Tuesday 26 May 2020

திருவருட் பாமாலை 2 - உள் புகு முன்

                                                              திருவருட்பா - மாலை !

                                                              திருவருள் - பாமாலை !

                                                                      உள்  புகு முன் !



                  "திருவருட்பா " எனும்  அதி  உன்னதமான, ஞானகளஞ்சியமான  இந்நூலை
இயற்றியவர்  திருவருட்பிரகாச  வள்ளலார்  இராமலிங்க  சுவாமிகள்  ஆவார்கள் .

                   வள்ளலாரின்  சீடர்  இறுக்கம்  இரத்தின  முதலியார்  அவர்களின்  வற்புறுத்தலின்
காரணமாக  வள்ளல்பெருமான்  திருவருட்பா  நூலை  வெளியிட  இசைந்தார் .
வள்ளல்பெருமானின்  சீடர்தொழுவூர்  வேலாயுத  முதலியார்  பெருமானின்  பாடல்களை
ஆறு  பகுதிகளாக  பிரித்து  ஆறு  திருமுறைகளாக  திருவருட்பா  என  வெளியிட்டார்.

                   முதல்  நான்கு  திருமுறைகள்  வள்ளல்  பெருமான்  காலத்திலேயே 1867 பிப்ரவரி
மாதம்  வெளியிடப்பட்டதது .

                   ஐந்தாம்  திருமுறை  வள்ளல்பெருமான்  ஜோதியாகி  ஆறுவருடம்  கழித்து
1880-ல்  வெளியிடப்பட்டது .

                   வள்ளல்பெருமான்  அருளிய  ஏனைய  பாடல்கள்  அனைத்தும் ஆறாம்  திருமுறையாக
தொகுக்கப்பட்டு  சோடாவதானம்  சுப்பராய  செட்டியார்  அவர்களால்  1885 ஆம்  ஆண்டு
வெளியிடப்பட்டது .

                   திருவருட்பா  ஆறுதிருமுறைகளையும்  ஒரே  நூலாக  பொன்னேரி  சுந்தரம்
அவர்கள்  1892 ஆம்  ஆண்டு  வெளியிட்டார்கள் .

                  வள்ளல் பெருமானை  இதயத்தில்  தாங்கிய  அன்பர்கள்  பலரும்  சிறியதும்
பெரியதுமாக  திருவருட்பா   பாடல்களை  வெளியிட்டனர் . 19-ஆம்  நூற்றாண்டிலும்
20-ஆம்  நூற்றாண்டிலும்  திருவருட்பா  நூல்கள்  ஏராளமாக  வெளிவந்தது .

                                              தமிழக  மக்களை  வெகுவாக  கவர்ந்த  பாடல்கள்  நிரம்பப்  பெற்றது திருவருட்
பிரகாச  வள்ளல் இராமலிங்க  சுவாமிகள் அருளிய  திருவருட்பாவே !

                           அருட்பா  பாடல்களை  பாடிய  பேர்பெற்றவர்கள்  ஏராளம் ! தேனினும்  இனிய
தீந்தமிழ்  பாக்களாலான  திருவருட்பா  சிறியோர்  முதல்  பெரியவர்வரை , சம்சாரிகள்  முதல்
சன்னியாசிவரை  எல்லோரையும்  கவர்ந்தது . பாடி மகிழ்ந்தனர்  பலர்! ஆடிக்களித்தனர்
பலர்!

                           திருவருட்பா எல்லோராலும்  போற்றப்பட  காரணம், மிகமிக  எளிமையாக
மிகமிக  இனிமையாக  ஒவ்வொரு  பாடலும்  அமைந்ததுமட்டுமல்ல!  கருத்தாழமிக்க
சொல்லோவியமாகவும்  திகழ்ந்தது  திருவருட்பா!

                           எத்தனையோ  மகான்களின்  எத்தனையோ  ஞானநூற்கள்  இருப்பினும்
அத்தனையும்  தன்னகத்தே  கொண்டு  எல்லாவற்றிலும்  சிறந்து  விளங்குகிறது
திருவருட்பா!

                           வள்ளல்  பெருமான், பொய்புகலேன் - புனைந்துரையேன் - சத்தியம்
சொல்கின்றேன்  என்று  உலகருக்கு  தயவுடன்  அன்புடன்  பண்புரைக்கின்றார். அது
மட்டுமா ?  "நான்  உரைக்கும்  வார்த்தையெலாம்  நாயகன்  தன்  வார்த்தையன்றோ!"
என்றல்லவா  பறைசாற்றுகின்றார்.

                            திருவருட்பா  பாடினால்  கிட்டும்  பேரறிவு!  உணர்ந்தால்  கிட்டும்  ஞானம்!
எத்தனை  முறை  படித்தாலும்  தெவிட்டாத  தெள்ளமுது  திருவருட்பா!

                            "பாடுவித்தால்  பாடுகின்றேன்" என  இறைவன்  தன்னை  பாட  பணித்ததால்,
வள்ளல்  பெருமானால்  இறைவனுக்கு  சூட்டப்பட்ட  பாமாலைகளே  திருவருட்பா!

                            திருவருட்பா  முழுமையும்  கடினமுயற்ச்சி  செய்து  சென்னை  ஆ. பாலகிருஷ்ணபிள்ளை  அவர்கள்  12  தொகுதிகளாக  வெளியிட்டார். சன்மார்க்க அன்பர்கள்  அகமிக  மகிழ்ந்து  திருவருட்பா  பதிப்புச்  செம்மல்  என்று  அழைத்து
பெருமைபடுத்தினர்.


                                  சென்னை  அருட்பெருஞ்ஜோதி  அச்சகத்தார்  முதல்  5 திருமுறை  ஒரு  தொகுதியாகவும்  6-ஆம்  திருமுறை  ஒரு  தொகுதியாகவும் அழகாக  நேர்த்தியாக
வெளியிட்டு  சன்மார்க்க  சங்கத்தவர்களை  மகிழ்வித்தனர்.

                                 சன்மார்க்கதேசிகன்  தவத்திரு  ஊரன்  அடிகளார்  சன்மார்க்கத்துக்கே
தன்னை  அர்பணித்துக்  கொண்ட   பெரியவர்.வள்ளல்  பெருமானின்  வாழ்க்கை
வரலாற்றை  மிகச்சிறப்பாக  நேர்த்தியாக  தெளிவாக எழுதிவெளியிட்டு  சன்மார்க்க
உலகிற்கு  பெருந்தொண்டாற்றியுள்ளார். வள்ளல்  பெருமானின்  அருட்பாக்களை
காலமுறைப்  படி  அழகாக  தொகுத்து  ஆறு  திருமுறைகளாக  பகுத்து  சிறந்த  உயர்ந்த
பதிப்பாக  இரு  பகுதியாக  வெளியிட்டு  மாபெரும்  சேவை  செய்துள்ளார். நன்கு
ஆராய்ந்து  பதிப்பித்து  அவரின்  தொண்டு  திருவருட்பா  வரலாற்றில்  சன்மார்க்க
உலகமே  சன்மார்க்க  தேசிகன்  தவத்திரு  ஊரன்  அடிகளாருக்கு  நன்றிக்கடன்
பட்டுள்ளது .

                                சிதம்பரம்  அண்ணாமலை  பல்கலை  கழகம்  ஒளவை  துரைசாமி
பிள்ளை  அவர்களை  கொண்டு  திருவருட்பா  முழுமைக்கும்  உரை  எழுத  வைத்த
10 பாகமாக  வெளியிட்டார்கள்.

                                திருவருட்பிரகாச  வள்ளலார்  தெய்வநிலையம்  வடலூரில்  தர்மச்சாலை
சத்திய   ஞான  சபை  நிர்வாகத்தை  நடத்திவருவதோடு  வள்ளல்பெருமானின்  பாடல்கள்
2 தொகுதி  உரைநடை  1 தொகுதி  என  3-ம்  சேர்த்து  மலிவு  விலையில்  மக்களுக்கு
வழங்கி  வருகிறார்கள்.

                                 உலகத்துக்கு  ஞானம்  வழங்கும்  புண்ணியபூமி  இந்தியாவில்  ஞான
ஆரண்யமாம்  தமிழகத்தில்  வந்துதித்த  திருவருட்பிரகாச  வள்ளலார்  இராமலிங்க
சுவாமிகள்  கருணையால்  வாழ்ந்துவரும்  அடியேனை  ஒரு  பொருட்டாக  கருதி,
தொடர்ந்து தாராளமாக  காணிக்கை  தந்து, சபை, வீடுகட்டிதந்து  எம்மை  ஆதரிக்கும்
நெய்வேலி  தாய்  ஜோதி  ஸ்ரீ  Er . நகுலன்  அவர்கள்  அன்பால்  இந்நூல்  வெளியாகிறது.
ஞானம்  இங்கே  பரசியமாகிறது!

                                திருவருட்  பிரகாச  வள்ளல்  பெருமான்  உள்ளத்தில்  இருந்து  உவகையுடன்
உரைப்பார்  எனக்கருதி  அடியேன்  மெய்ஞான  உரை  எழுத  சம்மதித்தேன். அடியேனை
குருவாக்கி, மெய்ப்பொருள்  விளக்கம்  கொடுத்து  ஞான  சரியையில்  கூறியபடி  திருவடி
தீட்சை  கொடுத்து  நாடிவரும்  எல்லோரையும்  மரணமிலா  பெருவாழ்வு  பெற  அழைத்துச்
செல்கிறார்  வள்ளலார்!

                                1980 - லிருந்து  28 வருடமாக  அடியேனை  வழிநடத்தி  வாழ்விக்கும்  வள்ளல்
இராமலிங்கரை  பணிவதை  தவிர  எமக்கு  வேறு  வேலையேயில்லை! அவர்  இட்ட
பணியை  செய்வதே  எம்கடன்!

 
         "யாதும்   ஊரே  யாவரும்  கேளீர் "

         மரணமிலா  பெருவாழ்வு  பெற  முதலில்  உபதேசம்!  அடுத்து  தவம்  செய்யும்  முறை  உணர்த்தி  திருவடி தீட்சை!   மெய்ப்பொருளை  அறிந்து  உணர்ந்து  எல்லோரும்  இன்புற்று
வாழ  வழி  காட்டுகிறார் வள்ளலார். அடியேன்  ஒரு  கருவியாகவே  செயல்படுகிறேன்.

       "ஆட்டுவிக்கிறார்  ஆடுகின்றேன் "
  அருட்பா  படித்தால்  அறிவில்  தெளிவு!
  அருட்பா  படித்தால்  அறியலாம்  ஆண்டவனை!
  அருட்பா  படித்தால்  அமைதி  கிட்டும்!
  அருட்பா  படித்தால்   ஆனந்தம்  பெறலாம்!
  அருட்பா  படித்தால்  ஆறறிவு  துலங்கும்!
  அருட்பா  படித்து  உணர்ந்தால்  ஞானி!
  படியுங்கள்  -  உணருங்கள்  -  தவம்  செய்யுங்கள்!
  கிட்டும்  மரணமிலா  பெருவாழ்வு!
                                                                       
                                                                                     என்றும்  உண்மையுள்ள
                                                                                                      சிவ  செல்வராஜ்





                                                             





       






                                                         
                                                                                                         

No comments:

Post a Comment