வள்ளல்  பெருமான்  உரைத்த  பொன்னான  வாசகம்
இது!  தமிழில்  புலமை  பெற்று  பாடல்  புனைவோர்  மெய்ப்பொருளை  விரைவில்
உணர  வாய்ப்புண்டு!  தெய்வத்தமிழை  கற்றறிந்தோர்  சற்று  ஆன்மீக  நாட்டம்
கொள்வாரேல்,  தமிழ்  கடலில்  புதைந்து  கிடக்கும் இறைநிலை  அறிவர்! - உணர்வர்!
- உய்வர்!  அகர  உகரமான  எட்டிரண்டை  கண்மணி  ஒளியை  பார்த்து  பேரின்பம்
பெறலாம்!  அவ்வழி  செல்வோர்  செய்பாவமனைத்தும்  பகலவனை  கண்ட  பனிபோல
மறையச்  செய்து  அருள்புரிவான்  பரமாத்மா!

                        எல்லோரும்  பாடல்  புனைய  முடியுமா ?  உள்ளத்தில்,  கருத்தில்  உதிக்கும்
சொற்களை  கோர்க்க  தனித்திறமை  வேண்டும்!  அவனருள்  வேண்டும்!  அப்படிப்பட்டவன்
வாய்  திறந்தால்  வருவது  அனைத்தும்  கவிதையே!  கம்பன்  பாடல்  சொற்கள்  சிலவற்றுக்கு
கலைமகளே  பொருள்  சொன்னாளல்லவா ?  தமிழ்சங்கம்  கண்ட  மதுரைக்கு  சிவனே
வந்து  கவிபுனைந்தாரல்லவா ?  தமிழன்  பெருமையை  தெய்வத்தன்மையை  சொல்லில்
வடிக்க  முடியுமா  என்ன ?!

                         தவம்  செய்வோர்  சிந்தனை,  சொல், செயல்  எல்லாமே  பரம்பொருளை
சுற்றியே  இருப்பதால்  சொல்  அலங்காரமாகிவிடும்!  சிந்தனை  ஒளியாகிய  அறிவு
துலங்கும்!  செயல்  கருணை  மயமாகும்!  பாடுவார்!  ஆடுவார்!  பேரானந்த  பெருவாழ்வு
பெறுவார்!

                        சத்திக்கும்  நாதத்  தலங்கடந்த  தத்துவனே ................. பாடல்     7

                       சத்தியாகிய  தாய்  வாலை  அருள்பெற்றுத்தான்,  அமுதம்  உண்டுதான்
பரமாத்மாவை  அடைய  முடியும்!  அமுதம்  தருபவள்தான்  வாலை!  சித்தர்கள்
அனைவரும்  வாலைத்தாயை  போற்றி  வணங்குகின்றனர்!  உண்மை  உணர்ந்தவர்கள்!
அந்த  வாலை  கோயில்  கொண்ட  தலம்தான்  கன்னியாகுமரி!  கடைக்கோடி  கற்பமதில்
நின்று  தவம்  செய்யும்  குழந்தை,  என்றும்  கன்னி!  அவள்தான்  வாலை!  கன்னியாகுமரி
பகவதியம்மன்!  வாருங்கள்  குமரிக்கு  வாலை  அருள்பெற!  இந்த  வாலை  அருள்  நம்
தியான  அனுபவத்தில்  கிட்டும்.  எப்போது  தெரியுமா ?  நாததலங்கடந்த  பின்னர்தான்!

                      நம்கண்மணி  ஒளியில்  லயித்து  தவம்  செய்கையில்  உணர்வால்  ஒளிபெருகி
நாதத்தொனி  கேட்கும்!  ஒலிஒளி  அனுபவம்  பலபெற்றபின்  வாலை  அருளால்  அமுதம்
கிட்டும்!  அமுதமும்  சாப்பிட்டபின்னரே  அருட்பெருஞ்ஜோதி  தரிசனம்!  "நாதமுடிவில்
நல்லாள்  இருப்பிடம்" என  வாலையை  பற்றி  குறிப்பிடுவர்  சித்தர்  பெருமக்கள்.
வள்ளல்  பெருமானும்  அவ்வாறே  கூறியிருக்கிறார்.

                     கண்ணுள்  மணிபோல்  கருதுகின்ற  நல்லோரை
                     எண்ணும்  கணமும்  விடுத்தேகாத  இன்னமுதே   -   பாடல்   10

                    கண்ணுள்  மணியாக  அதன்  உள்  ஒளியாக  இறைவன்  இருப்பதை  கருதி
தவம்  செய்பவரே  நல்லவர்கள்!  அப்படிப்பட்டவர்களை  விட்டு  ஒரு  கணப்பொழுதும்
பிரியாமல்  இருந்து  அருள்  புரிவான்  இறைவன்!  உயிர்க்கு  உற்ற  துணையவனே!
"இமைப்பொழுதும்  என்நெஞ்சில்  நீங்காதான்தாள்  வாழ்க"  என  மணிவாசகர்
திருவாசக  கூற்றை  நோக்குக!




No comments:

Post a Comment